தலைக்கூத்தல் (கருணைக்கொலை)

 


இந்தப்படத்தின் தலைப்பைப் புரியவே எனக்கு சில மணிகள் சென்றுவிட்டது.

படத்தின் கதையே இழுத்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவரின் நிலையையும், அதனால் ஏற்படும் பாதிப்பையும், முதியவருக்கு நிகழ்ந்த பசுமையான ஒரு வாழ்க்கையும், அதன் விளைவும் இரு பாதைகளில் பயணிக்கும் கதைகளாகவும் இடையிடையே இரண்டுக்கும் இடையேயான இணைப்பைக்காட்டிச் செல்லும்படியாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

படத்தின் கதையும், காட்சிகளும் மிக யதார்த்தமாக அல்லது அதைவிட மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தமாக படைக்கப்பட்டிருந்தது. படம் பார்ப்பதற்கு நிறையப்பொறுமை வேண்டும். பொறுத்தால், உள்ளே அழகான காதல் விரிந்துசெல்லும். அதுமாத்திரமன்றி, ஒரு வயதானவரின் பார்வையும், அவரைச் சூழ்ந்த குடும்பத்தின் பார்வை இன்னொரு கதையாகக் காணலாம். இது புதுமையான ஒரு அனுபவத்தைத் தரும் என்பது எனது கருத்து.

திரும்பவும் சொல்கின்றேன் “ பொறுமையாகப் படத்தைப் பார்க்க வேண்டும்..!”

இந்தக்கதையில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா காசியப், கதா நந்தி, வையாபுரி போன்றோர் முக்கிய காட்சிகளில்  நடித்துள்ளார்கள். யதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக படுக்கையிலே மனிதக்கழிவு நீரும், மனிதக்கழிவையும் காட்டி, அதனை அருவருக்காத வகையில் முதியவரைக் குழந்தையாகப் பாவித்து, மகன் கழுவுவதும் அதனை  பிள்ளையும், மனைவியும் தள்ளி நின்று ஒருவித சங்கடத்துடன் பார்ப்பதும் பல வீடுகளில் நடக்கும் சமாச்சாரம்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான முரண்பாடுகளும், இடையில் ஏற்படும் கூடலும், பின்னர் ஏற்படும் கொலைவெறியும் பல கிராமங்களில் நடக்கும் வழமையான சம்பவம்.

காதலன், காதலிக்கு இடையிலான ஆழமான காதலைக்காட்டும் வாய் முத்தம் சற்று சங்கடமாக இருந்தாலும் கதைக்கு வலுச்சேர்த்ததாகக் கருதலாம்.

தந்தையா..? மகளா..? என்ற ஒரு நிலையில் தந்தை என்ற நிலையில் இருந்த மகன்,  மகள் என்று மாறுவதற்கு உருவாக்கப்பட்ட  ஓணான் மகளை விழுங்கும் Graphics காட்சி சிறப்பாக இருந்தது.

அதேபோல், கருணைக்கொலையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட மிதக்கும் இளநீர்களுக்கு நடுவே முதியவருக்கு பெரிய இளநீரில் இருந்து நீர்வெளியேறி  அவரைக்குளிப்பாட்டுவது போன்ற காட்சியே படத்தின் கரு. சிறப்பாக இருந்தது.

இறுதியாக, இயற்கை எய்தல் என்பதை மண்ணில் இருந்து உடலைப் பச்சைச் செடிகள், புற்கள் மூடுவதும், அதிலிருந்து மரம் முளைப்பதும் என்று பல காட்சிகளில் இயற்கை பற்றிய அற்புதமான குறியீடுகள் காட்டப்பட்டன.

பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாம் தரமாக இருந்தது. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்னனைப் பாராட்டலாம்.  மகன் தந்தையைக் காக்க நினைக்கும் கருணைக்காட்சிகள், நவீன தலைமுறைகளுக்கு சற்று வெறுப்பை ஏற்படுத்தலாம். அதனால் இப்படம் வர்த்தகரீதியாக வெற்றிபெறுவதில் சிக்கல் இருந்தாலும் சில உண்மையான விடயங்களை அனைவரும் உணரவேண்டும்.

 


ஆ.கெ.கோகிலன்

07-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!