சேர்ந்த பிறந்த நாள்..!
நேற்று 4.00மணிக்கு வெளிக்கிட நினைத்த நான், பின்னர் பஸ்கள் இல்லாமல் சிக்கல்படக்கூடாது என்பதற்காக 3.15இற்கே வெளிக்கிட்டேன். காலை அலுவலகத்திற்கும் 7.00இற்கே சென்றுவிட்டேன். பகுதிநேர வகுப்புக்கள் காலை 7.00 இற்குத் தொடங்குகின்றன.
பஸ் சரியாக 3.30 இற்கு வந்தது. நிறையக்கூட்டம். ஏறவே சிரமப்பட்டேன்.
இருந்தாலும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்தில் சீற் கிடைத்துவிட்டது. இது அதிஷ்டம் போல் இருந்தது.
பலர் நின்றுகொண்டிருக்க, பிந்தி ஏறிய எனக்கு சீற் கிடைத்தது ஒரு அதிஷ்டம் தான். இருந்தாலும்,
நானும் நீண்ட நேரம் அந்த சீற்றில் இருக்கவில்லை. யுத்தத்தில் காலை இழந்த ஆமி ஒருவர்
ஏறும்போது, அவருக்கு அதனைக் கொடுத்தேன். கெப்பிட்டிக்கொலாவில்
இறங்கும் போது, எனக்கு நன்றி சொல்லி இறங்கினார். நல்லவர்கள் எங்கும் இருக்கின்றார்கள்.
சூழல், நம்மை ஒருவருக்கொருவர் எதிரியாக மாற்றுகின்றது. யாரைக் குறை சொல்ல..? படைத்த
இயற்கையைத் தான் சொல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, சீற்றில் இருந்து வந்ததால் பின்பகுதி வலித்தது..!
8.20இற்கு யாழ் வந்துவிட்டேன். வீடு வர மேலும் 25 நிமிடங்கள் எடுத்திருக்கும்.
வழமையான கடமைகள் செய்யும் போது, வயிற்றில் நிறையக்குஞ்சுகளைக்கொண்ட
தேரை குளியலறைக்கதவில் மறைந்து இருந்தது. என்னைக்கண்டதும் அசைவில்லாமல் அப்படியே இருந்தது..!
அது அப்படியே இருக்க, ஒரு சொப்பிங் பாக்கை கையில் போட்டு, திருகோணமலையில் செய்வது போல்
செய்து, பிடித்து பையில் போட்டுக் கட்டி தூர எறிந்தேன்.
விடியே அதனைத்தேடிப் பார்க்கும்போது, அது தப்பியோடிவிட்டது. நான் யாழில் இருந்த காலத்தில், எனது குளியலறையில்
தவளைகள் வருவதில்லை..! திருகோணமலை போனபோது, அங்கே அலுவலகக்கழிப்பறையில் தவளைகள் நிறைய
இருந்தன. சில வாரங்களில் யாழிலுள்ள எனது வீட்டு குளியலறையிலும் தவளைகள் வரத்தொடங்கின..!
உண்மையில் எனக்கு இந்தச்சூழல் மாற்றம் ஆச்சரியத்தைக்கொடுத்தது. இயற்கைக்கே தெரியும்
இதன் உண்மையான விளக்கம்..!
இன்று ஆவணிக்கடைசி ஞாயிறு..! மனைவி வெளியே சூரியனுக்குப்பொங்கினார்.
சக்கரைப்பொங்கல் சாப்பாடு ஒரு பண்டிகை நாளை நினைவிற்கு கொண்டு வந்தது. வழமைபோல் எனக்கென
இருக்கும் ஆண் வேலைகளைச் செய்தேன்..! அப்போது சிவப்புச் சின்னக்குழவிகள் கையில் கொட்டிவிட்டன..!
கைவிரல் வீங்கி வேலைசெய்வதே கடினமாக மாறிவிட்டது. புளிபோட்டதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது.
மேலும் சில வேலைகளைச் செய்துவிட்டு, கொழும்பிலுள்ள தம்பியும் மகனும் வந்ததால் அவர்களுடன்
கொஞ்ச நேரத்தைச் செலவுசெய்துவிட்டு, அடுத்த வேலைகளைச் செய்யத்தொடங்கினேன்.
போன கிழமையில் இருந்து, குறிப்பாக 55 தாண்டியதும், பல்லுக்கொதிக்கத்
தொடங்கிவிட்டது..! இன்றும், மதியம் வலிக்கத் தொடங்க, உப்புத்தண்ணீர் கொப்பளித்து, கராம்பை பல்லில் வைத்துக்கடிக்க அது மறைந்துவிட்டது..!
மாலை, மனைவியினதும், என்னுடையதும் பிறந்த நாளை ஒன்றாகக் கேக்
வெட்டிக் கொண்டாடி எனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தினேன்.
கடந்த வாரம் 5 இல் தொடங்கியது, இந்தவாரம் 15 இலே தான் நிறைவுக்கு
வந்தது.
ஆ.கெ.கொகிலன்
15-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக