மீண்டும் கொண்டாடிய பிறந்த நாள்..!
எமது காலத்தில் பல நிகழ்வுகள், புதுவழிகளில் தேவைகளின் அடிப்படையில், நடக்கின்றன..!
சிலவற்றை குறித்த உண்மையான
அந்த நாளில் நடாத்துவது என்பது முடியாத சூழ்நிலைகளில், அதே கொண்டாட்டத்தை தள்ளிவைத்துக்கொண்டாடக்கூடிய
புதிய சூழலுக்கு நாம் வந்ததே பெரிய சமூகமாற்றம் தான்..! கால வேகமும்,
பொருளாதாரச் சூழலும் அவ்வாறாக எம்மை மாற்றியுள்ளது.
முன்பு இவ்வாறு நடப்பதை, பெரியவர்கள் அனுமதிப்பதில்லை..! பருவத்தே
பயிர் செய் என்பது போல் அந்தக்காலத்தில், அந்த அந்தக் காரியங்களை முடித்துவிடுவார்கள்..!
சில இடங்களில் சாமத்திய வீடுகளை சேர்த்து வைத்து நடத்துகின்றார்கள்.
பிறந்த தினக்கொண்டாட்டங்களைச் சேர்த்து
சில மண்டபங்களில் நடாத்துகின்றார்கள். சில இடங்களில் திருமணங்களைக்கூடக் கூட்டமாக நடாத்துகின்றார்கள்..! காலம், சரியான அல்லது
நியாயமான காரணங்கள் இருந்தால், அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடும்.
எனது பிறந்த தினம் செப்ரெம்பர்
5 இல் வந்தது. அன்று நான் திருமலையில் இருந்ததால், பல விதமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன..!
பல பரிசில்களும் வந்தன..! ஆனால் எனது நிரந்தர அலுவலக ஊழியர்கள் அதற்கான
விழாவை, இன்று இம்மாதத்தில் பிறந்த இன்னொருவருடன் சேர்த்து கொண்டாட முனைந்தார்கள்.
அதனையேற்று, நானும் அவர்களுடன் இணைந்தேன். நிகழ்வுகள் சிறப்பாக முடிந்தன. 5ம் திகதி
உண்மையில் நிகழ்வுகள் முடிந்தாலும், அலுவலகத்தில் இன்று தான் எனது பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது..!
இது இவ்வாறு இருக்க, எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்னும் வீட்டில்
முடியவில்லை. இதனால், வரும் செப்ரெம்பர் 15ம் திகதி, மனைவியின் பிறந்த நாளும்
வருகின்றது..! அத்துடன் எனது பிறந்த நாளையும் சேர்த்து, ஒன்றாகக் கொண்டாடி பிள்ளைகளையும்
உறவுகளையும் மகிழ்வித்தால் தான், எனது இந்தவருடத்துப் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவுக்கு
வரும்.
எந்த ஒரு வருடமும் நடைபெறாத வகையில் இந்தவருட பிறந்த தினம் அமைந்தது,
ஒரு ஆச்சரியம் தான். வழமையாக என்னுடைய பிறந்த நாளில், நான் தான் எனக்கு கேக் வாங்கி,
மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து வெட்டி, மற்றவர்களுக்கும் கொடுத்து உண்பது தான் வழமை.
திருமலை வந்ததால், யாழில் செப்ரெம்பர் 5 ஐக் கொண்டாட முடியாமல் போய்விட்டது.
பொதுவாக எல்லோருக்கும், குறிப்பாக எனது இரு மகள்களுக்கும், இன்று நடிகர் விஜயின் “கோட்” திரைப்படம் புதிதாக வந்ததால், அதைப்பார்க்கச்
சொன்னேன். அது அவர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமாக
இருக்கும். நான் அங்கே இல்லாததால், தியேட்டரிற்கு போக முடியாது என்றாலும், அது தொடர்பான
விமர்சனங்களையும், சில காட்சிகளையும் இணையத்தில், குறிப்பாக யூரியூப்பில் பார்க்கலாம் தானே..! இது தான் அன்றைய எனது பிறந்த நாளின் கொண்டாட்டம் எனச்சொல்லிச் சாந்தப்படுத்தினேன்.
இருந்தாலும் வரும் வாரம், அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
11-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக