பப்லி பௌன்சர் (Babli Bouncer)

 


நடிகை தமன்னா நடித்த ஒரு இந்திப்படத்தின் தமிழாக்கத்தை பார்த்தேன். எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு நம்பிக்கை தரும் நல்ல படமாக இருக்கும் என்று..! ஒவ்வொரு பெண்ணும் பார்க்கவேண்டிய படம் என்று இதனைச்சொல்லலாம்.

எல்லோருக்கும் படிக்க வாய்ப்போ அல்லது அதன்மேல் ஆர்வமோ வருவதில்லை. சிலருக்குத் தான்  அது அமையும். இந்தக்கதையில்  கிராமத்தில் எதையும் பற்றிக்கவலைப்படாத, தந்தையார் பழக்கும் மல்யுத்தம் தெரிந்த நாயகிக்கு படிப்பு வரவில்லை.  ஆனால் வயலும் வாழ்வும், விளையாட்டும் என்று இருந்த பெண்ணைக் கல்யாணம் செய்யச்சிலர் பெண் கேட்டுவர, அதை நிராகரித்து, தனக்குப்பிடித்த ஒருவனை மணந்து வாழ ஆசைப்பட்டு, டெல்லி சென்று ஹொட்டல் ஒன்றில் பௌன்சராக வேலைசெய்கின்றாள். அந்த சமயத்தில் அவளின் வேலை, செயற்பாடுகள் பிடிக்காததால், விரும்பியவன் நாயகியை நோகடிக்க, காதலை விடுத்து, தனது தகுதிகளை வளர்த்துக்கொள்கின்றாள். நல்லதுகளைச் செய்கின்றாள். சமூகத்தால் அங்கீகாரம் கிடைத்து, மாநில முதல்வரால் அவளைப் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றாள். 


நாயகியின் காதலை முதலில் ஏற்காதவன் திரும்பவர, அவனில் ஆர்வம் காட்டாமல், தன்னைப்போல் பல பெண்பௌன்சர்களை உருவாக்கி, பெண்களுக்கு நம்பிக்கை தரும் நட்சத்திரமாக மாறுகின்றாள். ஒருவனை கரம்பிடித்து, அவனுக்கு பிள்ளைகளைப் பெத்து தாயாவதை தவிர்த்து, தன்நம்பிக்கையுடன் வாழ நினைக்கும் பெண்களுக்கு உதவும் மங்கையாகத் திகழ்கின்றாள். 


இந்த நிலையில் இவளைப்போல் இருந்த ஆண் பௌன்சர் ஒருவர், நாயகியைக்காதலிக்க, அவனைக்கல்யாணம் முடிப்பதாகப் பொய் சொன்னவள்,  பின்னர் உண்மையை தெரிவித்து அவனுடனான நட்பைத் தொடர்கின்றாள்.  காலம் வரும்போது, தனக்கு பிடித்த நியாயமான நபரை அவள் மணம் முடிக்கலாம். 


Vineet Jain

2022இல் Disney+ hotstar இல் வெளிவந்த இந்தத்திரைப்படத்தை  வினித் ஜெயின் (Vineet Jain) மற்றும் ஸ்டார் ஸ்ரூடியோ (Star Studio)  படத்தைத் தயாரிக்க, மதுர் பண்டர்கர் (Madhur Bhandarkar) என்பவர் இயக்கியிருந்தார். 

 Madhur Bhandarkar

மொழிமாற்றுப்படம் என்பதால் டப்பிங் அவ்வளவு தரமாக இருக்கவில்லை. அதேபோல் பாடல்களும் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இக்கதையின் மையக்கருத்தை, அனைத்துப் பெண்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில காட்சிகளில் தமன்னா தனது, இமேஜை பொருட்படுத்தாது நடித்திருந்தார். ஏப்பம் விடுவது, மூக்கினுள் கைவிடுவது, வாயு வெளிவிடுவது போன்ற சில காட்சிகள்  எனக்கே அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் படத்தின் கதைக்கு அவை தேவையானதாக இருந்தது என்னவோ உண்மை தான்.

 

                                                               இயக்குனருடன் தமன்னா

ஆ.கெ.கோகிலன்

23-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!