வாரிசு..!

 



மாஸ் நடிகர்கள் என்றால் இப்படியான பெயர்களிலும் படங்கள் வரவேண்டும் போல் இருக்கின்றது. ரஜினிக்கு ஒரு “அடுத்த வாரிசு..!” அதேபோல் இளையதளபதி விஜய்க்கு  ஒரு “வாரிசு..!”

நிறைய ரசிகர்களைக்கொண்ட விஜய்க்கு படங்களின் கதைகள் தற்போது சரியாக அமையவில்லையோ தெரியவில்லை. பொறுமையாக இருந்து பார்க்க, பல இடங்களில் சிரமமாக இருக்கின்றது..!  நல்ல வேளை நான் தியேட்டர் போய் பார்க்கவில்லை. போய் இருந்தால் நொந்திருப்பேன்.  அப்படிப் படத்தை எடுத்து வைத்திருக்கின்றார்கள். இவ்வளவு நடிகர்களை போட்டு வீணடித்தது மாதிரியே எனக்கு இருந்தது.

நடிகர் விஜய்க்கு நன்றாகப் பாடவும், ஆடவும் வரும் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியும். அதைத்தாண்டி நல்ல கதைகளுள்ள, காலத்திற்குத் தேவையான யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால் அவரின் ரசிகர்கள் தாண்டி மற்றவர்களும் பார்க்கலாம்.  படம் வசூல்ரீதியில் வெற்றிபெற விஜயின் ரசிகர்கள் பார்த்தாலே போதும். ஆனால் ஒரு படம் எந்த ஊடகத்தில் எப்போது பார்த்தாலும் ஏதாவது நல்ல தாக்கங்களை ஏற்படுத்தினால், அது தான் சிறந்த படம் என்பது எனது நிலைப்பாடு.

இந்தப்படத்தில் இருக்கும் மையக்கரு உண்மையில் நல்லதே..! அதை சொல்ல எடுத்த விதமே கடுப்பாகின்றது. ஒற்றுமை வேண்டும். அதுவும் குடும்பத்திற்குள் அது மிக மிக முக்கியம். விட்டுக்கொடுத்து, அனுசரித்து, அன்பால் அரவணைத்துச் சென்றால் நிச்சயம் அந்தக் குடும்பம் சமூகத்திற்கு பயனுள்ள குடும்பமாக, நாட்டிற்கு ஏன் உலகத்திற்கே பயனுள்ள குடும்பமாக மாறும்.  ஒரு மனிதனின் சாதனை என்பது அவன் எவ்வளவு சம்பாதித்தான் என்பதில் இருப்பதில்லை. எப்படி நிம்மதியாக வாழ்ந்து இறந்தான் என்பதில் இருக்கின்றது.

இந்தக்கதை விஜய்க்குத்தான் பொருத்தம். அப்பா, அம்மாவை பிரிந்து மனைவி பிள்ளைகளுடன் வாழும் விஜய், இறுதியில் சொல்லும் வசனம் பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் எனது ஹீரோ அப்பா தான் என்று தந்தை சந்திரசேகருக்கு சொல்லியுள்ளார். அதே நேரம் தமிழ்நாட்டிற்கும் சொல்லியுள்ளார்.  மனைவியால் தான் குடும்பத்தில் பிளவு வந்தது என்பது போல் மனைவியை விவாகரத்துப் பண்ணப்போவதாகவும் படம் வந்தவேளை செய்திகள் வந்தன.

உண்மையில் குடும்பம் என்றால் எல்லாம் இருக்கும். தீய எண்ணங்களை விடுத்து, தவறுகளைத் திருத்தி ஒற்றுமையாக வாழவும் வாழ வைக்கவும் முயலும் மனிதனே  நிஜ ஹீரோ..! அப்படி மாற நடிகர் விஜய்யும் முயலவேண்டும்.


சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த, சாம், ஜெயசுதா, ராஸ்மிகா, சங்கீதா,  போன்ற நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. ஆனால் ஒன்றிலும் புதுமையில்லை. அனைத்தும் பார்த்த மாதிரியே இருந்தது.


சண்டைக்காட்சிகளும் வெறுப்பையே ஏற்படுத்தியது.  ஏனைய தொழில்நுடப கலைஞர்கள் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்தாலும்,  திரைக்கதை சரியாக அமைய வேண்டும். தெலுங்கு இயக்குனர் வம்சி படைபள்ளி (Vamshi Paidipally) பல நல்ல படங்களைக்கொடுத்தவர்..! கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா என்ற ஒரு இனிமையான படத்தைக் கொடுத்தவர்.  விஜய்க்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தைக் கொடுத்து, அனைவரையும் ரசிக்க வைக்க அவரும் முயற்சிக்கவில்லை. மற்றவர்களும் முயற்சிக்கின்றார்கள் இல்லை..! ரசிகர்கள் இருப்பதால், வணிகவெற்றியே போதும் என நினைக்கின்றார்கள் போலும்..!

 


ஆ.கெ.கோகிலன்

16-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!