தந்தையின் பாசம்..!

 


எல்லோரும் ஒரு நாள் மரணிப்போம் என்று தெரிந்தும், போட்டி பொறாமைகளுடனே மனித இனம் பயணிக்கின்றது..! அறிவு பெற்ற விலங்காக இருந்தாலும், சுயநல எண்ணங்களால் பல அநியாயங்களை எம்மையறியாமலே நாம் செய்வதற்கான வாய்ப்புக்கள் வருவதுண்டு. அதை போற போக்கில் கண்டுக்காமல் செல்வதும், தவிர்க்க முடியாத ஒரு விடயமாக காலச்சூழல் எம்மை மாற்றியுள்ளது..! சுயநலங்களின் தொகுப்பாகவே  இப்போது, பொது நலத்தைப் பார்க்கவேண்டியுள்ளது..!

இவ்வாறான ஆசைக்குள் மாட்டுண்ட மனித இனத்தில், எதுவும் நிலையற்றது என்பதை, இயற்கையால் ஏற்படும் அனர்த்தங்கள் பல வலிகளையும் வடுக்களையும் கொடுத்துப் பாடமாகப்புகட்டிவிட்டுச் செல்கின்றது..!

அந்தவகையில் துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர். கோடிக்கணக்கில் மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். எத்தனையோ இலட்சம் மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அநாதரவாக தவிக்கின்றனர்.  ஏறக்குறைய 450 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் துருக்கி மாநிலங்கள் நொருங்கிப் போயுள்ளன..!  போதாதற்கு, அயல் நாடான சிரியாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் இதே நிலைமை தான். பேரு நாட்டிலும் தாக்கம் இருக்கின்றது. இவ்வாறான பாதிப்புகளுக்கு நடுவே ஒரு புகைப்படம் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடிபாடுகளுக்குள் மாட்டி இறந்த மகளின் கையைப்பிடித்துக்கொண்டு ஒரு தந்தை பல  மணிநேரம் அந்த இடத்தைவிட்டு நகரமுடியாமல் மனம்பேதலித்து,  கொடும்பனியிலும் அப்படியே இருக்கின்றார்..!

அந்தப்படத்தைப் பார்க்கும் போது

நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து அடிப்பது போல் இருக்கின்றது. பாசம் என்ற ஒன்று ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கின்றது. இப்படித்தான் இயற்கை..! மரணம் பொதுவானது தான்..! அதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும், அது அவரவர்களுக்கு வரும்போது தான் உண்மையான நிலை புரியும். நான் எப்போதும், பிள்ளைகளின் மரணத்தைப் பார்க்கும் துர்பாக்கியம் பெற்ற பெற்றோராக இருக்கக்கூடாது என்பதற்காகவே இறைவனை வேண்டுகின்றேன். பூமிக்கு வந்த ஒழுங்கில் போகவேண்டும் என்பதே எனது விருப்பம். மாறி நடக்கும் போது, மிக வேதனையாக இருக்கின்றது.

என்ன செய்வது..?

எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

 



ஆ.கெ.கோகிலன்

08-02-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!