யாத்திசை..!
நேற்று உறவினரது திருமணத்திற்காக லீவு எடுத்ததால், இன்று
அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருந்தன. ஒரு கட்டத்தில் போதும் என்று நினைத்துக்கொண்டு
வீடு வந்துவிட்டேன்..! அப்படியிருந்தும் ஏதோ சோர்வாக இருந்தது. தம்பியும், அவரது மகனும்
வந்திருந்தார்கள். அவர்களுடன் கதைத்து, அவரது புலமைப்பரீட்சை சாதனையைப் பாராட்டி, சிறு
அன்பளிப்புடன் அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில்,
மூத்த மகளுக்கும் எனக்கும் ஒரு சண்டையே வந்துவிட்டது..! புரிந்துணர்வுக் குறைபாடுகள்
எமக்கும் உண்டு..! 2000இற்குப் பிறகு வந்த இந்தத் தலைமுறையினருக்கு அது இன்னும் கூட
உண்டு..!
பெரியவர்கள் மன்னித்துச் செல்வதே பெருந்தன்மைக்கு அழகு..!
அதையே நானும் பின்பற்றினேன்.
எனது மனநிலையை (Mood) இன்னும் மாற்ற பென் ரைவில் இதுவரை பார்க்காத
ஒரு படம் இருந்தது. அதன் பெயர் யாத்திசை..!
சரி பார்ப்போம் என்று உட்கார்ந்து பார்த்தால், படம் கற்காலத்தில்
நடப்பதுபோல் ஒரே ரத்தமும் சதையுமாக இருந்தது. நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும் யாரையும்
எமக்குத் தெரியாது..! அதேபோல் காட்சிகளும்
விசித்திரமாகவே இருந்தன.
எல்லாவற்றையும் விட முக்கியமானது இது எந்தமொழிப்படம் என்று
கேட்கும் அளவிற்கு அந்தத் தமிழைப் புரிவது கடினமாக இருந்தது..! அந்தக்கடினமான தமிழினால்
படம் பழைய காலத்தில் நடந்த சம்பவம் என்பதை இலகுவாக உணர்த்தியது.
படத்தின் கதை என்று பார்த்தால், மூவேந்தர் காலத்தில் பாண்டிய
மன்னன் ரணதீரனும், அவனால் பாதிக்கப்பட்ட சிறு இனமான எய்னர்கள் பற்றியதே..! கதைப்படி
பாண்டிய மன்னன் ரணதீரன், எய்னர் தலைவனாக வரவேண்டிய வீரன் கோதியை கொல்வதும், அவனின்
வாரிசு உருவாவதுமாக சொல்லப்படுகின்றது.
மீதிக்கதை இரண்டாம் பாகத்தில் வரலாம். வராமலும் போகலாம்.
படத்தைப் பார்க்க, அதிலும் மொழியைப் புரிய அதிக பொறுமை வேண்டும்.
பல காட்சிகள் குறியீடுகளுடன் சொல்லப்பட்டுள்ளன. கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவனில் இடைவேளைக்குப்
பிறகு வரும் காட்சிகள் போல் பல காட்சிகள் படத்தில் வந்தன.
பொறுமையுடன் பார்த்தால், பழைய தமிழர் வாழ்க்கையைப் பார்க்கலாம்.
ஆனாலும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதால், மனிதர்கள் விலங்குகள் போல் தெரிகின்றார்கள்.
ஆதித் தமிழ் மனிதன் ஒரு விலங்குபோல் காட்டப்படுவதை, என்னால் ஏற்கக் கஷ்டமாக உள்ளது.
தொழில்நுட்பங்கள் பராவாயில்லை. குறிப்பாக ஒளிப்பதிவு நன்றாக
இருந்தது. தரணி ராஜேந்திரன் (Dharani
Rasendran) எழுதி இயக்கியிருந்தார். படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக
ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. பாண்டியர்களின் வாழ்வியலை மிக இயல்பாகப் படம் காட்டியுள்ளது.
ஆ.கெ.கோகிலன்
23-11-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக