பொறுப்புக் கூறல்..!

 


 



இதன் கருத்தை நான் விளங்க முதலே, என்மீது சில பொறுப்புகள் இயல்பாக வந்துவிட்டன..! சிறுவயதிலே அதுவும் 10 வயதிலேயே அம்மாவிற்கு முடியாத சூழல் வர, நான் சமைக்கவேண்டிய தேவை வந்தது..! அதற்குக் காரணம் எனது வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை. அப்பாவின் குடிப்பழக்கத்தால், சின்ன வயதிலேயே கஷ்டங்களை அம்மா என்னுடன் பகிர்வதால், எமது குடும்பத்தின் மீதும் கரிசனை வந்துவிட்டது. 

இளைஞனாக மாறிய பின்னர் சில குழப்பான சூழலுக்குள் சென்று மீளவேண்டிய தேவையையும், அதனூடாகப் பல படிப்பினைகளையும் இயற்கை தந்தது..!

நாட்டு சூழலும், ஊரில் பெற்றோரோடு இருக்கவிடாது துரத்தி, இந்தியாவிலுள்ள ஒரு அகதி முகாமில் கொண்டுபோய் விட்டது..! அங்கே இன்னும் பல பொறுப்புகள் என்னிடம் வந்து சேர்ந்தன..!  சமையல், பஜனை, பயிற்சி, படிப்பு, வகுப்பு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய நிலை தானாகவே வந்தது..!

அகதியாகப் போன நான், ஒரு பட்டத்துடன், அதுவும் கணிதத்துறையில் பெற்றுவரக்கூடிய நிலையை இறைவன் ஏற்படுத்தித் தந்தான்..!

அதன் பின்னர், திருகோணமலை, வவுனியா, கொழும்பு என அலைந்து குடும்பத்தையும், உறவுகளையும், தொழிலையும், படிப்பையும் பார்க்க வேண்டிவந்தது..!

                                               

ஏறக்குறைய 40 வயதில் தான் திரும்ப யாழ்ப்பாணம் போகக்கிடைத்தது. கடந்த 15 வருடத்தில் மேலும் பல பொறுப்புக்கள் வந்து சேர்ந்தன..! குடும்பத்திற்குள்ளும் வந்தன..! அலுவலகத்திலும் வந்தன..!  என்னால் இயன்றவரை அனைவரையும் ஒருவாறு சமாளித்து, என்ன கடமையை நான் ஆற்ற வேண்டுமோ அதனை சிறப்பாக ஆற்றினேன் என நம்புகின்றேன். அதே போல் தான் குடும்பத்திலும் ஆற்றினேன்..!

ஒரு உதாரணத்திற்கு, நான் கட்டிய வீட்டில் ஒவ்வொரு கல்லும் எப்படி வீடாக மாறியது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.  பணம் மாத்திரம் அல்ல..! மனத்தையும், நீண்ட காலத்தையும், எனது உழைப்பையும் அதற்கு செலுத்தியிருந்தேன். மனைவி, பிள்ளைகளுக்குக் கூட அதன் உண்மையான நிலை தெரியாது..!

அதேபோல் ஏறக்குறைய 6 வருடங்களுக்கு மேல் யாழ் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் பணிப்பாளராகக்கடமையாற்றியுள்ளேன். கணக்கியல் துறையின் 75ஆவது ஆண்டு, தலசம், உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் வெள்ளி விழா போன்ற சில வரலாற்று நிகழ்வுகள் எனது காலத்தில் வந்தன..!

அவை கஷ்டங்களையும் தந்தன..! மகிழ்சியையும் ஏற்படுத்தின..!

உதாரணத்திற்கு, யாழில் முதன் முதலில்  வந்த  பட்டப்படிப்பிற்கான ஒரு கற்கை நெறியான உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா  1943இல் தொடங்கப்பட்டு, எமது நிறுவனத்தினால் தொடர்ந்து நடாத்தப்படுகின்றது..! 2018இல் அதனது 75ஆவது ஆண்டுப்பூர்த்தியை  யாழ் சரஸ்வதி மண்டபத்தில் செய்தோம். அதுபோல் யாழ் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் தொடங்கி, 25 ஆண்டு நிறைவை யாழிலுள்ள மத்திய கல்லூரி  அரங்கத்தில் நடாத்தினோம். இதற்குப்பின்னால் பல நிகழ்வுகளும், அனுபவங்களும், ஏன் பாடங்களும் இருக்கின்றன..!

பல வருடங்களுக்குப் பிறகு 2019 இல் கொழும்பில் குண்டு வெடித்தபோதும், கொரோனா வந்தபோதும், கோத்தபாயா நாட்டைவிட்டு ஒடியபோதும், எமது நிறுவனத்தை இயன்றவரை நடத்தினேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதைவிட ஒரு சதம் கூட ஊழல் செய்யாமல் நடத்தினேன் என்ற திமிரும் கூடவே இருக்கின்றது.

நவீன வசதிகளையும், விதிகளையும் இயன்றவரை அனைவருக்கும் நினைவூட்டி, நாட்டிற்கும் அரசிற்கும் நன்மையே செய்தேன்  என்பதை என்னால் அடித்துக்கூற இயலும்.

அதனாலோ என்னவோ திரும்பவும் சில பொறுப்புக்கள் என்னை வந்து சேர்ந்துள்ளன. நான் விரும்பிய போது கிடைக்காக நிலை, எதிர்பார்க்காத சமயத்தில் கிடைத்தது இயற்கையின் விருப்பம் என்று இப்போது தான் எனக்குப் புரியக்கூடியதாக இருக்கின்றது.  எது யாருக்கு வரவேண்டுமோ, அது வந்தேயாகும்..! வரக்கூடாது என்று இருப்பது ஒருநாளும் வராது..!



தற்போது  திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமும் தனது 25ஆவது வருடபூர்த்தியைப், சமுகத்திற்கு பயனுள்ள 25 நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதன் மூலம், தனது நிலையை சுற்றியுள்ள பிரதேசத்திற்கு காட்ட இருக்கின்றது.

இதற்குப் பல வகையான ஒத்துழைப்புக்களை, இந்நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரிடமும் இருந்து எதிர்பார்ப்பதுடன்,  நினைத்ததை சிறப்பாக நிறைவேற்ற இயற்கையினதும், இறைவனதும் ஆசியை வேண்டியும் இருக்கின்றோம்.

“ நல்ல விடயம், நாட்டுக்கு பயனுடையது என்றால்,

அதனை நடைமுறைப்படுத்த, அனைத்து சக்திகளும் நம்மை காத்து வழிநடத்தும்..” என்பது எனது நம்பிக்கை..!



ஆ.கெ.கோகிலன்

28-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!