பரீட்சை பணிப்பாளர் நேர்முகத்தேர்வு..!

 



கடந்த பல வாரங்களாக திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு காரில் போகவேண்டிய தேவை வந்தது. அதே நேரம் பரீட்சை பணிப்பாளர்  தெரிவுக்கான நேர்முகத்தேர்விற்குரிய ஆவணங்களையும் சான்றிதழ்களையும் ஒரு  பாக்கில் போட்டு, அங்கும் இங்குமாகக் காவிக்கொண்டு திரிந்தேன்..!  ஆனால் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வரவில்லை. அதே நேரம் அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான சந்தர்ப்பத்தில் அழைப்பதாகவும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார். அதன் பின்னர் நான் காரில் போகவில்லை. அந்த பாக்கையும் கொண்டுசெல்லவில்லை.

ஆனால் க.பொ.த உயர் தரப்பரீட்சை முடிவுகள் வந்த நேரம், மகளிடம் இருந்து, கவலையான செய்தி வரும்போது, இந்தச்செய்தியும் வாட்சப்பில் வந்தது..! “மகள் பரீட்சையில் தோல்வி..! பரீட்சைப் பணிப்பாளர் பதவிக்கான தேர்வு..!”

ஒரே குழப்பம்..! ஒன்றும் சிந்திக்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும், வழமைபோல் நமது முயற்சியைச் செய்வோம், பலன் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி ஏற்போம் என்ற மனநிலையில் செயல்களை ஆற்றினேன்.

தனியாகத் திருகோணமலையில் இருந்ததால்,  மகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. எப்படியும் மனத்தை மாற்ற முடியவில்லை..!  பாடங்களைப் படித்தால் என்ன..? உடற்பயிற்சி செய்தால் என்ன..? நல்ல சாப்பாட்டை சாப்பிட்டால் என்ன..? வெளியே உறவுகளிடம் போய் வந்தால் என்ன..? திரும்பத் திரும்ப பாஸ் பண்ணமுடிய நிலைக்கு மகள் எப்படிப்போனாள்..? என்ற சிந்தனையே முடிவாக வந்து நின்றது.

முதலில், அவளுக்குத் துணையாக இருக்கவும், அவளைச்சங்கடப்படுத்தாமல் கதைக்கவும் முயற்சி செய்தேன்.

இடை இடையே கண்கள் வேர்ப்பதைத் தடுக்க முடியவில்லை. கடந்து செல்ல, பலமாகப் போராடினேன்.

நாட்கள் நகர்ந்தன..! நேர்முகத்தேர்வுக்குப் போகவேண்டிய நாளுக்கு முதல் நாள், யாழ்ப்பாணம் போய், மகளுடன் சிலமணி நேரங்களைச் செலவிட்டு, அவளை அசுவாசப்படுத்திய பின்னர், குடும்பத்தினருடன் கதைத்துவிட்டு, கொழும்புப் பயணத்திற்கான தயார்படுத்தலைச் செய்து முடித்தேன்.

அடுத்த நாளும், தவறவிட்ட அனைத்துத் தயார்படுத்தல்களையும் செய்து, அன்று மாலை 7.00 மணிக்கு குளு குளு வண்டியில் கொழும்பு சென்று, காலை 3.30 மணியளவில் தம்பி வீட்டில் தங்கி, உணவு உண்டு உறங்கிப் பின்னர் வெளிக்கிட்டு சரியாகக் காலை10.30 மணிக்குச் சாதாரண  இரு பஸ்கள் உதவியுடன் எனது தலைமையகத்தைக் காலை 11.30 மணியளவில் அடைந்தேன். 12.00 மணிக்குத் தொடங்க வேண்டிய எனது நேர்முகத்தேர்வு எப்ப நடக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியாத, நேர முகாமையற்ற நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருந்தது..! மதியச் சாப்பாடு சாப்பிட அந்நேரம் மனம் வரவில்லை. எப்படியும் மாலை 1.00  மணி அல்லது 1.30 இற்குள் முடித்துவிடுவார்கள் என நினைத்து, பொறுத்து இருந்தேன். பலர், சிரேஷ்ட விரிவுரையாளர் நேர்முகத்தேர்வுக்கு வந்து காத்திருந்தார்கள்..! அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தாலும், நேரம் போவது வேதனையாக இருந்தது..! நேர்முகத்தேர்வை நடாத்தும் எமது அதிகாரிகள் உள்ளே ஆற அமர உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள்..! என்னுடன் போட்டி போட ஒருவர் வந்திருந்தார்..! முதலில் பலரை எதிர்பார்த்தேன்..! இறுதியில் ஒருவரே வந்தார்..! அவர் என்னை விட, வயதிலும் அனுபவத்திலும் இளையவர். ஆனால் தலைமையகத் தொடர்புகள் அதிகம் கொண்ட, சகோதர மொழி பேசுகின்ற, கொழும்பிற்கு கிட்டவாக இருப்பவர்..!

ஒரு கட்டத்தில் அவர், தன்னுடன் வந்து, தனது உணவை பங்கிடக்கேட்டார்..! நான் பரவாயில்லை என்று சொல்லி, அவரது குணத்திற்கு நன்றியும் சொல்லி அனுப்பிவிட்டு, சிற்றூண்டிச்சாலை சென்று சாப்பிட்டு வருவோமா என நினைத்தேன். இருந்தாலும் இடையில் கூப்பிட்டால் சிக்கல், என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தேன். அவரும் சாப்பிட்டு, எனக்கு அருகில் அமர்ந்தார். மேலும் சில நிமிடங்கள் கடக்க, எனக்குப் பொறுமை தளர்ந்தது. ஏன் இப்படிச் செய்கின்றார்கள்..?  அதேநேரம், எமது நேர்முகத்தேர்வுக்காக ஒன்லைன் ஏற்பாடுகளும் நடந்தன..! புரியவில்லை. ஒருவழியாக மாலை 2.15இற்குக் கிட்ட, இளையவரை அழைத்தார்கள்..! நான் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்து, நித்திரை கூட இல்லாமல் போதாததற்கு மதிய உணவைக்கூட எடுக்க முடியாமல் காத்திருக்க, மற்றவர் உள்ளே சென்றார்..! நேரம் போனது..மேலும் எனது பொறுமை தளரத்தொடங்கியது. 55 வயதிற்கு கிட்ட இருக்கும், எனக்கு மதிய உணவும் இல்லை என்றால் பதட்டமும் மயக்கமும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வயதிற்கு ஏற்ப, உடலில் கோளாறுகளும் இருக்கும் தானே..!

ஒருவாறு  2.30 மணிக்குக் கிட்டவாக  வெளியே வந்தார். அதன் பின்னரும் என்னைக்கூப்பிடவில்லை. அண்மையில் திருகோணமலையில் நடந்த சில சம்பவங்கள், அவருக்கு சிக்கலைக் கொடுத்து இருக்கலாம். என்னுடனும் சற்றுத் தள்ளியே பணிப்பாளர் நாயகம் நின்றார்..! எங்கே தவறு உள்ளது என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடியவில்லை..!

இன்னும் கூப்பிடவில்லையே என்ற எண்ணம், கோபமாக மாறத்தொடங்கியது..! அந்நேரம் ஏறக்குறைய 2.45மணியளவில் கூப்பிட்டார்கள். பசி, நித்திரைக்களைப்பு, சரியாகத் திட்டமிடாமை மற்றும் நியாயமின்மை போன்ற காரணங்களால் மேலும் வெறுப்புற்றே உள்ளே சென்றேன். என்ன கேட்டாலும், அதற்கு மேலாகக் கதைத்து அவர்களைச்  சங்கடப்படுத்தினேன்.  எனது அனுபவங்கள், படிப்புக்கள், சிறிய கற்கைகள், மொழி தொடர்பான கற்கைகள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள், எனது புத்தகம் தொடர்பான தகவல்கள் மற்றும் பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானிய அங்கீகாரம் என்பன தொடர்பாகவும் கேட்டார்கள். அனைத்திற்கும் என்னால் இயன்ற சிறப்பான பதில்களை வழங்கினேன்.

எனது “சிவகோவசி” என்ற சொல்லின் கண்டுபிடிப்புப்பற்றிக் கேட்டார்கள்..! அத்துடன் புத்தகம் எழுதுவதற்கு உதவிய தமிழ் புத்தகங்கள் பற்றிக்கேட்டார்கள்.  அரசமொழிகள் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கலைச்சொற்கள், இணையத்தேடல், புத்தகத்தேடல் மற்றும் அறிஞர்களின் உதவி எனப்பல விடயங்களூடாக இது சாத்தியப்பட்டது, எனப்பதிலளித்தேன்.

கணிதப்பட்டம், கல்வியல் பட்டபின் டிப்ளோமா மற்றும்  கணினி விஞ்ஞான முதுமாணிப்பட்டம் என்பது பற்றிக் குழப்பி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்..!

கணினிக்கும், கணிதத்திற்கும் உள்ள தொடர்பைச் சொல்லி, சார்ள்ஸ் பாபேஜ் என்ற கணித அறிஞரையும், கணினியின் தந்தையாகிய அவரது அறிவைப்பற்றியும் சொன்னேன்..! புரிந்துகொண்டார்கள்..!

துறைத்தலைவர் பதவிகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டார்கள். பல துறைத்தலைவராக இருக்க வாய்ப்பு வந்ததைச் சொன்னேன்.

பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் குழுக்களுக்குப் பொறுப்பாளராகப் பல முறை இருந்துள்ளேன். அது பற்றியும், சொன்னேன்.

மேலும் எனது போட்டியாளர், எனது குழுவில் இருந்து வேலைசெய்தவர் என்பதையும் சொன்னேன்.

பரீட்சைத்திணைக்களத்தை மேம்படுத்த என்ன செய்வீர் எனக்கேட்க மீள்கட்டமைப்புச் செய்வேன் என்பதுடன், நவீன வசதிகளை இணைப்பேன் என்பதையும், சில பரீட்சைகளை இணைய உதவியுடன் நடாத்த முனைவேன் என்பதையும் சொல்லி, சுய முகாமை, நேரமுகாமை மற்றும் மதியச்சாப்பாடே எடுக்க முடியாத வகையில் சரியாகத் திட்டமிடாத நேர்முகத்தேர்வு தொடர்பாகச் சொல்ல, அந்தக்குழுவிலுள்ள நிர்வாகப் பணிப்பாளர் தவறுக்கு மன்னிக்கக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக நன்றிசொல்லி, சற்று மெல்லிய புன்முறுவலுடன் வெளியே வந்தேன். கடுமையான முகத்துடன் உள்ளே சென்றாலும், எனது பதில்கள் அவர்களைத் திருப்திப்படுத்தியது என்பதை  அறிந்துகொண்டேன்.

எனது கடமை, நேர்முகத்தேர்வை சரியாக முகங்கொடுப்பது மாத்திரமே..! மிகுதி, எது வந்தாலும் நான் ஏற்கத் தயாராகவே இருப்பேன்.

இறுதியாக, அவர்கள் கேட்டதற்கு இணங்க, இந்தப் பதவியை எனது அறிவுக்கு உட்பட்ட வகையில் சிறப்பாகச் செய்வேன் என்ற உறுதியையும் கொடுத்தேன்.

வெளியே வந்து, காத்து இருந்தவர்ளை வாழ்த்தி, பின்னர் சிற்றூண்டிச்சாலையில் சில பரோட்டாக்களை உண்டு, அந்தக்கடும் பசியைப் போக்கினேன்.

வரும்போது, பொரளையில் இருக்கும் மாமாவையும், அவரது உறவினர்களையும்  பார்த்து, நடந்ததைச் சொல்லி, அவரது அறிவுரைகளையும் காதில் வாங்கியபடி, தம்பி வீடுவந்து, இரவு உணவை உண்டு, காலை வந்த அதே குளு குளு வண்டியில் ஏறி, அடுத்தநாள் காலை 4.00 மணி அளவில் வீடு வந்தேன்.

ஒரு நிம்மதிப்பெருமூச்சு வெளிவந்தது..!

 

ஆ.கெ.கோகிலன்

06-06-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!