மின்னொழுக்கு..!

 

இறைவன் மிகப்பெரியவன். இயற்கையைப் படைத்தவன். அதனை ஆளுபவன், தேவையான சமயத்தில் அதனை அழிப்பவன். அதற்குள்ளேயே நாமும்,  உயிருள்ள மற்றும் உயிரற்ற ஏனைய பிரபஞ்சப்பொருட்கள் அனைத்தும் அடங்குகின்றன..! கண்டிப்பாகப் படைத்தவனையும், படைக்கப்பட்டவைகளையும் நாம் மதிக்க வேண்டும் என்பதில் எந்தத்தவறும் இல்லை. ஆனால் படைக்கப்பட்டவைகளில் ஒன்று, நாம் தான் இறைவனின் முகவர்கள் என்று சொல்லும் போது, ஆரம்பத்தில் சரியாகவும், போக போக தவறு இருப்பதாகவும், இறுதியில் அது பெரு ஏமாற்றமாகவும் இருக்கும்போது தான் புரிகின்றது, நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கின்றோம் என்பது..!

இறைவன், இயற்கை, நாம் இந்த மூன்றையும்  முற்றாக இணைப்பது காற்றுத்தான். அதனூடாக எந்த அன்பையும், அருளையும், ஆற்றலையும் கடத்த முடியும்..!

இந்தக்கொள்கையின் அடிப்படையில், நானே, எனக்கு இறைவனது முகவராக இருக்கின்றேன். என்னையும், தொடர்ந்து அதனுடன் இணைத்துக்கொண்டே இருக்கின்றேன். அதுவரையே நானும் உயிருடன் இருப்பேன்..! அது வரைக்கும், இறைவனும் இயற்கையும் எனக்குத் தேவையானதை வழங்கியே வரும்..!

 

அதற்குரிய நன்றியை, நான் தெரிவிக்கும் வழிமுறை,  எனது சுவாமியறையில் இருக்கும் படங்களுக்கு பூக்கள் வைப்பதும், அங்கே விளக்கு ஏற்றுவதும், மணியடிப்பதும் தான்..! யாரும் தவறாக நினைக்கக்கூடாது, ஜயர் மாத்திரம் தான் மணியடிக்க வேண்டும் என்று..!  ஜஸ் கிறீம் விற்பவனும், தும்புமுட்டாஸ் விற்பவனும் மணியடித்ததை நான் முன்பு பார்த்துள்ளேன். நாமும் விரும்பினால், ஜயர் போல், தும்புமுட்டாஸ்காரன் போல், வழிபடலாம். நாம் இறைவனை விரும்புவது அல்ல விடயம், இறைவன், எம்மை விரும்பக்கூடியவாறு  நாம் நடக்க வேண்டும் என்பதே அதிமுக்கியம்..!

எனது அலுவலக உதவியாளர் ஒருவர் கலைப்பொருட்கள் செய்வதற்குரிய ஆற்றல் பெற்றவர். அலுவலகத் தட்டிலிலுள்ள சுவாமிப்படங்களுக்கு மலர்கள் வைப்பதற்காகப் பல  தட்டுக்கள் செய்து தந்தார். அதற்குரிய நியாயமான கூலியைக் கொடுத்ததுடன், எனக்கும் செய்து தரும்படி சொல்ல, இருவாரங்களில் செய்து தந்தார். அதற்கான நியாயமான கூலியைக்கொடுத்துவிட்டு, எனது வீட்டில் உள்ள, இரு சுவாமியறைகளிலும் வைத்து, அதன் மேல் மலர்கள் வைத்து, வழிபட முனைந்தேன்.

வழமையாக, மின்சார மின்னும் விளக்கு வயர்கள் படங்களைச் சுற்றியிருக்கும். மலர்கள் வைக்கும்போது அவை ஒளிர, ஒரு நிறைவு கிடைக்கும்.  இம்முறை புதிய மலர்தட்டுக்களை வைப்பதற்கு அந்த வயர்களை நகர்த்த, ஒரு முனை கழன்று மின்சாரத்தை எனக்கு  கடத்தியது..! திடீரென நடந்த இந்த நிகழ்வால், சற்றுக்குழம்பிப் பின்னர், சுதாகரித்துக்கொண்டு, அந்த மின்வயரைக்கழற்றி வைத்துவிட்டு, தொடர்ந்து மலர்களை வைத்து வணங்கிவிட்டு, வெளியே வரும்போது தான் உணர்ந்தேன். வழமையாக நான் திருகோணமலையில், இருக்கும் போது எனது சின்ன மகளே இந்தக்கடமைகளைச் செய்வது வழக்கம். தவறுதலாக ஏதாவது நடந்திருந்தால், வாழ்வே வெறுத்திருக்கும். நல்லவேளை, இறைவன் எனக்கு ஒரு மின்னதிர்ச்சியைக் கொடுத்து, குடும்பத்திற்கு வரும் ஆபத்தை தவிர்த்துள்ளார்..! அதற்கு  இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லி, இந்தக்கிழமை நான் வரக்கூடாது என நினைத்து இருந்தேன். இரு திருமணங்கள் இருந்ததால் வரவேண்டிய சூழல் வந்தது. இப்போது தான் புரிகின்றது, அதைவிடப்பெரிய கடமை வீட்டிலேயே இருந்துள்ளது..!

எமது வாழ்வில், எங்கும் உயிர் பறிக்கும் பொறிகள் இருக்கின்றன..! இறைவனும், இயற்கையும் ஒத்துழைத்தால் மட்டுமே, நாம் எமது கடமைகளை செய்யச் முடியும்.  நாம் தான் அந்தக்கடமைகளைச் செய்ய வேண்டும் என்றால், இவ்வாறான பொறிகள் செயற்படாமல் போகலாம்..!

இம்முறை நான் தப்பியதும், அவ்வாறான ஒரு காரணத்திற்காகத் தான் என்பது நன்றாகப் புரிகின்றது..!

“எது நடக்க வேண்டுமோ அது நிச்சயம் நடந்தேயாகும். எது நடக்கக்கூடாதோ அது நிச்சயம் நடக்கவே நடக்காது..!”

புரிந்தால் வாழ்க்கை என்றும் இலகுவானதே..!

 

ஆ.கெ.கோகிலன்

24-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!