ஜனாதிபதித் தேர்தல்..!
பொதுவாக யார் ஆண்டாள் என்ன..? ஆள்பவர், சரியாக நாட்டை ஆண்டாள்
நான் எப்போதும் அவர்கள் பக்கம் நிற்பேன். அதற்கான நம்பிக்கை, அவர்களது ஆட்சியில் இருந்திருக்க
வேண்டும். அண்மைய கால அரசியல் மிகவும் நெருக்கடியானது..! ஆட்சியாளர்களைத் தாண்டி இயற்கையும்,
உலக வல்லரசுப் போட்டிகளும் பல வித தாக்கங்களை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றன..! அதன்
விளைவாக நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன..! இவை சாதகமானதாகவும்
இருக்கலாம், பாதகமானதாகவும் இருக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வியல் தரத்தையும், பௌதீகநிலையினையும்
பொறுத்து, பாதிப்புகள் வேறுபடுகின்றன.
தற்போதைய ஜனாதிபதி, கடந்த தேர்தலில், வெற்றிபெறவில்லை. ஆனால்
இயற்கையும், பொருளாதாரத் தாக்கங்களும் ஏற்படுத்திய அரசியல் கலகத்தின் விளைவாக ஜனாதிபதியாகிவிட்டார்..!
அதுமாத்திரமன்றி, இன்றுவரை அவரால் இயன்றவரை நாட்டைப் பாதிப்பு இல்லாமல் கொண்டு செல்ல
முடிந்திருக்கின்றது. இந்த இடத்தில் பாதிப்பு இல்லாமல் என்று சொன்னது, சராசரி மக்களின்
வாழ்வியலை விட, மேம்பட்ட மக்களுக்கே இந்தவிடயம் மிக உண்மையாக இருந்திருக்கும். ஆனால்
பலர், வறுமையின் பிடியிலும், துன்பத்திலும், சிக்குண்டே வாழ்கின்றார்கள்..! யுத்தகாலத்தில்
வாழ்ந்த வாழ்க்கையைவிட தரமிழந்த வாழ்க்கையே வாழ்கின்றார்கள்..!
நான், உதவி விரிவுரையாளராக இருக்கும்போது மாதம் ஏறக்குறைய
2 பவுண் தங்கநகை வாங்கக்கூடிய நிலையில் இருந்து, 20 வருடங்களுக்கு மேற்பட்ட சேவையையும்,
படிப்பையும் கொடுத்தாலும், தரம் 1 பணிப்பாளர் என்ற நிலைக்கு வந்தாலும் 1 பவுண் நகைவாங்கக்கூடிய
நிலையில் இருப்பதைப் பார்க்க பொருளாதாரத்தில் எவ்வளவு தோற்றுள்ளோம் என்பது புரியும்..!
நான் ஒப்பிட்டது யுத்த காலத்தில் உள்ள நிலையுடன் மாத்திரம். வேறு வளர்ச்சியடைந்த நாடுகளுடன்
ஒப்பிடும் போது, எமது வாழ்வே வெறுக்கும். அவ்வளவு பெரிய வேறுபாடு இருக்கின்றது..!
இந்த நிலையில் இருந்து நாட்டைக்கட்டி எழுப்பக்கூடிய நபர்
யார் என்றால் இன்னும் கேள்விக்கூறி தான் மிஞ்சுகின்றது. வளர்ச்சி இல்லாமல் இப்படியே
இருந்தால், போதும் என்றால் தற்போதைய ஆட்சியை நீடித்தாலே போதும். தேர்தலே தேவையில்லை.
ஆனால் நாடு, மேலும் கடனிலும், வேறுபல வல்லாதீக்க சக்திகளின் பிடியிலும் மாட்டியிருப்பதால்,
பல ஆபத்துக்கள் தொடர்ந்து எமது மக்களுக்கும் நாட்டிற்கும் இருக்கின்றன..!
அதுமாத்திரமன்றி, அரச நிறுவனங்களில் கூட பல குளறுபடிகள் நியமனங்களிலும்,
பதவி உயர்வுகளிலும், மேலும் அவர்களது சேவைகளிலும் இருக்கின்றன..! சரியான கட்டுப்பாடான
தலைமைகளும் இல்லை..! தொண்டர்களும் இல்லை..! இங்கு உண்மையாக, நேர்மையாக, அரசிற்கு விசுவாசமாக
இருப்பவனே பெரிதும் பாதிப்பிற்கு உட்படுபவனாக, பலரது பகையை சம்பாதித்தவனாக, வெறுப்புக்குரியவனாக
இருக்கின்றான்..!
மேலும், கீழும் தவறுகள் இருக்கும் போது, இடையில் இருப்பவர்கள்
பாடு மத்தளம் மாதிரித்தான்..!
ஆகவே, மாற்றம் என்ற ஒன்று, இந்த நாட்டின் மீட்ச்சிற்கு வேண்டும்.
அரச இயந்திரம் முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் பணம், வினைத்திறன் மிக்கவகையில்
செலவுசெய்யப்படவேண்டும். தவறுகள் செய்தவர்கள் தண்டணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குத்
துணைபோனவர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தி, பதவி இறக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வளங்கள் முறையாகப் பங்கிட வேண்டும். இனம், சாதி, மதம், இடம்
போன்ற விடயங்கள் கருத்தில் எடுக்காமல், இயன்றவரை அனைவரும் அனைத்தும் பெறக்கூடிய வகையில்
சீனாவின் கட்டமைப்பை ஒத்த வகையில், நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
இந்தவகையில் சிந்திக்கும்போது, ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகின்றது..!
நாடு முன்னேற வேண்டும். எந்த நாட்டையும் சாராத வகையில், எமது பொருளாதாரம் வளரவேண்டும்.
நாட்டைவிட்டு வெளியேறுவோர் குறைந்து, போனவர்கள் திரும்ப வரக்கூடிய வகையில் நாட்டைக்
கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு அனைவரும், குறிப்பாக மூவின மக்களும் ஒன்றுபட வேண்டும்.
சரி பிழைகள் தாண்டி, அனைவரும் ஒருமித்த நிலைக்கு வந்தால் தான் அல்லது வரப்பண்ணினால்
தான், அது சாத்தியப்படும்.
அப்படியான கொள்கையில் இப்போது திசைகாட்டியே தெரிகின்றது..!
பார்ப்போம் எவ்வளவு காலத்திற்கு சரியாக திசை காட்டுகின்றது
என்பது..! அது தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் என்னுடைய வாக்கு அவர்களுக்குத் தான் என்பதை
அடித்துக்கூறுகின்றேன்.
இலங்கையில் தமிழர்கள் சிறுபாண்மை. அதிலும் பல பிரிவுகள் உண்டு.
யாழ்ப்பாணத்தமிழன், மட்டக்களப்புத் தமிழன், திருகோணமலைத் தமிழன், மலையகத் தமிழன், இந்தியத்
தமிழன், தமிழ்மொழி பேசும் தமிழன் எனப்பல வகையாகப் பிரிந்து இலங்கையில் இருக்கின்றார்கள்..!
அனைவரையும் தமிழ் இணைத்தாலும், அவர்களிடையே வேற்றுமைகளும், வெறுப்புக்களும் இருக்கத்தான்
செய்கின்றன..! இந்தநிலை, மிகவும் வெறுக்கத்தக்க, தமிழ் அன்னைக்கு தீங்கு இழைக்கும்
நாசகாரச் செயலே ஆகும். அந்த வகையில் இம்முறை எல்லாத்தமிழர்களும் ஒன்றுபட்டு, ஒரு பொது
வேட்பாளரை நிறுத்தியிருந்தாலும், தென்னிலங்கைச் சக்திகளாலும், புலம்பெயர் சக்திகளாலும்,
சாதிய வாதிகளாலும் அதனை வலுவிழக்கச் செய்திருப்பது வேதனைக்குரியது. தமிழர்களே, தமிழனை மதிக்கவில்லை என்றால், எப்படி ஒரு சிங்களவன்
மதிப்பான்..?
போனதடவை சிவாஜி லிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்
போது, நான் அவருக்கே வாக்குப் போட்டேன். ஆனால்
சிங்களவர்கள் பெரும்பாண்மையாக ஆதரித்த கோத்தபாயாவை நானும் ஆதரித்தேன்..! இறுதியில்,
நான் நினைத்தது மாதிரியே, யாரால் வந்தாரோ, அவர்களாலே துரத்தப்பட்டார்..!
இந்தமுறை, ஒரேயொரு நோக்கத்திற்காகப் பொதுவேட்பாளரை நினைவுகொண்டு,
சங்குச் சின்னத்திற்கு வாக்கு வழங்கினேன்..! அதேபோல், மாற்றம் வேண்டும் என்பதற்காக
2ம் விருப்பத்தெரிவை அனுராவிற்கும், 3ம் விருப்பத்தெரிவை என்ன இருந்தாலும், இப்படியாவது
நாட்டை கொண்டுசெல்லும் ரணிலுக்கு மதிப்பளித்து, வாக்களித்துள்ளேன்.
இதைத்தவிர சஜித்தையும் ஆதரிக்க விருப்பமுண்டு. இந்தமுறை ஆட்சிக்கு
வந்து, நல்ல ஆட்சியைத் தந்தால் அடுத்தமுறை அவருக்கு வாக்கு அளிக்கக் காத்திருக்கின்றேன். பெரும்பாண்மை ஆதரவையும், கொள்கைகளையும் வைத்துக்கொண்டு
எனது வாக்களிப்பு நிறைவிற்கு வந்தது.
இம்முறை தபால் மூலம் வாக்களித்து, தேர்தல் பணிகளுக்குச் சென்றிருக்கலாம்.
ஆனால் இந்த நியமனங்களிலுள்ள சீர்கேடு என்னை அந்தப்பக்கம் திரும்பவிடவில்லை..! ஏன் எமது
தகுதியைக் கீழ் இறக்க வேண்டும்..? ஒரு கல்வி நிறுவனப் பணிப்பாளர், தனது பதவிக்கான மதிப்பை
பேண முற்படுவதில் தவறில்லைத்தானே..!
இனிவரும் காலத்தில், மனம் மாறிய நல்ல சிங்களவர்கள், தமிழனிற்கு வாக்களிக்கூடிய நல்ல தமிழனை, அடையாளம் காட்டாத குற்றம், என்றும் தமிழர்களுக்கு உண்டு..! அது, துடைத்து எறியப்படவேண்டிய விடயம் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது.
மூன்று மொழிபேசி அனைவரையும் ஏமாற்ற வேண்டாம். ஒரு மொழி பேசினாலும், உண்மையாக இருக்க வேண்டும். உறுதியாக இருக்க வேண்டும். பயனுடைய விடயங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வளவு தான். மிகுதியைத் தொழில்நுட்பங்களே செய்யும்.
சிந்திப்போம்..! செயற்படுவோம்..!
ஆ.கெ.கோகிலன்
21-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக