ரகு தாத்தா..!
சில படங்கள் எந்த ஆரவாரமில்லாமல் வந்தாலும் மக்களின் மனதைத்
தொட்டுவிடும்..! அதற்கு காரணம், அந்த படத்தின் உள்ளடக்கமும், அதனை மக்களுக்கு கொடுத்த
விதமும் தான்..!
இந்தப்படத்தைப் பொறுத்தவரை, எதேட்சையாகப் பார்க்கும் போதே
படத்தின் காட்சிகள் ஏதோவோர் விதத்தில் என்னைக் கவர்ந்துவிட்டன..!
இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால், 60பது, 70பதுகளில்
இருந்த ஆண்களின் இயல்பையும், பெண்களின் இயல்பையும் தழுவியே பின்னப்பட்டுள்ளது. திருமணத்திற்கு
அவசரப்படாமல் இருக்கும் பெண்ணுக்கு, ஒரு அழுத்தத்தைக்கொடுத்து, திருமணத்திற்கு சம்மதிக்க
வைப்பதும், அந்த திருமணம் நடந்தால், வாழ்வே நரகமாகிவிடும் என்று உணர்ந்த நாயகி அதனை
நிறுத்த, முற்படுவதே கதை..!
கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஹீரோவாக இருந்து வில்லனாக
மாறிய ரவீந்திரா விஜய் போன்ற எல்லோரது நடிப்பும்
பிரமாதம். குறிப்பாக நாயகனாக நடித்தவரின் இயல்பும் சிறப்பாக இருந்தது..!
ஆடை வடிவமைப்புக்கள், காட்சிகள், மன இயல்புகள் அனைத்தும்
பல வருடங்களுக்கு முன்நோக்கிச் சென்றதால் என்னால் அவற்றை இணைத்துப் பார்க்கக் கூடியதாக
இருந்தது.
விரும்பிச்செய்வதற்கும், திணிப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை,
திருமண நிகழ்வின் ஆரம்பத்தில் சொல்லித் தெளிவுபடுத்தியது சிறப்பு.
குதிரையோடிப் பாஸ் பண்ணுவது என்பது இந்தப்படத்தில் ஒரு கெட்ட
விடயமாகத் தெரியவில்லை..! நாயகிக்கு வேறுவழியில் உதவ முடியாது என்பதால் இந்த வழியிலாவது
திருமணத்தைத் தவிர்க்க முனைந்தார்கள்..!
கதை எழுதும் நாயகி, தனது புத்தகங்களை நாயகனுக்கு கொடுப்பதும்,
பின்னர் கருத்துக்கள் பரிமாறுவதும், ஒரு கட்டத்தில் அவனைத் திருமணம் செய்தால் நன்றாக
இருக்கும் என்று நம்பியதும், மொட்டைக்கடிதங்களின் கையெழுத்துக்கள் ஒன்றாக இருப்பதை
அவதானித்த நாயகி, நாயகனின் வீட்டிற்கு சென்று நாயகனின் இயல்புகள் பற்றி அறிவதும் நம்பும்படியாகப்
படத்தில் இருந்தாலும், ஒருவர் தன்னுடைய கெட்ட இயல்புகளை டையரியில் ஆவணப்படுத்தி வைப்பது
என்பது சாத்தியமானதா என்ற ஒரு கேள்வி எழுகின்றது..! நல்ல விடயங்கள், பாதகமில்லாத விடயங்கள்,
மறக்க முடியாத விடயங்கள் போன்றவற்றை டையரியில் எழுதுவது வழமை.
இது, பொறுமையாக இருந்து, அவளைத் திருமணம் செய்துவிட்டுப்
பின்னர், அவளைக் கொடுமைப்படுத்தத் தொடங்கலாம் என்று நாயகன் எழுதி வைப்பது சாத்தியமானதா
என்பதை ஏற்கமுடியவில்லை.
தான் கெட்டவன் என்ற உண்மையை ஒருவன் டையரி போன்றவற்றில் எழுதி,
பிற்காலத்திலாவது தெரியப்படுத்த முனைவான் என்றால், அவன் கெட்டவனாக இருக்க முடியாது.
அவன் நல்லவனாக மாறத் தொடங்கியவனாக, அல்லது நிஜத்தில் நல்லவனாகவே இருக்க முடியும்.
படத்தில் எப்படியாவது நாயகியைக் கலியாணம் முடித்து பின்னர்
அவளை அடிமையாக்க அலைவதை அந்த ஆண் எழுதிவைத்தாலும், அது வெளிப்பட்ட வெறுப்பில், தாயுடன்
கோபமாக நடப்பதன் மூலம் நாயகனின் நடிப்பின் தரம் புரிகின்றது..!
இறுதியாக, சமூகமாற்று கருத்துக்களை திரைப்படமாக எடுக்க வரும்
சிறுவயது நடிகரும், இயக்குனராகத் துடிக்கும் அவரைக் கமல்ஹாசன் போல் காட்டியது சிறப்பு..!
படத்தின் பெரும்பாலான விடயங்கள் சிறப்பாக இருக்கின்றன. சில
குறைகள் இருந்தாலும், அவற்றைத் தவிர்த்துப் பார்க்கலாம். நிச்சயம், ரசிக்கக்கூடிய படம்
என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆபாசம் இல்லாத தரமான படத்தைக்கொடுத்த சுமன்குமார்
என்ற இயக்குனரைப் பாராட்டலாம்.
ஆ.கெ.கோகிலன்
17-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக