ரெயில் பயணம்..!

 



அதிகாலை 4.00 மணி. நாளை பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. நாம் எல்லோரும் கொழும்பில் நிற்கவேண்டும். வீட்டிலுள்ளவர்களுக்கு கண் நோய் வந்துள்ளது..! எனக்கும் மூத்த மகளுக்கும் இன்னும் வரவில்லை. அதற்கு நமது வீட்டின் அமைப்பும், வாழும் முறையும் ஒரு காரணம். இருந்தாலும் நோய் வரவேண்டியிருந்தால் நிச்சயம் வந்து தான் ஆகவேண்டும். சில சமயம் இந்தப்பட்டமளிப்பு விழா, நான் யாழில் இருந்து செல்லும் கடைசி விழாவாகவும் இருக்கலாம். நாம் ஒன்றும் அறியோம் பராபரமே..! ஆனால் நடக்க இருப்பது, நடக்க வேண்டியது தான்.

பொதுவாக எனக்கு இயற்கை கடமைகளைத் தருகின்றபோது நோய்களைத் தருவதில்லை. ஆனால் ஓய்வைத் தருகின்றபோது நோய்கள் வருகின்றன..!

அதனால் எப்படியும் இந்தப்பட்டமளிப்பு விழாவில் கலந்து, எனது பங்கைச் செய்ய நிச்சயம் இயற்கை அனுமதிக்கும்.

எனது மனம் உறுதியாக, வெளிக்கிட்டு கொழும்பு போகச்  சொன்னது..! அதனடிப்படையில் எழுந்து, வழமையான கடமைகளை முடித்துக்கொண்டு, கண்நோய் வந்து, மாறுகின்ற நிலையிலுள்ள மனைவியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு 5.30இற்குக் கிட்டவாக சுன்னாகம் புகையிரத நிலையத்தை அடைந்தேன். பின்னர் மனைவியை மோட்டார் சைக்கிளில் அனுப்பிவிட்டு, சாதாரன வகுப்பு சீட்டை எடுத்துக்கொண்டு, வெளிக்கிட்டேன்.

விரைவுப் புகைவண்டியும் காலை 6.00 மணியளவில் வர, அதில் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன். மிகுதி நேரம் முழுக்க புகைவண்டிப் பெட்டி வாசலில் நின்றபடி இயற்கையை ரசித்தபடியே சென்றேன். மனம் மின அறுதலாக இருந்தது. இன்று சாப்பாடு கொண்டுசெல்லவில்லை. நேற்று மதியம் மற்றும் இரவு மனைவியை சமைக்கவிடவில்லை. கடையில் வாங்கிக்கொடுத்து, சிறிது ஓய்வு எடுக்கச் சொன்னேன். அதேபோல் காலையிலும் ஒன்றும் செய்யவேண்டாம் என்று முன்னரே சொல்லிவிட்டேன். சரி இன்று, சாப்பாடு வரவில்லை என்றால் விரதம் இருப்போம் என்ற விசித்திர எண்ணத்தில் இருக்க, உடனேயே ரொட்டியும், சம்பலும் வந்தது..! விரத எண்ணம் காணாமல் போனது..! வாய்க்குள் ரொட்டியும் சம்பலும் முற்றாக நுழைந்தன..! பசியே வர விடவில்லை..! பின்னர் சோளம், வடை என வந்ததில் பிடித்தவை, வயிற்றுக்குள் சென்றன..!

பயணம் தொடர, இயற்கை மனதை மகிழ்வித்தே வந்தது. வவுனியா தாண்ட சூழல் இன்னும் அழகானது..!  புகை வண்டியும் நிரம்பத்தொடங்கியது. சீற்றைப்பற்றிக்கவலையில்லை..! யார் இருந்தாலும் பராவாயில்லை..! ஆனால் வாசலில் நின்று வெளிக்காட்சிகளை ரசிக்கவே மனம் தூண்டியது. அதனைச் செய்யவே முக்கியத்துவம் கொடுத்தேன். நினைத்தது போல், மக்கள் எல்லோரும் முயற்சியோடு இருப்பதாகத் தோன்றியது..!

வயல்கள் எல்லாம் உழுது நெற்பயிர்கள் நட்டுக்கொண்டு இருந்தார்கள்..! எல்லா இடமும் மழை பெய்வதால், ஈரலிப்பாகவும், மனதிற்கு பசுமையையும் தந்துகொண்டிருந்தன..!

பல இடங்கில் விலங்குகள், பறவைகளின் ஒலிகள் வந்தன..! மயில்கள் நடனம் ஆடின..! இம்முறை நூற்றுக்கணக்கான மயில்களைக்காண முடிந்தது..! மதவாச்சி தொடங்கி, ஏறக்குறைய பொல்காவெல தாண்டும் வரை நிறைய மயில்கள், பெருகி இருந்தன..!  அதேபோல் மக்களும் முயற்சியோடு இருந்தார்கள்..!

பொருளாதாரக்கஷ்டம் என்று பலர் நாட்டை விட்டு ஓட, நின்று போராடி வீட்டையும் நாட்டையும் காக்கப் போராடும் இவர்களும் சோம்பேறிகள் அல்ல..! போராளிகளே..!  உயிர்பயம் அற்ற இடத்தில் இருந்து வாழுவதே பாக்கியம். தற்போது, இலங்கையில் உயிர்பயம் இல்லை. எனவே தொடர்ந்து, முயன்றால் முன்னேறலாம். வெளிநாடுகளில் இரண்டு வேளைகள் உழைக்க முடியும் என்றால், இங்கும் அவ்வாறு முயலலாம் என்பது எனது கருத்து.

இரண்டு மணிக்கு கிட்ட, மருதானை புகைவண்டி நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, ஒரு கடைக்குச்சென்று, சில உடுப்புக்களை வாங்கிக்கொண்டு, மாமா வீடு சென்றேன். மாமா சாயி மந்திர் சென்றதால், மற்ற வயதான உறவினர்களுடன் கதைத்துவிட்டு, பஸ்ஸில் தெஹிவளை வர மணி இரவு ஆறை நெருங்கிவிட்டது.

பின்னர், குளித்து, உண்டு, உறங்கினேன்.

 

ரெயினில் ஏறும்போது விரதத்தைப் பற்றி நினைத்தேன். ஆனால் காலைச்சாப்பாட்டை 8மணிக்கு முன்பே முடித்துவிட்டேன். மதியச் சாப்பாடு சாப்பிட மனம் இல்லை.

பலதை எடுத்ததால் வயிறு நிரம்பி இருந்தது. இரவுச்சாப்பாடு 6 மணிக்கே தேவைப்பட்டது. ஆனால் இரவுச்சாப்பாடு, பிந்தியே வந்தது. பின்னர் தான் புரிந்தது..! இயற்கை மதியச்சாப்பாட்டைத் தராமல், மறைமுகமாக ஒரு விரதத்தை கடைப்பிடிக்க வைத்துவிட்டது..!

 

ரெயில் பயணம் பல நாட்களுக்குப் பிறகு இனிமையான ஒரு பயணமாக அமைந்ததில், மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி..!

 

ஆ.கெ.கோகிலன்

19-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!