August 16, 1947..!
இந்தியா சுதந்திரம் கிடைக்க சில நாட்களுக்கு முன்னர், ஒரு
கிராமத்தில் நடந்த கதையாக சித்தரிக்ப்பட்டிருக்கும் இந்த கதை உண்மையில் மிகச்சிறப்பாக
அனைத்து உணர்வுகளையும் கொடுக்கக்கூடியதாக அமைத்ததற்காக இயக்குனர் N.S.பொன்குமாரைப்
பாராட்டலாம்.
இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு ஆங்கிலேயன், தனது
ஆளுமையைப்பயன்படுத்தி, மக்களை அவ்வளவு கொடூரமாக கொன்றும், தனது மகன் மூலம் பெண்களின்
கற்புக்களைச் சூறையாடியும், மக்களை வருத்தியும் வந்தான். இந்த ஆங்கிலேயனின் கேடுகெட்ட
மகனை, ஆங்கிலேயர்களின் கொடூரத்தால் தாயைப்பறிகொடுத்த தனயன், வெட்டிக்கொன்று, அம்மக்களை
வீரமாக இருக்கத்தூண்ட, இறந்தவனின் தந்தை தான் பெரிய பருப்பு மாதிரி, ஆங்கிலேயர்கள்
சுதந்திரம் கொடுத்தாலும், தனிப்பட்ட நபர்களின் நாசகாரச் செயலுக்காகவும், பணத்திற்காகவும்,
பதவிக்காகவும், அந்தப்பகுதிக்கு மக்களுக்கு, சுதந்திரம் கிடைத்ததை மறைத்து, தனது அராஜகத்தைத்
தொடர, அதனை முறியடிக்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தாலும், அதனைத்தடுத்து, சுதந்திரம்
கிடைத்த விடயம் ஊருக்குள் பரவாமல் இருக்க, அவ்விடயம் தெரிந்தவர்களைக்கொன்றும், நாக்கை
அறுத்தும் ஆட்டம் போட, இறுதியில் அவனுக்கே பயத்தைக்காண்பித்து, அவனது கதையை முடிக்கின்றான்
நாயகன்..!
கௌதம் கார்த்திக்கின் சிறந்த படங்களில் இதனையும் ஒன்றாகக்
கருதலாம். அப்படி நடித்துக் கவர்ந்துள்ளார்..! ஒரு கட்டத்தில் அந்த யமன், ஆங்கிலேயனை
எதிர்த்து போடும் சண்டை மிக விறு விறுப்பாக இருந்தது. நாயகியாக நடித்த ரேவதி என்ற பெண்,
மிக அழகாக இருப்பதுடன், அருமையாகவும் நடித்துள்ளார். படத்தில் பலரின் நடிப்பைப் பாராட்ட
முடியும். குறிப்பாக ரொபேட்டாக நடித்த முதன்மை வில்லன் ரிச்சாட் அஸ்ரன், தனது கம்பீரமான
தோற்றத்தாலும், கொடூர பாவனையாலும், படத்தையே தூக்கி வைத்திருந்தான். அவன் இறந்தால்
தான் நிம்மதி என்று பார்வையாளர்களே நினைக்குமளவிற்கு பயமுறுத்தியிருந்தார்..!
காமெடி நடிகர் புகழின் நடிப்பும் நன்றாக இருந்தது.
தொழில்நுட்பங்கள் தரமாக இருந்தன.
ஆங்கிலேயர்களின் அட்டகாசங்களைப் பார்க்க, நான் இன்னும் அடிமையாக
இருப்பதாகவே உணர்கின்றேன். அதற்கு அவர்கள்
பயன்படுத்திய ஆயுதம், ஆங்கில மொழி..! அந்த மொழியை விரும்பிப் படிக்கும் வரை நாம் அவங்களின்
மறைமுகமான அடிமைகள் தான்..!
பீரங்கிகளுக்கும், நவீன ஆயுதங்களுக்கும் பயந்து, எமது மூதாதையர்கள்
தோற்றது போன்று இனியும் தோற்காமல் இருக்க, முதலில் நாட்டு மக்களே ஒற்றுமையாக இருக்க
வேண்டும். ஒற்றுமையைப் பாதிக்கும் கொள்கைகளை வகுக்கும், எமது சமூகத் தலைமையில் இருக்கும்
மனிதர்கள் மிக நிதானமாக நடக்க வேண்டும்.
சுயநலன்களால் தான் கடந்த ஜந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக நாம்
அடிமைப்பட வேண்டியிருந்தது. இப்போது சுதந்திரம் கிடைத்தாலும், இன்னும், ஊழல் வாதிகளும்,
ஆங்கிலேயர்களுக்கு நிகரான மனநிலை கொண்ட மேட்டுக்குடி மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..!
இவர்களின் ஆங்கிலேய அடிவருடித்தனம் எப்போது ஒழிந்து, சுய சிந்தனைகள், உள்ளூர் உற்பத்திகள்
பெருகின்றனவோ அப்போது தான், நாம் யாரையும்
சாராமல் வாழ முடியும். அதற்கான வழியை வகுத்தால் தான், எதிர்காலத்தில் இன்னும் வளர முடியும்.
முன்பு நாட்டில் வந்து சுரண்டிய வெள்ளையர்கள், தற்போது தமது நாட்டிற்கு அழைத்து எமது மக்களைச் சுரண்டுகின்றார்கள்..! குறைந்த
சம்பளத்தில் நிறைய வேலைகளைக் கறக்கின்றார்கள்..! அதற்கு அடிபணிந்து எம்மவர்கள் வாழ்கின்றார்கள்..!
இதை உடைக்கும் காலத்தில் தான் எமது நாடுகள்
வளர்ச்சி பெறும். நாமும் உண்மையான விடுதலை பெறுவோம்.
இந்தத்திரைப்படம் எப்படி நாம் சுரண்டப்பட்டோம் என்பதை மிகவும்
சுருக்கமாக புரியவைத்துள்ளது..!
இந்தத் திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ஆ.கெ.கோகிலன்
16-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக