உலக மொழிகள்..!
தமிழ் தமிழ் என்று தமிழின் பெருமையைப் பற்றித் தொடர்ந்து பேசுகின்றோம்.
அதில் தவறு ஒன்றும் இல்லை. தமிழிற்கு அத்தனை
சிறப்புகள் உண்டு..! அதேவேளை உலகில் ஏறக்குறைய 7151 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது..!
இது இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவு. அதனால் நூறு சதவீதம் சரியான அளவாக இருக்கும்
என்று என்னால் சொல்லமுடியாது.
இருந்தாலும், ஏன் இவ்வளவு மொழிகள் தோன்றியது என்று யோசிக்கும்போது
ஒரு விடயம் புரிகின்றது. அது, நிறைய வேற்றுமைகள் சமூகத்திற்குள் இருந்துள்ளது என்பதையே
எனக்கு உணர்த்துகின்றது..! ஒரு மொழியைப் பலரால் ஏற்க முடியவில்லை. எல்லோரும் ஒரு மொழிபேசும்
சூழலை வளர்க்கவும் அந்நேர மக்களுக்கு ஆசையில்லை..! அது மாத்திரமன்றித் தேவையுமில்லை..!
ஆரம்ப கால ஊமைப்பாசை (சைகை மொழி) பேசும் காலத்தில் இருந்து, தமது உணர்வுகளையும்,
ஆசைகளையும், தொழில்செய்யும் வழிமுறைகளையும், வாழும் வழிமுறைகளையும், இறைவனை உணர்த்தும்
வழிமுறைகளையும் இந்த மொழிகள் ஊடாகவே கடத்தினார்கள்..!
2024 இல் போப்ஸ் (Forbes) என்ற இந்தியச் சஞ்சிகையின் ஆய்வுப்படி, முதல் மூன்று இடங்களில்
உள்ள மொழிகள் ஆங்கிலம், மண்டரின் சைனீஸ் (Mandarin Chinese), ஹிந்தி (Hindi)ஆகும்.
அம்மொழிகள், முறையே 1500, 1100, 609 மில்லியன்
மக்களால் பேசப்படுகின்றது..!
49 நாடுகள் ஆங்கில மொழியைப்
பயன்படுத்துகின்றன என்றும், சீனா மற்றும் தைவான்
ஆகிய இரண்டு நாடுகள் மண்டரின் சைனீஸ் என்ற மொழியையும், இந்தியா மற்றும் பிஜி என்ற நாடுகள் ஹிந்தி மொழியையும்
பேசுகின்றன எனவும் சொல்கின்றது.
ஏறக்குறைய 278 மில்லியன் மக்கள் பெங்காலி (Bengali) மொழியைப் பேசுகின்றார்கள். இவர்கள் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் இருக்கின்றார்கள்..!
இம்மொழி உலகில் 7வது இடத்தில் இருக்கின்றது. உருது (Urdu) மொழி 10 ஆவது இடத்தில் இருக்கின்றது..!
ஏறக்குறைய 238 மில்லியன் மக்கள் இதனைப் பேசுகின்றார்கள்..!
உலகில், தற்போது அதிக மொழிகள் பேசுபவர்கள் இருப்பது, பப்புவா நியூகினியா
என்ற நாட்டில் தான். ஏறக்குறைய 837 மொழிகள் அங்கே பேசப்படுகின்றன..!
சின்னச்சின்ன குழுக்கள் கூட அவர்களுக்கெனத் தனிமொழிகள் பேசுவதாகக்
கூறுகின்றார்கள்..!
உலகின் முதலாவது மொழியாக, ஏறக்குறைய கி.மு.5000 இற்கு முன்னர் தோன்றியதாக
சமஸ்கிரதம் (Sanskrit) என்ற பேச்சுமொழியைக்
கூறுகின்றார்கள்..! கூகுளும் இதையே சொல்லுகின்றது..! உண்மையான ஆய்வு முடிவு என்ன என்பதை, வரலாற்று ஆசிரியர்களும்,
ஆய்வாளர்களுமே தெளிவுபடுத்த வேண்டும். தமிழும்
சமகால மொழியாக பல தகவல் தளங்கள் தெரிவிக்கின்றன..! அதாவது ஏறக்குறைய கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழும் தோன்றியுள்ளது..!
உலக சனத்தொகையில் ஏறக்குறைய ஒரு சதவீதத்தினர் மட்டுமே தமிழ் பேசுவதாகக்
கூகுள் கூறுகின்றது..! அதேநேரம் , உலக தரநிலையில் 17ஆவது இடத்தில் இருக்கின்றது. தமிழர்கள் ஏறக்குறைய 120 மில்லியன்கள் (12 கோடி)
இருந்தாலும் இவர்களில் ஏறக்குறைய 80 மில்லியன் (8கோடி) மக்களே தமிழ் பேசுகின்றார்கள்..! அலுவலக
மொழி அந்தஸ்துள்ள தமிழ், இலங்கை மற்றும் சிங்கப்பூரில்
தான் இருக்கின்றது..! இந்தியாவில் தமிழுக்கு என்று ஒரு மாநிலம் இருந்தாலும், மற்றைய
அதிகமானோர் பேசும் மொழிகளுடன் ஒப்பிடும் போது,
அலுவலக அந்தஸ்து தமிழுக்குக்கிடைக்கவில்லை.
ஹிந்தியும், ஆங்கிலமுமே இந்தியாவின் அலுவலக மொழி (Official Language).
பல தமிழர்கள், தமிழைக் கைவிட்டு விட்டு, ஆங்கில மொழியினையோ அல்லது வேறு மொழியினையோ
பேசுகின்றார்கள்.
முதலில் தமிழர்கள் அனைவரும், தமிழில் எழுதிப் பேச பழகவேண்டும். தயங்கக்கூடாது.
அப்படியிருந்தால் தான், தமிழைப்பற்றிய கருத்துக்களை அவர்கள் கூறமுடியும். தமிழன் என்ற
ஒரு கெத்து அவர்களுக்கு வரும். இல்லை என்றால், அவர்கள், தமிழ் தங்களாலும் அழிகின்றது
எனநினைத்து வேதனைப்படும் தமிழ்பேசாத 4 கோடி தமிழர்களில் ஒருவராகவே இருக்க முடியும்.
தமிழுக்கு அமுது என்று பெயர்..!
அந்தத் தமிழை அழிவின்றிக் காப்பது தமிழனின் கடமை..!
தமிழ் அன்னையே இது உனது கவனத்திற்கு..!
ஆ.கெ.கோகிலன்
28-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக