இங்க நான் தான் கிங்கு..!

 


சந்தானம் கதாநாயகனாக நடிக்கவந்த பிறகு அவரது படங்களின் எண்ணிக்கை திடிரெனக்குறைந்துவிட்டது..! பெரிய ஹீரோக்கள் மாதிரி வருடத்தில் 2 அல்லது 3 படங்கள் தான் வருகின்றது..! அந்த வகையில் இந்தப்படம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அவரது படங்களின் கதைகள் கொஞ்சம் நகைச்சுவை கலந்தே இருக்கும். இந்தப்படத்திலும் அது இருந்ததோ இல்லையோ தொடக்கமே சற்று உணர்வற்று இருந்தது.

கடன்பட்டு வீடு வாங்கி, அங்கே தனியாக குடித்தனம் நடாத்தும் நாயகன், சீதனம் வாங்கி கடன் அடைக்க கனவு காண, அது அவனை மேலும் சிக்கலுக்குள் கொண்டுசென்று, இறுதியில் குடும்பமாகவும் மற்றும் அயலோடும் சேர்ந்து, அந்தச்சிக்கலில் இருந்து மீண்டு வருவதாகவும்,  அதற்கு அரசின் சன்மானமாகக் கடன் தொகையைவிட இருமடங்கு வந்ததால், நாயகன், நாயகி இருவரும் ஹனிமூன் போவதாகப் படம் முடிகின்றது.

இந்தப்படத்தில் சந்தானம் முகத்தை எப்போதும் கடுமையாக வைத்திருப்பது போல் மாத்திரம் நடித்து இருக்கின்றார்.  ஏனையவை எல்லாம் வழமையாகப்பார்ப்பது போல் தான் உள்ளது..புதுமை ஒன்றும் இல்லை..!

ஜெமீந்தார் என்று நம்பிப்போய், அந்த ஜெமிந்தாரே ஊர்முழுக்கக் கடன்வாங்கி, பொறுப்பற்று இருப்பதைப் பார்க்க, இயக்குனர் மேல் ஆத்திரம் வருகின்றது. ஒரு ஜெமீனைக்கட்டிக்காக்க வேண்டும் என்றால் மீசையும், வேட்டியும் போதுமா..?

பிரியலயா என்ற கதாநாயகி புத்திசாலி மாதிரியும், மொக்கு மாதிரியும் காட்டி அந்தக்குடும்பத்தையே ஒரு சதத்திற்கு உருப்படியில்லாதவர்கள் என்று சித்தரித்துள்ளார் இயக்குனர். ஆனால் இழிச்சவாயன்கள் போல், எல்லா இடத்திலும் உண்மைபேசுவதாகவும் காட்டுவது, உண்மை பேசுபவர்களைக் கேவலப்படுத்துவது போலுள்ளது. ”தருணம் அறிந்து பேசு..” என்பது வேறு..! “உளறுவது..” வேறு..! சும்மா உளறுவது ஒரு நோய். படத்தில் மாமனாருக்கும், மச்சானுக்கும் அந்த நோயுள்ளது..! அதுமாத்திரமன்றி நாயகிக்கும் கொஞ்சமாக இருக்கின்றது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரட்டை வேடங்களிலும், அதுவும் ஒரு வேடத்தில் பிணமாகவும் நடித்த விவேக் பிரசன்னாவைப் பாராட்டலாம். சில காட்சிகள் பராவாயில்லாமல் இருந்தது. கொஞ்சம் சீரியஸாக இந்தப்படத்தை எடுத்து இருந்தால் ஒரு வேளை ரசித்திருக்கலாம்.

கோமாளிக் கூத்து மாதிரி எடுத்து, எமது நேரத்தை வீணடித்துள்ளார்கள். படத்தில் டி. இமானின் பாடல்கள் தனித்துத் தெரிந்தன..! எனக்கு, நன்றாகவும் இருந்தன..! காட்சி அமைப்புக்களும் பராவாயில்லை.

ஏனைய தொழில்நுட்பங்கள் பரவாயில்லை என்றாலும் கதைக்கரு சற்று  முரணாக இருப்பதால் எல்லாம் விரையமாகத் தெரிகின்றது.

ஆனந்த நாராயன் என்ற இயக்குனர் அடுத்த படத்தில் கொஞ்சம் உணர்வோடு ஒட்டக்கூடிய விதத்தில் காட்சிகளை அமைத்து, படத்தை எடுக்க வேண்டும் என்று கோருவோம். அவ்வளவு தான்..!

 


ஆ.கெ.கோகிலன்

01-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!