பவளப்பாறைகள் (முருங்கைக்கற்பாறைகள்)..!
உலகத்தில் தரையில் வாழும் நாம் கடலைப் பார்த்திருக்கின்றோம். கடலை ரசித்திருக்கின்றோம். பலர் கடலில் குளித்தும் இருக்கின்றோம். எத்தனை பேர் கடலுக்கள் சென்று பார்த்துள்ளீர்கள்..? இதனை எல்லாரும் செய்ய முடியாது. அதற்கான பயிற்சிகள் எடுக்க வேண்டும். அவ்வாறான பயிற்சிகள் எடுத்து, கடலின் அடிக்குச் சென்று பார்த்தால் இன்னோர் புதிய கடலுலகத்தைப் பார்க்க முடியும்..! அவ்வளவு அற்புதமான விடயங்கள் அங்கே இருக்கின்றன. உயிர்கள் இருக்கின்றன. அவற்றோடு நான் கதைக்கும் பவளப்பாறைகளும் (Coral reefs) இருக்கின்றன. இதனை யாரும் சாதாரண பாறைகளாக நோக்க வேண்டாம். இவை கடலில் இருக்கும் ஒர் உயிரங்கி..! அத்துடன் பல உயிர்கள் வாழ்வதற்கு தேவையான பல உதவிகளை இவை வழங்குகின்றன.
Coral Polyps
பவளப்பாறைகள் கடற்கரையோரங்களை புயல்கள் மற்றும் கடலரிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன..! உள்ளூர் சமூகங்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றன. மேலும் பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன. மேலும் உணவு மற்றும் புதிய மருந்துகளின் மூலாதாரமாகவும் உள்ளன. அரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு, வருமானம் மற்றும் பாதுகாப்பிற்காக பவளப்பாறைகளையே நம்பியுள்ளனர்.
பவளப்பாறைகள், பாறைகள் (Rocks) போலல்லாமல், உயிருடன் உள்ளன.
மேலும் தாவரங்களைப் போலல்லாமல், பவளப்பாறைகள் அவற்றின் சொந்த உணவை உருவாக்குவதில்லை.
பவளப்பாறைகள் உண்மையில் விலங்குகள் (Animals). நாம் அடிக்கடி "பவளப்பாறை"
என்று அழைக்கும் பகுதி அல்லது கிளை அல்லது மேடு உண்மையில் பொலிப்புகள் எனப்படும்
ஆயிரக்கணக்கான சிறிய விலங்குகளால் ஆனது.
பூமியில் மிக நீண்ட காலம் வாழும் விலங்குகளாக பவளப்பாறைகள்
உள்ளன. சில பவளப்பாறைகள் 5,000 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
ஃபோப்ஸின் (Forbes) அறிக்கைப்படி, அடுத்த 20 ஆண்டுகளில்
70-90% பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்..! ஏனெனில்
அதிக கடல் வெப்பநிலை (பூமி வெப்பமயமாதல்), கடல் அமிலமயமாக்கல் மற்றும் சூழல் மாசுபடுதல்
ஆகிய காரணங்கள் அவற்றை அச்சுறுத்துகின்றன..! பவளப்பாறைகள் இறக்கும்
விகிதம் அதிகரிப்பது என்பது உலகத்திற்கே ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
பவளப்பாறைகள் இறந்த பின்னர் பாறைகளாக மாறும். அவற்றின் நிறம் மாறும் (Coral Bleaching). ஏறக்குறைய சுண்ணாம்புக்கற்களாக அல்லது பாறைகளாக அவை நிலைமாறும்.
ஆ.கெ.கோகிலன்
15-02-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக