முதலாவது நிகழ்ச்சித் திட்டம்..!

 


 


எமது திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் 25 வருடப்பூர்த்தியை முன்னிட்டு, 25 வேறுபட்ட மக்களுக்கு பலன் தரக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை எமது மாணவர்கள் ஊடாகவும், நிறுவனத்துடன் தொடர்பட்ட அல்லது விரும்புகின்ற மக்களின் உதவியுடனும் இந்தச் செயற்றிட்டங்களை முன்னெடுக்க விரும்புகின்றோம். அந்த வகையில் இன்று உட்துறைமுக வீதியிலுள்ள கடற்கரையை கணக்கியல் துறை மாணவர்களின் உதவியுடன் துப்பரவு செய்தோம்..!

குறிப்பாக உக்க முடியாத பொருட்களான சொப்பிங் பாக், ரெஜிபோம், பிளாஸ்டிக் போத்தல்கள், சாராயப்போத்தல்கள், நைலோன் கயிறுகள், நைலோன் துணிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிசுங்கான ஓடுகள்  போன்ற பல வகையான பொருட்கள் கடற்கரையில் சிதறிக்கிடக்கின்றன.  இந்தப்பொருட்களை அந்த இடத்தில் போட்டவர்களும் மக்கள் தான்..!

இப்போது கணக்கியல் துறை என்ற ரீதியில் இணைந்து அவற்றைப் பொறுக்கி எடுத்து, போரபாக்குகளில் (உரப்பைகள்) நிரப்பி, நகரசபை ட்ராக்டரில் ஏற்றி தரம் பிரிக்கும் பகுதிக்கு அனுப்ப வேண்டும்.  

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நான் 4.30 இற்கே ஆயத்தமானேன்..! சரியாக எனது நிறுவனத்தில் இருந்து காலை 5.30 மணியளவில் வெளிக்கிட்டு, அங்கு சேர  காலை 5.45 இருக்கும். ஒன்று இரண்டு பிள்ளைகள் மாத்திரம் வந்து இருந்தார்கள்..! ஏறக்குறைய காலை 6.15 இற்கு எல்லோரிடனும் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, முதலாவது பையை  நானே எடுத்து, குப்பைகளைப் பொறுக்கிப்போட்டேன். என்னுடன் மேலும் எனது நிறுவன விரிவுரையாளர்களும், மாணவர்களும்  தனித்தனியாகப் பைகளை எடுத்து, என்னைப்போல்  குப்பைகளைப் பொறுக்கி கடற்கரையை சுத்தப்படுத்தினார்கள்..! ஏறக்குறைய ஒரு பையை நான் நிரப்பிய பின்னர் அங்கிருந்து வெளிக்கிட்டு,  ஏனைய மாணவர்களையும் பார்த்து, அவர்களையும் படமெடுத்துவிட்டு, அலுவலகத்திற்கு வந்து, மீண்டும் குளித்து வெளிக்கிட்டு இன்றைய நாள் வேலைகளைச் செய்யத் தயாரானேன்.

சுத்தம் செய்த கடற்கரை, எமது பழைய உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் அமைந்த இடத்தின் முன்னாலுள்ள  கடற்கரை என்பதால், ஏதோ ஒரு தொடர்பு புலப்பட்டது..! அந்தக்கடற்கரையால் பல முறை நான்,  முன்பு இருந்த உவர்மலை வீட்டிற்குச் சென்றுள்ளேன்.

உண்மையில், அந்தக்கடல் வந்து எமது நிறுவனத்தைத் தாக்கியதால் தான், நாம் இப்ப இருக்கின்ற புதிய கட்டிடத்திற்கு வரமுடிந்தது..! அதற்கு, அந்தக் கடல் அன்னைக்கும், சுனாமிக்கும் தான் எமது நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் துவரங்காட்டு இடம்பெயர்வு நடந்திருக்குமா என்பதே கேள்விக்குறி தான்.

அந்த வகையில், எமது முதலாவது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சி. அதற்கு ஒத்துழைத்த அனைத்து கணக்கியல் துறை மாணவர்கள், பகுதித்தலைவர், ஏனைய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, திருகோணமலை நகரசபைக்கும்  இந்த இடத்தை தந்தமைக்காகவும், கையுறைகள்,  உரப்பைகள் மற்றும் ட்ரக்டர் வசதி என்பவற்றை ஏற்படுத்தித் தந்தமைக்காகவும் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனப்பணிப்பாளர் என்ற வகையில் எனது நன்றியை இந்தப் பக்கத்தில் தெரிவிக்கின்றேன்.

ஊர் கூடி விழா எடுத்தால் தான் அது திருவிழா..!

அதேபோல்  எமது அனைத்து மாணவர்களும், எமது நிறுவனத்துடன் தொடர்புபட்ட ஏனைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் தான் அது உண்மையான வெள்ளிவிழா..!

இறைவனின் ஆசியும் இயற்கையின் அனுசரணையும்  இருந்தால், இலக்குகள் இலகுவாகும்.

 

ஆ.கெ.கோகிலன்

03-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!