மாட்டிய வண்ணாத்திப்பூச்சி..!
இன்று, சனிக்கிழமை என்றாலும் வேலைக்கு போகவேண்டிய தேவை இருந்தது. அத்துடன் ”யாழ் கலாசார மண்ட மக்கள் கையளிப்பு” என்ற ஒரு நிகழ்விற்கும் அழைப்பிதழ் தரப்பட்டு இருந்தது. அத்துடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய அமைச்சர் போன்ற பல இருநாட்டின் முக்கியஸ்தர்கள் வருவதால், போக முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் சில நிமிடங்கள் முன்பாக அலுவலகம் செல்லத்தீர்மானித்து, அதற்கேற்ப காலைக்கடன்களை நிறைவுசெய்து, மனைவி சுட்ட சூடான வெள்ளைத்தோசையையும் அவசர கதியில் உண்டு, சிறிது நேரம் முன்கூட்டியே வேலைக்குச் செல்ல அனைத்து ஏனைய வீட்டு வேலைகளையும் முடித்து அவசர கதியில் பறந்தேன். அலுவலகத்திற்கு கிட்டவாக எனது முழுக்கைச்சட்டையூடாக ஏதோ ஒன்று உள்ளே நுழைந்துவிட்டது. நேரம் மட்டுமட்டாக இருந்ததால் வீதியில் நின்று அதனை அகற்ற முடியவில்லை.
அது சட்டைக்குள் ஓடித்திரிந்ததை உணர்ந்தேன். அதனை இறுக்கி நெரித்தாலும் சட்டை அழுக்காகும். ரோட்டில்
நின்றும் சட்டையைக் கழற்ற முடியாது. ஒருவாறு சங்கடப்பட்டுக்கொண்டு, கடித்துவிடும் என்ற
ஒரு சிறிய பயத்துடனும் அலுவலகம் சென்றுவிட்டேன்.
விறு விறு என கையொப்பமிட்டு, ஓய்வறைக்குச் சென்று சட்டைகளைக் கழற்றி உதறினேன்,
ஒன்றையும் காணவில்லை. கால்சட்டைக்குள் போய்விட்டதோ என்ற நினைப்போடு, உள் பனியனையும்
கழற்றி உதறினேன்.
உடனே ஒரு பலவர்ண
வண்ணாத்திப்பூச்சி வெளியே வந்து ஒய்வறைச்சுவரில் இருந்தது. எனது போன்கமெராவால்
அதனைப்படமெடுத்தேன். அது சுவரில் அசைவின்றி இருந்தது. அதனுடன் மெனக்கிட நேரம் இன்மையால் நிகழ்வுக்குச்
சென்றேன். அதனை முடித்துக்கொண்டு, ஏறக்குறைய
மதியம் தாண்டி அலுவலகம் வந்து பார்த்தேன்.
அதே இடத்தில் சிறு அசைவுடன் இருந்தது. அந்த அறை முற்றாக மூடியிருப்பதால் அதனால்
வெளியே செல்ல முடியாது. பின்னர் அதனைப் பிடித்து, வெளியே ஒரு மரத்தின் இலைமேல் வைத்துவிட்டுவந்தேன்.
கொஞ்சம் அவரசப்பட்டு இறுக்கி சட்டைக்குள் பிடித்திருந்தால், அது செத்திருக்கும். அத்துடன்
சட்டையையும் அழுக்காக்கியிருக்கும். கொஞ்சம் பதட்டம் இன்மையால், அதுவும் உயிர் தப்பி,
நானும் எனது கடமையை முடிக்கக்கூடியதாக இருந்தது.
ஆ.கெ.கோகிலன்
11-02-2023
கருத்துகள்
கருத்துரையிடுக