அமைச்சின் செயலாளர் கூட்டம்..!

 


சில விடயங்கள் சில காலத்தில் வரும்போது எரிச்சல் ஏற்படும்..! நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாட்டில் யார் அடுத்த ஜனாதிபதி என்ற பரபரப்பான இந்தச்சூழலில் எமது தலைமையகம் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது..! அது எமது கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டம்..! அத்துடன் நமது பாதீடுகள் தொடர்பாகவும் விளக்கங்கள் கோரப்படலாம் என்ற ஒரு கதையிருந்தது. உண்மையில் கூட்டத்தில் என்ன கதைக்கப்போகின்றார்கள் என்ற தெளிவு ஒருவருக்கும் ஏற்படவில்லை. நான் முதலே, போவதா அல்லது விடுவதா என்ற இரட்டை மனநிலையில் இருந்தேன். சிலவேளைகளில் உடலில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் போவதில்லை என்றும், உடல் ஆரோக்கியமாக இருந்தால் போவது என்றும் தீர்மானித்து இருந்தேன். தேவையில்லாமல் பொய்கள் சொல்லக்கூடாது என்பதை இயன்றவரை கடைப்பிடிக்க நினைக்கின்றேன். இன்னொரு காரணமும் உண்டு. அது, இயற்கை மேல் எனக்கு அதிக பயம் உண்டு..! நான் என்ன சொல்கின்றேனோ அது பல முறை பலித்துவிட்டது.  உதாரணமாக இன்று காய்சல் என்று சொல்லி, லீவு எடுத்தால் அன்று எதாவது உடலில் உபாதைகள் வந்து, சொன்ன காரணம் உண்மையாகும் படி சூழல் இயங்குவதாக, நான் எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்..!  காய்ச்ல் என்று பொய்சொல்லி, காய்ச்சலில் அனுபவிப்பதைவிட, பொய்சொல்லாமல் போய் வரும் கஷ்டங்களை ஏற்பது மேல்..! என்று நினைப்பேன்.

இந்த மாதம் தொடங்கும்போதே, மாதப்பிறப்பு அன்று பிரயாணம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதே மனதில் தோன்றியது, மற்றைய மாதங்களை விட, இம்மாதம் பயணங்கள் சற்று அதிகமாக இருக்கும் என்று..! அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!

விளையும் பயிரை, முளையிலே தெரியும் என்பது போல், அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல், மாதத்தின் முதல் நாளே அந்த மாதத்தின் தன்மையை மேலோட்டமாக எனக்கு உணர்த்திவிடும்..! அது இம்முறை இன்னும் உறுதியாக நிரூபணமாகியுள்ளது..!

இப்படியான மனநிலையில், வழமைபோல் சனி மற்றும் ஞாயிறுக்கடமைகளை முடித்து, திருமணம் மற்றும் அந்தியேட்டி என்ற இரு  நிகழ்வுகளிலும் கலந்துவிட்டு, மாலை 8.00 வரை திரைப்படம் ஒன்றையும் பார்த்துவிட்டு,  அடுத்தநாள் கொழும்பில் நடக்கும் கூட்டத்திற்கு போவோமா..? விடுவோமா..? என்ற நினைப்புடன் செயற்பட்டு, வழமைபோல் மோட்டார் பைக்கில் பஸ் ஸ்டாண்ட் போய், தனியார் குளிர் சாதன வசதியுள்ள பஸ்களில் சீற்  இருக்கின்றதா எனத்தேடினேன்..! அநேகமாக எல்லாம் நிரம்பிவிட்டது..! சீற் இல்லை என்றால் பரவாயில்லை திரும்பிப்போகலாம் என்ற நினைவுடன் ஒவ்வொன்றாக விசாரிக்கும்போது ஒரேயொரு பஸ்ஸில் கடைசி வரிசையில் ஒரேயொரு சீற் மாத்திரம் இருந்தது..!  அது எனக்கான அழைப்பிதழ் போல் தோன்ற, கஷ்டம் என்றாலும் பரவாயில்லை போவோம் என்று வெளிக்கிட்டேன்.

முதலே மூத்த மகள் சொன்னாள். அப்பா போகவேண்டாம் “நில்லுங்கோ என்று..!” இருந்தாலும் அவள் சின்னப்பிள்ளை..! எமது அலுவலகச் சூழல் தெரியாது..! எமது நிறுவனத்தில் இருந்து யாரும் போகத் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் நானும் போகாது விட்டால் ஏதாவது சிக்கல் வந்தால், அது என்னையும் பாதிக்கும். தேவையில்லாமல் மேலிடங்களுடன் மோதக்கூடாது என்றும், சில சமயம் அது, எமது நிறுவனத்திற்கு ஒரு நன்மையான நிகழ்வாக அமையலாம் என்ற நோக்கத்தாலும் வெளிக்கிட முடிவு எடுத்தேன்.

உடுப்புகள், பைகள் எல்லாம் அங்கேயும் (திருமலை) இங்கேயுமாக (யாழ்) இருப்பதால், இருப்பதை வைத்து சமாளிப்போம் என்ற நினைப்பிலே சென்றேன். வழமையாகத் தம்பி வீட்டிற்குச் செல்வது என்பது ஒரு கடமையாக நிகழ்ந்தாலும், இம்முறை தம்பிக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது என்பதுடன்,  எமக்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்த நினைத்தேன். திருகோணமலை விருந்தினர் பங்களாவில் புக் பண்ண முயன்றேன். அங்கே அறைகள் இல்லை, நிரம்பிவிட்டது..! இருந்தாலும் குளித்துச்செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப, காலை 4.45இற்கு அங்கு சென்று குளித்து, சற்று நேரம் உறங்கி, காலை 6.45மணியளவில் 163 பஸ் எடுத்து, பத்தரமுல்ல செஸ்திரிபாயவில் இறங்கி, ரூபா.250  பணம் கொடுத்து, ஒரு ஓட்டோவில் ஸ்சுறுபாயவில் இறங்கி, கீழ்மாடியிலுள்ள கன்ரீனில் காலை உணவை முடித்துக்கொண்டு, 7ம் மாடியிலுள்ள மாநாட்டு மண்டபத்திற்கு வந்தேன். அங்கே பலர் இருந்தார்கள். பொலிஸ்கார்களும் நின்றார்கள்..! அப்போது தான்,  செயலாளர் வெளிநாடு போயுள்ள விபரம் தெரிந்தது.

காலை உணவைத் தலைமையகம் தர, வாங்கி உண்டேன். கலந்துரையாடல் முறையில் E-code Part 1 & Part 2 மற்றும்  FR  என்பதுடன் மாலை Power Delegation  மற்றும் Procurement Related Issues என்ற தலைப்புகளில் மேலதீக விளக்கங்கள் தந்தார்கள். உண்மையில் அவை பயனுடையதாக அமைந்தது..! நாமும் அதனை அவ்வாறே மாற்றிக்கொண்டோம்..!

ஒருவாறு அந்தச்செயலமர்வை முடித்துக்கொண்டு 174 பஸ்ஸில் ஏறி, பொரெல்ல ஆயுள்வேதியாவில் இறங்கி, மாமாவீட்டிற்குச் சென்று, மாமாவையும், ஏனைய வயோதிப உறவுகளையும் பார்த்துவிட்டு, வழமைபோல் நான் வழங்கும் பொருட்களையும் கொடுத்துவிட்டு, திரும்ப  “பெற்றா” போக 144 பஸ்ஸில் ஏறினேன். ஏறக்குறைய  மாலை 6.30 இற்கு தனியார் பஸ் ஸ்டாண்டில் திருகோணமலைக்கான 49 இலக்க பஸ்ஸைத்தேட மாலை 7.00மணிக்கு புறப்படும் பஸ் கிடைத்தது..!  அந்நேரம் உடல் மிக அலுப்பாக இருந்தது..! இரவு நித்திரையில்லை..! அத்துடன் தொடர்ந்து  செயலமர்வில் இருந்ததால் பின்பகுதி வலித்தது..! இருந்தாலும் நாளை திருகோணமலையில் நிற்கவேண்டும் என்ற நோக்கில் புறப்பட்டேன். பஸ் வெளிக்கிடும் போது கடும் மழை பெய்தது..! பஸ் விரைவாகச் செல்ல முடியவில்லை.  ஊர்ந்து ஊர்ந்து செல்ல கடும் வெறுப்பாக இருந்தது..! பின்பக்கம் வலித்தது..! நான் என்ன சிறுவனா..? அல்லது இளைஞனா..? 55ஐ தாண்டிய இளைஞன்..!

ஏறக்குறைய தம்புல்லவிற்கு கிட்டவாக பஸ் ஓடமுடியாமல் நின்றது..!  நித்திரையும் வரவில்லை..! உடம்பும் வலித்தது..! காலை 6.45இற்கு போட்ட உடுப்பு இரவு 12.00மணி தாண்டியும் உடலோடு ஒட்டியிருப்பது வேதனையாக இருந்தது..!

சிறிறு நேரத்தில் வேறோர் பஸ்ஸை கொண்டுவந்தார்கள்..! பின்னர், பஸ் மாறியேறி ஓரளவிற்கு விரைவாக ஏறக்குறைய  அதிகாலை 2.30இற்கு கிட்ட அனுராதபுர சந்தியில் இறங்கி, எனது நிறுவனப் பாதுகாப்பு ஊழியருக்கு போன் பண்ண, அவரும் தனது மோட்டார் பைக்கில்  என்னை ஏற்றி, அலுவலகத்திற்கு கூட்டிவந்தார்.  பின்னர் குளித்துப் படுத்தேன். படுக்கும் போது, நாளை முற்றாகக் கடமைவிடுப்பை எடுப்போம் எனநினைத்தேன்.

ஆனால் நினைப்பு பாதிக்கப்பட்டது..!  காலை 8.00 மணியளவில் எழுந்து,  காலை உணவை முடித்துவிட்டு, ஓய்வு எடுக்க நினைக்க, அடுக்கடுக்காய் பிரச்சனைகள் வரத்தொடங்கின..!

கல்வியமைச்சரே அலுவலகம் வந்தார்..! திருகோணமலை DCC Chairman  வந்தார். பல கூட்டங்கள் நடந்தன. தலைமையகத்தில் இருந்து கணக்காய்வாளர் குழு வந்து அடுத்து மூன்று நாட்கள் கணக்காய்வில் ஈடுபட காத்திருக்க, ஓய்வு தொலைந்த காணாமல் போனது..! வேலையிலே முழ்கினேன்.  மாலை 5.30 மணிவரை ஓய்வே கிடைக்கவில்லை.  பின்னர் சிறுதூக்கம் போட்டு, மாலை 7.00மணிவரை உறங்கிவிட்டு, ஏனைய கடமைகளை முடித்தேன்.

இதனை எழுதி முடிக்கும் போது நேரம்  இரவு.10.47..!

இப்போது மனம் சற்று அமைதியாகிவிட்டது. இனி உறக்கத்திற்குப் போகலாம்..!  இருந்தாலும் மகள் சொன்னது மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது..! (“அப்பா.. கொழும்புக்குப் போகவேண்டாம்..!” என்பது.)

 

ஆ.கெ.கோகிலன்

10-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!