வருங்கால மருத்துவத்துறை..!

 

 


இன்று எனது உறவினர் ஒருவரது மகளின் சாமத்தியவீட்டிற்கு போனேன்.

அங்கு எனது பல நண்பர்களையும், உறவினர்களையும் கண்டு கதைத்ததில் மனநிறைவு கொண்டேன்.

அந்தக்குடும்பத்தின் தலைவி, தனியாகப்போராடி தனது பிள்ளைகளை மிக நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளார்..! அவருக்கு இப்போது வயது 85ஐ தாண்டியிருக்கும். அவருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சின்ன வயதில் பார்க்கும்போது, அவர் கதைப்பதும் இப்போது கதைப்பதும் எனக்கு வேறுபாடாகத் தெரியவில்லை. அந்த அன்பு எல்லார் மீதும் தொடர்ந்து இருக்கின்றது..!

அவரது ஒரு மகன் யாழில் பிரபல மருத்துவர். அத்துடன் எனது உற்ற நண்பர். அவரிடம் மாத்திரம் தான், நான் மருத்துவ ஆலோசனை பெறுவது வழக்கம். இன்னொருவர், வடக்கு கிழக்கு அரச தொலைதொடர்பாடல் திணைக்களத்தின் முகாமையாளர்.

குறிப்பாக அவர் ஒரு மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர். இந்த இருவர் மூலம் அந்தக்குடும்பம் அப்பகுதியில் பெரும் செல்வாக்குப்பெற்று விளங்குகின்றது. கல்வியும், நல்ல தொழிலும் வரும்போது, அங்கே லக்சுமியும் கூட வருவார்.

சமூகக்கதைகள்பேசியும், பழைய அறிமுகங்களை மீட்டியும், நாட்டு நடப்புக்கள் சிலவற்றைப்பேசியும் நேரத்தைப்போக்கினோம். வீட்டிலே எல்லாம் நடந்ததால் சற்று நெருக்கடியும், கால நிலையால் வெட்கையான சூழலும் தொடர்ந்து இருந்தது. சாமத்தியப்பெண் சிரித்ததை நான் பார்க்கவே இல்லை..!

ஆனால் யாழ்ப்பாணத்தின்வரும் காலத்தை ஆளும் மருத்துவர்கள் பலரைப் பார்த்தேன். ஆம், இம்முறை அதியுயர் சித்திகளைப்பெற்று குறித்த பெண்ணின் சகோதரர் மருத்துவத்துறை செல்வதால், அவரின் நட்புக்களும், அவரது மருத்துவத்துறை நண்பர்களும் வந்திருந்தார்கள். அதுமாத்திரமன்றி, குறித்த பெண்ணின் மூத்த சகோதரியும் மருத்துவராக வர வேண்டியவர். அதில் அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால் மருத்துவத்துறையுடன் தொடர்புபட்ட இன்னொரு துறையில் பட்டம் படிக்கின்றார்..! அவரது பல்லின நண்பர்களும் அங்கே வந்து சிறப்பித்தார்கள்..!

ஒரு கிராமத்திற்கு நகரில் இருந்து, பல பிரபலங்களின் பிள்ளைகளும் வருங்காலப் பிரபலங்களும் வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது..!

எனது மகளின் வயதை ஒத்தவர்களே அந்த மருத்துவத்திற்கு தெரிவான மாணவர்கள். ஆனால் மகளால் இந்த நிகழ்வுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது கவலை என்றாலும், அடுத்தமுறை, அவளும் அந்தமாதிரியான நிலையை அடைய முயற்சிப்பார் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது.

மருத்துவர்கள், தமது தொழிலை விரும்பி, மக்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்புகொண்டு தமது சேவைகளைச் செய்ய வேண்டும். அது தான் உண்மையான மருத்துவர். கடவுளுக்கு நிகரானவர். மற்றவர்கள் பண அடிமைகள். அறிவை விற்கும் வியாபாரிகள்.

மருத்துவத்துறை சிறப்பாக இயங்கினால், மருத்துவர் அர்சுனா மாதியான நபர்களுக்கு வேலையே இல்லை. அவரும் ஒரு சிறந்த மருத்துவராக எங்கோ ஓரிடத்தில் வேலைசெய்துகொண்டிருப்பார். மக்களும் அமைதியுடன் தமது வாழ்வை நடாத்துவார்கள்.

அரசும் தன்சேவையைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும்.

சில சேவைகள் அன்பை அடிப்படையாகக்கொண்டு, ஆழ்மனதில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.  அந்த உந்துதலால்  உருவாகும் சேவையாளர்கள் நிச்சயம் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்குவார்கள்.

 

ஆ.கே.கோகிலன்

17-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!