கொடுத்து வைத்துள்ளேன்..!

 


 


கொடுப்பதற்கு கொடுத்து வைக்கவேண்டும் என்று கடந்த வார அனுபவத்தில் சொன்னேன். இந்த வாரம் கொடுத்து வைத்ததை உணர்ந்தேன். இரண்டு பேருக்கு அதுவும் ஆண்களுக்கு உதவக்கூடிய சூழல் அமைந்தது..!

ஒரு இளைஞர் நீண்ட நேரமாக எனக்குப் பக்கத்திலேயே நின்று வந்தார். எனது மகளின் வயதை ஒத்தவர். ஒரு கட்டத்தில் அவரைக்கூப்பிட்டு உட்கார வைக்க அவரும் ஆமோதித்தார். சின்னவர் என்பதால் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டார்..!  நீண்ட நேரம் என்னாலும் நிற்கமுடியாது என்பதால், வவுனியா வந்ததும், அவரைத் தட்டியெழுப்பி கொஞ்ச நேரம் நான் இருந்தேன். கொரோபொத்தான தாண்டும் போது எனக்கு பக்கத்தில் நிறையப் பெண்கள் நின்று வந்தார்கள்..! கால் வைக்கவே அவர்களுக்கு இடமில்லை. நேற்று வழமையைவிட கூட்டம் அதிகம். அதுவும் நல்லூர் தேர் என்பதால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் யாழ் வந்துள்ளார்கள். அதுமாத்திரமன்றி, எமது மக்கள் பலர்,  புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்துள்ளார்கள். அப்படியானவர்களே நின்று தான் வந்தார்கள்..!

வெளிநாடு என்பதால் ஒரு ஓட்டோவிலோ அல்லது பிக்மீ காரிலோ அல்லது வானிலோ போயிருக்கலாம். பொருளாதாரம் உலகிலே பல தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது. அத்தியாவசியங்களை விட, அநாவசியமானவை மக்களின் பெரும் பணத்தை கறக்கின்றன..! பல புதிய தொழில்களும், முதலாளிகளும், அதற்கான வாடிக்கையாளர்களும் நிறைந்துள்ளார்கள்..!

இந்தச்சூழலில் யாரையும் குறை சொல்லாமல், அவரவர் தமது வசதி வாய்ப்புக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயற்பட வேண்டியது தான்.

முன்னாலுள்ள பெண்களில் சற்று வயதானவரிடம் கேட்டேன், உட்கார விரும்புகின்றீர்களா என்று..! அவரும் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு நின்றார்..! ஒரு சமயம் நான் பிடிக்கும் சீற்றின் கம்பியிலேயே படுத்துவிட்டார். பார்க்கப் பாவமாக இருந்தது..! அங்கே மேலும் பல பெண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அதில் ஒருவர் நான் பஸ்ஸில் ஏறிய போது எனது சீற்றில் உடகார்ந்து இருந்தார்..! பின்னர் நான் சென்று, இந்த சீற்றை நான் புக்பண்ணியுள்ளேன்  என்று சொன்னதும், சங்கடப்பட்டுக்கொண்டு எழுந்து சென்று தள்ளி நின்றார்..! யாழ்ப்பாணத்தில் நிற்கத் தொடங்கியவர் ஹொரோபொத்தான தாண்டியும் நின்றுகொண்டே இருந்தார்..!  அவருக்கு உதவாமல் அருகிலுள்ள பெண்ணுக்கு உதவ வெளிக்கிடுவது மனதிற்கு ஏதோ போல் இருக்க, சுற்றுமுற்றும் பார்த்தேன். என்னால் உதவ முடியுமா என்ற சந்தேகமே வந்தது..! அவ்வளவு சனம்..! நான் நின்றால் இன்னும் கூட இடம் தேவைப்படும்.  கம்பியில் படுத்த பெண்ணைப்பார்க்க பாவமாக இருக்க ,கேட்டேன் இருக்கப்போகின்றீர்களா..? என்று. உடனே அவர், “நீங்கள் எழுந்து நிற்க இடம் போதாது” என்றும் “பராவாயில்லை” என்றும் சொன்னது எனக்கு சற்று சந்தோசமாக இருந்தது. இது நடந்து சில நிமிடங்களில் பின்னால் நின்ற ஒரு முதியவர், எனக்கு கால் கடுக்கின்றது..! “கொஞ்ச நேரம் இருக்க சீற் தருவீங்களா..?” என்று கேட்டார். எனக்கு  மிகச்சந்தோசமாக இருந்தது. கொடுப்பதற்கு வாய்ப்பு சும்மா கிடைக்காது.  இது ஒரு நியாயமான சூழல். பெண்களில் யாருக்கு கொடுப்பது என்பதே தீர்மானிக்க கஷ்டமான சூழலில், அவரை இருக்கவிட்டு எழுந்து நின்றேன். சனம் சற்று சங்கடப்பட்டார்கள். அவர்களது இடம் சற்று எனக்கும் நிற்கத் தேவைப்பட்டது..! அனைவரும் சிறிது நேரத்தில் சாதாரணமாகிவிட்டோம்.

பணம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது அல்ல..! எம்மால் இயன்ற எத்தனையோ சேவைகளை நம் மற்றவர்களுக்குச் செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் மனநிம்மதிக்கு அளவே கிடையாது..!

கொடுக்க வாய்ப்புக் கிடைப்பதும் ஒரு கொடுப்பனை தான்..! அதை ஏற்படுத்தித் தருவதும் செய்விப்பதும் இயற்கையே (இறைவனே...!).

 

ஆ.கெ.கோகிலன்

02-09-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!