வாசமான தண்ணீர்..!
நேற்று மாலையும், எமது கிணத்தடியில் ஒரு வாசம் வந்தது. கிணற்றிற்கு
வலைபோட்டு மூடியதால் கிணற்றைப் பார்க்கவில்லை. சுற்றியுள்ள இடங்களை பார்த்தேன். பகல்
மறையும் நேரம் என்பதால் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. அந்நேரம் நான் கண்ணாடியும்
அணிந்திருக்கவில்லை. அதுவும் இன்னொரு காரணம், மணம் எங்கிருந்து வருகின்றது என்பதை அறியமுடியாமல்
போனதற்கு..!
ஒருவாறு பொழுது விடிந்தது. நான் எழும்ப சிறிது நேரமாகிவிட்டது. விறுவிறு எனக்கடமைகளை முடிக்க நினைத்தேன். சில உடுப்புக்களைத் தோய்க்கவும் நினைத்தேன். அவ்வாறு நினைத்தமாதிரி செய்யும் போது தண்ணீரில் ஒரு மணம் வந்தது. ஏதோ ஒன்று செத்து கிணத்திற்குள் விழுந்துவிட்டது எனத்தோன்றியது. அந்நேரம் மனைவியும் ஒரு குட்டிநாயை துரத்தும் சத்தமும் கேட்டது. பின்னர் குளித்துவிட்டுவந்து, கிணற்றுக்குள் ஏதோ செத்து இருக்கின்றது என்ற விடயத்தைச் சொல்லப்போக, அவரும் குட்டி நாய் ஒன்று கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளது என்றும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும் சொன்னார். நானும் முதலே நினைத்தது சரியாகவிட்டது..!
வழமைபோல் சுவாமிக்கு பூஜை செய்து, மனைவி தயாரித்த இரண்டு வேளை உணவையும் அவரிடம் கொடுத்து, மற்ற நாய் குட்டிக்குப் போடச்சொன்னேன். அந்த மணம் மனதில் இருப்பதால் என்னால் சாப்பிட முடியவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள். பின்னர் கிணறை இறைப்பதற்கு எனக்கு தெரிந்த நபர்களிடம் கேட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டேன்.
வழியில் தம்பியும் நின்றார். அவரிடமும் விடயத்தைச் சொன்னேன். ஒருவரும் கிடைக்கவில்லை என்றால் தம்பியைக் கூப்பிடலாம்
எனநினைத்துக்கொண்டு, வெளிக்கிட்டு, அருகிலுள்ள கடையில் அப்பம் வாங்கிக்கொண்டு அலுவலகம் வந்தேன்.
முன்பு தம்பியைக் கூப்பிட்டுத்தான் கிணறு கலக்குவது வழக்கம். ஆனால் இப்போது அவருக்கும்
அந்தவேலை செய்வது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் வேறு ஆட்களைத்தேடவேண்டியுள்ளது.
போனவருடம் இரு நாய்குட்டிகள் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்தன. மூத்த மகளும் அதனை வளர்ப்போம் என்றாள். பின்னர் அதற்கான, மருந்துகள் எல்லாம் போட்டு வளர்க்கத் தொடங்கினோம். சில வாரங்களில் இரண்டு நாய்களையும் காணவில்லை. மகளே குழம்பிவிட்டாள். இனி இப்படியான வேலைகளை விடச்சொல்லியும், ஒழுங்காக படிப்பதில் கவனம் செலுத்தவும் வலுயுறுத்தினேன். அவளும் ஒத்துக்கொண்டு, அவ்வாறே செய்தாள்.
திரும்பவும் காலம் இரண்டு நாய் குட்டிகளை எமது வீட்டுக்கு
அனுப்பியுள்ளது. மனைவிக்கு மகளின் குணம் தெரிந்ததால், அவற்றை முதலே துரத்த வெளிக்கிட்டார்.
இறுதியில் எமது கிணத்திலே ஒன்று கண்ணை மூடியுள்ளது. வேறு என்ன செய்ய..? எனக்கு மற்றதைத்
துரத்த மனமில்லை. அதனை சாதாரண முறையில் வளர அனுமதிப்போம். தொட்டு அழையாமல், இயல்பாகவும், இயற்கையாகவும் அது வளர்ந்து வரட்டும்.
நாய்களின் இந்த விளையாட்டால், கிணறு மற்றும் மூன்று தண்ணீர்
தொட்டிகளும் துப்பரவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. காசு போனாலும் சுத்தம் என்பது
மிகத்தேவையானதே. சுத்தமே எமது ஆரோக்கியம்.
நாய்க்குட்டி இறக்காது விட்டால் இது நடந்திருக்காது. இயற்கை எம்மை சுகாதாரமாக இருக்க
வழியமைத்துள்ளது..! அவ்வாறாகவே இந்தச்சூழலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
15-02-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக