சகுந்தலம்..!

 



துஷ்யந்தன் மற்றும் சகுந்தலை காதலை உலகே அறியும்…! நான் கூடப் பல தடவைகள் அந்தக்கதையை கேட்டுள்ளேன். நாடகங்களில் பார்த்துள்ளேன். நடிகர் திலகம் சிவாஜி மற்றும் பிரபு நடித்த ராஜரிஷி என்ற படத்தில் கூடப் பார்த்துள்ளேன்.  அந்தகால நாடகத்தில் அல்லது சினிமாவில் கணினியும், அதன் வரைகலை வளர்ச்சியும் ஏற்படவில்லை. தனியாக  கமெரா நுட்பங்களை மட்டும் பயன்படுத்திக் காட்சிகளை மெருகூட்டினார்கள். அதுமாத்திரமன்றி, நிறைய உழைப்பையும், நேரத்தையும், பணத்தையும் கொடுத்து, பல  செட்டுக்கள் போட்டு, காட்சிகளைப் பிரமாண்டமாக மாற்றினார்கள்..! ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஒரு கணினி போதும் வித்தைகள் காட்ட..!

கணினி வரைகலையில் கணினிப் பண்ணைகளே பயன்படுகின்றன..! பல ஆயிரம்   வரைகலைஞர்கள் இரவுபகலாக உழைக்கின்றார்கள்..!

இந்தப்படத்தில் அப்படிப்பட்டவர்களின் பங்களிப்பு அதிகமுள்ளது..! அவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டு, கதையை ஆராய்ந்தால், சில காட்சிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. சகுந்தலா, வனவிலங்குகளைப் பெயர்கொண்டு அழைத்த வாழ்வியல் முறையில் இருந்து, முன்பு எப்படி இயற்கையோடு மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை உணரவும், ரசிக்கவும் முடிந்தது..!

எனக்கு ஒரு சந்தேகம் வருகின்றது,  இன்றைய, கரப்பான்களையும், நுளம்புகளையும் வியாபாரத்திற்காகப் பெருக்கினார்களா அல்லது இயற்கையால் நடக்கின்றா என..? வெளிச்சம் அந்த இயற்கைக்கு மட்டுமே..!

சகுந்தலாவிற்கு வரும் கஷ்டங்களுக்கு ஒரு காரணத்தைக் கொடுத்தது  சிறப்பு. இருந்தாலும் ஆரியக்கருத்துக்களைத் திணிப்பது நவீன சமூகத்திற்கு ஏற்புடையதா என்ற கேள்விக்குறி  எனக்கு எழாமலில்லை..!  காந்தர்வத்திருமணம் என்று நம்மவர்கள் இப்போது இயற்கையைச் சாட்சியாக வைத்துத் திருமணம் செய்தால், என்ன சொல்வது..? சட்டங்கள் கைகட்டிக்கொண்டு நிற்க வேண்டியிருக்கும்..!

படத்தைப் பொறுத்தவரை, ஒரு புராணக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.  நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் சகுந்தலா பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக, கிறிஷ்தவ பெண்ணான சமந்தாவுக்கு சிறப்பான ஒரு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

பல இடங்களின் எனது கண்களைக் கலங்க வைத்துவிட்டார்..!

துஷ்யந்த மன்னன், காதலியை மறந்த நிலையில், பூமித்தாயிடம் தன்னைக்காக்கச் சொல்லி, வேண்டும் போது, மனம் கனத்துவிட்டது..! புராணக்கதையென்றாலும் சில உணர்வுகள், பெண்களைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆண்களுக்குத்தெரியும். வயிற்றில் கருவைச் சுமந்துகொண்டு, தொட்டவன் தெரியாது என்று சொல்ல, சூழவுள்ளவர்கள் வேசி என்று பேச, நேர்மையான, உண்மையான, உயிர்களை மதிக்கும் தாயுள்ளம் கொண்ட ஒரு பெண்ணால் எப்படி அந்தச் சூழலைத் தாங்க முடியும்..?

கோபமுனி துருவாசருக்கு  என்று ஒரு கதை சொன்னார்கள்..! சிரிப்பு வந்தது..! ஒரு சூழலைப் புரியாத மனிதன் அல்லது தேவன் எவ்வளவு ஆற்றல் பெற்று என்ன..? அவன் தேவனால் வந்தால் என்ன..? இறைவனால் வந்தால் என்ன..? துருவாசருக்கு யார் தண்டனை கொடுப்பது..? அவர் செய்வதை எப்படிச் சரியென்பது..? இவ்வாறாக முட்டாள் தனமான விடயங்களைப் புராணங்களாகத் திணித்து, உலக இந்துக்களிடையே பெரிய பாகுபாடுகளை மட்டுமே ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்..!

எனக்குப் பல கேள்விகள் எழுகின்றன..? என்ன செய்ய..? உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் பிள்ளைகள் பிறக்கின்றன..! அவை வளர்ந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன..!  எந்த மதத்திலாவது பிறந்த பிள்ளைகள் இறக்காமல் இருக்கின்றனவா..? அப்படியிருந்தால் சொல்லுங்கள் அந்த மதத்திற்கு நான் மாற..? இயற்கை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தைக்காட்டியுள்ளது..! அதனடிப்படையில் வகுக்கப்பட்ட மதங்களில், வேறுபாடுகள் தோன்றாலாம். ஆனால் உண்மை என்றும் ஒன்றுதான்..!

இப்படியான வரலாற்றை ஒரு கதையாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கின்றது. அவ்வளவு தான்.

பழைய கதை என்றாலும், நவீன தொழில்நுட்பங்களூடாக மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள்..! அதற்காகப் படத்தின் இயக்குனர் குணசேகருக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு புராணக்கதையை திரையில் கொண்டு வந்ததற்காக..!

 


ஆ.கெ.கோகிலன்

21-09-2024.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!