தங்கலான்..!

 



 பா.ரஞ்சித்தின் படம் என்றால் அதில் அடிமைத்தனத்தை உருவாக்கிய பல வரலாற்றுக் கருத்துக்கள் இருக்கும். சாதியக் குறியீடுகள் இருக்கும். அடிமட்ட மக்களின் வாழ்வியலின் கஷ்டம் இருக்கும். காட்சிகள் முழுவதும் உணர்வுகள் எங்கும் பரந்து இருக்கும்.

தங்கம் தேடும் கதை என்றாலும், இந்தப்படத்திலும் இவை அனைத்தும் இருக்கின்றன..!

ஆங்கிலேயர் காலத்து,  அடிமட்ட மக்களின் வாழ்வியலை அந்தக்காலத்திற்குப் போன மாதிரியே காட்சிப்படுத்தியுள்ளார்கள்..!

உண்மையில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளும் சிறப்பாக இருந்தன. ஆனால் இரவுக்காட்சிகள் போல், பல காட்சிகள் வருவதால், சற்று தெளிவில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. அதேபோல் மொழி, தமிழ் என்றாலும் சில பேச்சுவடிவங்களைப் புரியச்சற்று கடினமாக இருந்தது.

ஆங்கிலேயர்களின் சுரண்டலைப் பார்க்கும்போது, இன்னும் ஆங்கில நாட்டில் இருந்து இழந்ததை மீண்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணமும், எம்மை வருத்தியதற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் அடிமைப்பட்ட நாடுகளில் பிறந்த அனைவருக்கும் இருக்கும். அந்த எண்ணத்திலேயே படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களைப் பார்க்கும் போதே, வெள்ளைதோல் என்றாலும் கள்ளத்தோல், நரித்தோல், நயவஞ்சகத்தோல் போலவே தோன்றுகின்றது..!

எமது மக்களைப் பயன்படுத்தி, எமது வளங்களை இலகுவாக சுரண்ட ஒத்து போன சமூகங்களையும், இன்றும் தாம் பெரிதாகச் சாதித்துவிட்டது போன்ற இயல்புகளில் இருக்கும் மக்களையும் பார்க்க, அவர்களுக்கு எமது இழப்பை, எப்படிப்புரியவைப்பது  என்றே தெரியவில்லை.

நடிகர் விக்ரமிற்கு, தனது நடிப்புப் பசிக்கு தீனி வழங்கக்கூடியமாதிரியான பாத்திரம். நன்றாகச் செய்துள்ளார். அதேபோல் பசுபதி, பார்வதி, மளவிகா மோகன் என அனைவரும் அசத்தியுள்ளார்கள்.

அடிமட்ட மக்கள் பூணுல் போட்டிருப்பதையும், அதனைப் பொறுக்க முடியாத வெள்ளைக்கார அடிவருடியாக வரும் மனிதனையும் பார்க்கும் போது, நிஜம் நன்றாகப் புரிகின்றது.

சில  காட்சிகள், கணினி வரைபியலில் நன்றாகச் செய்துள்ளார்கள். கரும்புலியுடன் சண்டை, குழுமாட்டுடன் சண்டை, பாம்புகளுடன் சண்டை என வித்தியாசம் வித்தியாசமாக எடுத்து வைத்துள்ளார்கள்.

இருந்தாலும் படம் பார்க்கும் போது, சற்று உணர்வோடு ஒட்ட மறுக்கின்றது. வாழ்வியல் முரணே, அதற்கு காரணமாக இருக்கலாம்.

மற்றும் படி பார்த்தால், அனைத்தும் சிறப்பு. பா.ரஞ்சித்திற்கு ஒரு பாராட்டு. ஆனால் போட்ட காசை எடுத்தார்களா என்றால், கேள்விக்குறி தான். அனைத்து நடிகர்களும் கதையோடு வாழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது..!

 




ஆ.கெ.கோகிலன்

16-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!