புலமைப்பரிசு முடிவு..!

 



எமது ஊரில் கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகள் 5ம் வகுப்புப் புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்திபெற அதீத பிரயத்தனப்படுவார்கள். அதற்காக அம்மாக்களும், அப்பாக்களும் அலையாய் அலைவார்கள்..! இவை ஒரு விதத்தில்  ஆரோக்கியமானது என்றாலும் பாதகங்களும் இருக்கின்றன.

இப்படியான கால கட்டத்தில் எனது படிக்காத தம்பியின் மகனும் இம்முறை  பரீட்சையில் தோற்றினான்.

எப்படிச் செய்தாயா..?  என்று  நான் கேட்க, “ 160 புள்ளிகள் எடுக்கலாம் என்று சொன்னான்..!”

நேற்றிரவு 12.40 இற்கு ஒரு அழைப்பு..! கடும் நித்திரையில் இருந்த எனக்கு ஓரே பதட்டமாக இருந்தது. யார் இந்த நேரத்தில் எடுப்பது..? கோபம்  கூட வந்தது..!

பொதுவாக வேலை நேரங்கள் தவிர ஏனைய நேரங்களில் வரும் பெயர் தெரியாத  போன் கோல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படிக்கொடுத்தால், ஏனைய நேரமும் நிம்மதியிழந்து தவிக்கவேண்டிவரும்.

இரவு வந்த கோலிலும் பெயரில்லை. புது எண்ணாக இருந்தது. எனது கொழும்பிலுள்ள தம்பி, ஒரு திருமண நிகழ்வுக்காக ஊருக்கு வருகின்றார். முதலில் அவர் தான் வந்துவிட்டார் என நினைத்து அவருக்கு போன் பண்ணினேன். அவர் இடையில் எங்கோ வந்துகொண்டிருந்தார்..! பின்னர் நேரத்தைப் பார்த்தேன்  இரவு 12.40  இருக்கும்.  பின்னர் வந்த எண்ணிற்கு கோல் எடுத்தேன்..! உள்ளே  மற்றைய தம்பியோ அல்லது அவரது மனைவியோ யாரோ கதைத்தார்கள்  சரியாகப் புரியவில்லை. ஆனால், அதில் மகன் கொலர்சிப்பில் 175 புள்ளிகள் எடுத்து பாஸ் பண்ணியுள்ளான் என்பது மட்டும் புரிந்தது. அந்த நேரம் சந்தோசத்தைக்காட்டிலும் எரிச்சலே வந்தது..! ஒருவாறு அடக்கிக்கொண்டு, நாளைக்குச் சொல்லலாம் தானே என்றபடி வாழ்த்திவிட்டுப் படுத்தேன், உறக்கம் வரவில்லை..!

விடியக்கதைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பின்னர் அலுவலகம் வந்த பின்னர் போன் எடுத்தேன். பதில் இல்லை. சிறிது நேரத்தில், அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தம்பியின் மகன் படித்த பாடசாலை அதிபர் பேசினார்..! “ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப் பிறகு உங்கள் தம்பி மகன் பாஸ் பண்ணியுள்ளார்..!” என்று என்னைப் பெருமைப்பட வைத்தார். நானும் அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு, மாலை அங்கு  போவதாக இருந்தேன்.

வீட்டிலுள்ளவர்கள், வேறுவேலைகள் காரணமாக என்னுடன் வர மறுத்ததால் தனியாகப் போகமனமின்றி, நாளை வருவதாகத் தம்பி மகனுக்குக் கூறி,  அவர் வழமையாகக் கேட்பது போல், அவரை எனது காரின் முன்சீற்றில் ஏற்றி, ஏதாவது அவருக்குப் பிடித்த சாப்பாடு வாங்கிக் கொடுக்க விரும்பினேன். அவரும் சம்மதித்தார்.  தற்போது நேரம் கொஞ்சம் இறுக்கமாக உள்ளது. இருந்தாலும் சில நாட்களில் அதனை நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு நிலையிலுள்ள மனிதர்களிற்கு வரும் தேவைகளும் எண்ணங்களும் வேறுபட்டவை..! ஒரு சாதாரண விடயம் இன்னொருவருக்கு பெரிய விடயமாக இருப்பதை எண்ண இயற்கை மீது கோபமாகவும், அதேசமயம் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. பிறப்பு, இறப்பு என்ற இரு எல்லைநிலைக்கோடுகளுக்கு இடையிலான மனித ஓட்டங்களின் விளைவுகளே, வேறுபாடுகளாக மாறி உலகைக் உருட்டுகின்றது..!

 

ஆ.கெ.கோகிலன்

17-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!