குலுகுலு..!
யூடியூபில் ஒரு சமயம் பார்க்கும் போது குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்த ஒரு ட்ரைய்லராக (Trailer) இந்தப்படத்தின் ட்ரைய்லர் இருந்தது..! குறிப்பாக அந்த ட்ரைய்லரில் நடிகர் சந்தானம் வித்தியசமாக நடித்திருந்தார். அதனாலே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் படம் வெளிவந்து மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறாததால் அந்த ஆவலும் குறைந்துவிட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் டிவிடியை வாங்கி, பல நாட்களாக பார்க்க மனமில்லாமல் வைத்திருந்தேன். நேற்று ஒரு எண்ணம் வர பார்க்க முனைந்தேன். எழுத்தோட்டம் தொடங்க முன்னரே வெறுத்துவிட்டது. பின்னர் தொடர்ந்து பார்க்காமல் படுத்துவிட்டேன்.
இன்று எப்படியாவது பார்த்து முடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு அமர்ந்தேன். படம் நகரும் விதமே புதிதாக இருந்தது..! இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் பார்க்காத கதைசொல்லும் பாணி ஒன்று புரிந்தது. பல இடங்களில் புதுமையான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. வித்தியாசமாக இருப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் செய்து இருந்தார்கள். படத்தின் கதை என்று பார்த்தால், கூகுள் என்று அழைக்கப்படுகின்ற ஒருவனின் வாழ்க்கைப் பயணமே கதை..!
அமேசான் காடுகளில் வாழ்ந்த ஒரு அரிதான இனத்தில் பிறந்து, காட்டுத்தீயால் தந்தையை இழந்து, ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலால் தாயை இழந்து, சொந்தமொழியே பேசமுடியாமல் ஆங்கிலம் போன்ற பல மொழிகள் கற்று நாடோடி வாழ்க்கை வாழும் ஒருவன், எல்லோருக்கும் உதவுவதே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கின்றான். அந்தப்பயணத்தில் மதுபானக்கொம்பனி முதலாளியின் மறைவால் முதல் தாரப்பிள்ளைகளுக்கும், இரண்டாம் தார மகளுக்குமான உரிமைப்போர் ஒரு பக்கம், நண்பனைக்கடத்தியதால் அவனை மீட்க புறப்படும் ஒரு கூட்டம், நடுவில் சுவாரசியத்திற்காக பப்ஜி(Pubg) விளையாடும் வில்லனின் தம்பியும், அவனது அடியாட்களும் என்று ஒரு கூட்டம், பொதுமக்களிடம் வம்பிழுக்கும் பொலிஸூம், அவர்களது சகாக்களும் என கூட்டமும் என்று படம் முழுக்க கூட்டம் கூட்டமாக அலைகின்றார்கள். போதாததற்கு நாயகனும் அவர்களுடன் அலைகின்றான். இவற்றுக்கு நடுவில் காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியேறும் காதலி, வயதுபோகும் (Gerascophobia - Agephobia) மனநோயால் பாதிக்கப்பட்டு, இறுதியில் கூகுளின் உதவியால் தீர்க்கப்படுகின்றார். இவற்றுக்கு இடையே இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முனையும் இளைஞர்கள் இருவர்களை மடக்கிக்கொல்லும் காட்சி வித்தியாசமாக இருந்தது. கழிப்பறைக்காவலன் பணமோசடி செய்யும் காட்சியும் முன்பு பார்த்ததுபோல் இல்லை. வசனங்கள், சிந்தனைகள் புதுமையாக இருந்தது. சந்தோஷ் நாராயணின் இசை, பாடல்கள் போன்றன சிறப்பாக இருந்தன. ஒளிப்பதிவும் அவ்வாறே அமைந்தது.
ரத்னகுமார் என்பவர் கதையெழுதி இயக்கியிருந்தார். வித்தியாசப் பிரியர்களுக்கு விருந்து..! நகைச்சுவைப் பாணியில் கதை நகர்ந்தது சிலருக்கு போரடிக்கலாம். எனக்கு என்னவோ படம் பிடித்து இருந்தது. சொந்தமொழி பேச ஆட்கள் இல்லை என்றால் எப்படியிருக்கும்..? படத்தில் இப்படியான ஒரு காட்சி வருகின்றது. அதனூடாக, நாடற்று அலையும் இலங்கைத்தமிழனின் உணர்வும் படத்தில் கலக்கப்பட்டுள்ளது..!
சந்தானம், பிரதீப் ராவத், மரியம் ஜோர்ஜ் போன்றவர்களைத் தவிரப் பலர் அறிமுகமில்லாதவர்களாக இருந்தார்கள். உதவி என்றால் ஓடிப்போய் செய்பவர்கள், படும் துன்பங்களும் ஏராளம்..! இருந்தாலும், அன்புக்காகச் செய்யும் உதவிகளுக்கு பரிகாரமாக கஷ்டங்கள் வந்தாலும் தாங்கலாம் என்ற கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்தது. நல்லவர்களையே இந்த உலகம் அதிகம் சந்தேகிக்கும்..! காயப்படுத்தும்..! தொடர்ந்து கலங்க வைக்கும்..!
எல்லாருக்கும் படம் புரியுமா என்பது கேள்விக்குறி..! இருந்தாலும் வித்தியாசமான சிந்தனைக்காக இந்தப்படத்தைப்
பார்க்கலாம்.
ஆ.கெ.கோகிலன்
22-02-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக