பூனையின் செயல்..!
இரவு, இருவர் பிறந்த தின வீட்டுக்கொண்டாட்டம் முடித்துப்
படுத்தது தான் விடிந்த பின்னரே எழுந்தேன். வழமைபோல் கடமைகளைச் செய்தாலும், சில விடயங்களைச்
செய்யமுடியாது போய்விட்டது. சிவப்புக்குளவியின் குத்தல், கையை மடக்க இயலாத அளவிற்கு
வீங்க வைத்துவிட்டது..!
அதனால் உடற்பயிற்சி தவறியது. அதேபோல், வேறும் சில விடயங்கள்
தவறிவிட்டது.
போனவாரத்தில் இருந்து, ஒரு பல்லுக்குள் ஏதோ ஒன்று போய் அடைக்க,
அது வலிக்கத்தொடங்கி, பின்னர் அதை எடுத்ததன் பின்னர் இன்னும் வலி கூடியுள்ளது.
எனக்கு லீவு வந்தால், இப்படியான பிரச்சனைகள் எல்லாம் டக்கு
டக்கு என்று வந்துவிடும்.! வேலைநாட்களில் இப்படியாக வருவது மிகக்குறைவு..!
உடற்பயிற்சி செய்யாத அலுப்புடன், தேநீரைப் பருகிவிட்டு இருக்கும்
போது, சிறிய புடையன் பாம்பு ஒன்று, பழைய வீட்டிற்குள் வர, எமது பூனையார் தனது வீரத்தைக்காட்டி,
எமக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்..! தெரியாத்தனமாக யாரையாவது கடித்து இருந்தால்,
நிலைமை கடும் ஆபத்தாக மாறியிருக்கும்..! பூனையாருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும்.
அது தனது கடமையைச் சிறப்பாகச் செய்வதாக உணர்கின்றேன். அடிக்கடி
குட்டிகள் போடும். எலிகளைத் துரத்தும். மூத்த மகளின் சொல்லுக்கு கீழ்படியும். வீட்டில்
நானில்லாவிட்டாலும், பாதுகாப்பு கடமையையும் செய்யும். சில வேளைகளில் என்னிடம் கோபம்
கொண்டு, மொட்டை மாடியில் அசிங்கத்தையும் செய்துவிடும்..!
நான் தான் பொதுவாக விலங்குகளிடம் பற்றுக்காட்டுவதில்லை. நாய்,
பூனை என்றால் எனக்கு, பொதுவாகப் பிடிப்பதில்லை. அவற்றை தூரவாகவே வைப்பேன். ஆனால் வீட்டில்
மற்றவர்கள் எல்லாம் தலைகீழாகச் செயற்படுவார்கள்..!
கடந்த இரண்டு நாட்கள் தேரைகளின் தொல்லையும் அதிகரிக்க, சொப்பினுக்குள்
(Shopping Bag) அடக்கம் செய்து தூர எறிந்தேன்..!
உண்மையில் நாம், விலங்குகளையும், ஏனைய உயிரினங்களையும் சகிக்க
வேண்டும். இந்தப்பூமி எமக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. பிரபஞ்ச உயிர்கள் அனைத்திற்கும்
பொதுவானது. அனுசரித்துப்போவதே நாம் செய்ய வேண்டியது. ஆனால் 55 வயது தாண்டியும் அந்தப்
பக்குவம் வரமாட்டேங்கிது. என்ன செய்ய ..? கொலைக்கோபம் வருகின்றது..?
நல்லவேளை, அண்மைய காலங்களில், மனிதர்களுடன் ஓரளவிற்கு அன்பாகவும்,
பாதிப்பை ஏற்படுத்தாக வகையிலும் பழகுகின்றேன்..!
இல்லையாயின் தொடரும் பிரச்சனைகளுக்கு அளவே இருக்காது.
ஆ.கெ.கோகிலன்
16-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக