ராயன்..!
தனுஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தொய்வில்லாமல் விறு விறு என்று
திரைகதை சென்றது..!
அது மாத்திரமன்றி காட்சியமைப்புக்களும், பின்னணி இசையும் சிறப்பாக
இருந்தது..! ஏ.ஆர் ரகுமான் கலக்கியிருந்தார்.
படத்தில் நடித்த பெரும்பாலானோர் உயிரைக்கொடுத்து நடித்திருக்கின்றார்கள்
என்பது உண்மையில் புல்லரித்தது..! அவ்வளவு கொலைகள்..! உண்மையில் பலர் படத்தில் உயிரைக்
கொடுத்துள்ளார்கள்..!
மனிதன் ஒரு விலங்கு தான், என்பதை நிரூபிக்க வந்திருக்கும் மேலும் ஒரு
சிறந்த படம் இந்த ராயன் என்பதை இன்னொருமுறை
அடித்துச்சொல்லலாம்.
படத்தின் மையநாதமே அடிதடி தான்..!
படத்தின் தொடக்கத்திலே தாய், தந்தை இல்லாமல் மூன்று அண்ணன்களும் ஒரு
தங்கையும் சேர்ந்து, ஒரு கொலையுடன் உயிர் பிழைத்து வேறோர் சென்று, அங்கு பிழைக்க, நல்ல
ஒரு தொழில் செய்தாலும், வம்பு வலிய வர, அதற்குள் மாட்டி அண்ணன்
தம்பிகளுக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட்டு, ஆளாளுக்கு காயப்படுவதும்,
இரங்குவதும், பின்னர் வெட்டிக்கொல்வதும் என்று பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வது மாத்திரமன்றி,
தங்கையையும் கொலை செய்யும் அளவிற்கு வீரப்பெண்ணாக மாற்றி, அவளும் அண்ணனுக்காக இன்னொரு
அண்ணனை போட்டுத்தள்ளும் அளவிற்கு தனுஷின் சிந்தனை சென்றது வேதனையளிக்கின்றது..!
இறுதியில் மூத்த அண்ணனும், கடைசித்தங்கையும், இரண்டாவது அண்ணனின் குழந்தையை
வைத்திருக்க படம் முடிகின்றது..!
பார்க்கும்வரை மிக நன்றாக இருந்தாலும் முடியும் போது, ஏன் அண்ணன் இவ்வளவு
கஷ்டப்பட்டான்..? என்ற கேள்விக்கு விடையே கிடைக்கவில்லை..!
சிலவேளை, அண்ணன் வேறுவழிகளில் தம்பிகளை திருத்தி, எல்லோரும் வாழக்கூடிய
சூழலிற்கு கொண்டுவந்திருந்தால், இந்தக்கதை வழமையானது என்று, எமது மக்கள் சொல்லிவிடுவார்களோ
என்று பயந்தது புரிகின்றது..! அதற்குப் பதில் சொல்ல, விலங்காகச் சிந்தித்துள்ளார்..!
இப்படியும் கதையை முடிக்கலாம் தானே..! என்றால்
ஆம் என்று தான் சொல்லியிருப்பார்..! இந்தக்கதையை எப்படியும் முடித்திருக்கலாம். சில
வேளை, எனது வயதால் இவ்வாறு தோன்றுகின்றதோ தெரியவில்லை..! நல்ல விடயங்களை வரவேற்கலாம்.
ஆனால் நன்றாக இருக்கின்றது என்பதற்காக சமூகத்திற்கு பொருத்தமில்லாத கதைகளை எடுக்கக்கூடாது. விலங்குகளாக இருக்கும் மனிதர் கூட்டத்தை, அறிவின்
ஊடாக மேலும் நல்ல மனிதர்களாக மாற்ற முற்படவேண்டும். அதுவே ஆரோக்கியமானது..!
இப்படியான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் அவ்வாறு பயன்படுத்தி,
மறைமுகமாக மக்களுக்கு நல்லறிவை புகுத்த வேண்டும். மாறாக, நன்றாக ரசிக்கும் வகையில்
கதையை எடுத்து மக்களின் மனங்களில் கொடூரமான எண்ணங்களை விதைப்பது, சமூகத்திற்கு கேடாக
அமையும் என்பது எனது கருத்து.
வில்லன்கள் சரணவன், எஸ்.ஜே.சூரியா போன்ற எல்லோரும் நன்றாக நடித்து இருந்தார்கள்..!
துசாராவின் நடிப்பு தனுஷிற்கு நிகராக இருந்தது..! தனுஷின் உண்மையான அண்ணன் செல்வராகவனின்
நடிப்பும் யதார்த்தமாக இருந்தது..! ஏனைய தம்பிகள் காளிதாஸ் மற்றும் திலீபனின் நடிப்பும்
சிறப்பு. தனுஷ் வழமையைவிட ஜோடி இல்லாமல் தங்கையுடன்
நடித்தது புதுமையாக இருந்தது..!
கலாநிதி மாறனுக்கு தனுஷின் திறமைமீது அலாதி நம்பிக்கையுண்டு. அதன் அடிப்படையிலேயே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார்.
தனுஷின் ஆளுமை மிகச் சிறப்பாக வெளிப்பட்டது உண்மை. அது நல்ல வழியில் வெளிப்பட வேண்டும்
என்பது எனது விருப்பம்.
ஆ.கெ.கோகிலன்
10-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக