துணிவு..!

 


தற்போதைய சூழலில் நிதி நிறுவனங்களினதும், வங்கிகளினதும் நிலைப்பாடு மிகப்பயங்கரமாக இருக்கின்றது என்பது யாருமே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஒரு உண்மை தான்..! 

இதனை அடிப்படையாகக் கொண்டு, மக்களிடம்   பணத்தைக் கொள்ளையடிக்கும் வங்கியில் இருந்து, அந்தப்பணத்தை திரும்ப எடுக்கும் ஒரு விறுவிறுப்பான முயற்சியாகப் படம் உள்ளது.  No Guts, No Glory  என்ற  Tag உடன் படம் துடங்குகின்றது.  தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே சண்டை தான்..!  எல்லாம் ஒரு அளவுக்குள்  இருக்க வேண்டும்.  என்னால் தொடர்ந்து படத்தைப்பார்க்க முடியவில்லை. நல்லவேளை தியேட்டர் போகவில்லை. இல்லை என்றால் ரிக்கெட் காசு வீண்..!

வீடியோவில் படத்தைப் பார்த்ததால், அதிக சண்டைகள்  படத்தை வெறுக்கச்செய்து, வேண்டாம், எழும்பலாம்.. என்னும் தறுவாயிலே, படத்தின் கதை புரிந்தது..!  

பின்னர் படம் ஓரளவு பார்க்கக்கூடியதாக இருந்தது. நரைத்த தலையுடன் அஜித்தை அட்டகாசம் செய்ய வைத்திருக்கின்றார் இயக்குனர். பல இடங்களில் நல்லா இருக்கின்றது. சில இடங்களில் கடுப்பாகவும் இருக்கின்றது.

படமே முழுக்கச் சண்டையாக இருப்பதால், சண்டைப்பிரியர்களுக்கு படம் பிடிக்கலாம். என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு, பொறுமையுடன் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. 

“சதுரங்கவேட்டை” மற்றும் கார்த்தியை வைத்து “தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர், இவ்வளவு பொருட்செலவில்  இந்தப்படத்தை இயக்கியதற்கு பதிலாக மாஸ் நடிகர் தலை அஜித்தை வைத்து நல்ல ஒரு கதையில் நடிக்க வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து.

இக்கதை நேரடியாக மக்களையும், நிதிநிறுவனங்களையும் சிக்கலுக்குள் மாட்டியுள்ளது..! உலகே வங்கிகளை நம்பி இருக்கும் இந்தக்காலத்தில் வங்கிகளையே நம்பமுடியவில்லை என்றால் எங்கே போவது..?

நாயகியாக மஞ்சு வாரியாரும், அஜித்துக்கு நிகராக  நடித்து (அடித்து) இருந்தார். இப்படத்திலும் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பிக்பொக்ஸ் போட்டியாளர்கள் பலர் படத்தில் இருந்தார்கள்..!

பாடல்கள், பின்னணி இசை,  ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.  படத்தின் கதையே, சண்டைகளுக்கு இடையில் இருப்பதால் ரசிக்கக் கஷ்டமாக இருந்தாலும், கொஞ்சம் புதுமையாக இருந்தது உண்மைதான்..!

திறமையான  இயக்குனர் என முன்பே நிரூபித்த வினோத்  இன்னும் நல்ல கதைகளைப் படமாக்கலாம்.  இப்படியான பொருட்செலவுள்ள படங்களை  எடுப்பது வணிக வெற்றிக்கு இடையூறாகவும் அமையலாம். ஆனால் இந்தப்படமும்  விஜயின் “வாரிசு” போல் அஜித் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது..! 

மாஸ் நடிகர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவென்று திரைக்கதையில் சொதப்பும் படங்களில்  இந்நடிகர்கள் நடிப்பது கவலையளிக்கின்றது. கொள்ளையடிப்பவனிடம் கொள்ளையடிப்பது தப்பே இல்லை. அது நியாயம் எனச்சொல்கின்றது படம்.

 


ஆ.கெ.கோகிலன்

18-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!