குறுக்கால போன பூனை..!

 


 


விடிய எழும்பும் போதே இன்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதனை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையுடனே எழுந்தேன்.

நாட்டிலும், வீட்டிலும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க அலுவல நிகழ்வுகளை வீட்டுக்கு கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவன் நான்.  இருந்தாலும் கடந்த கால வேலைகளை அந்த நேரத்திலே திட்டமிட்டுச் செய்ய முடியாத சூழலை, இயற்கை தந்ததால் பல விடயங்கள் தடைப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அவை நடந்து வருகின்றன. அந்த மாதிரியான ஒரு நிகழ்வே, அண்மையில் கொழும்பில் நடந்த  18ஆவது பட்டமளிப்பு விழா..!

இன்னும் ஒரு பட்டமளிப்பு விழாவை இந்த வருடத்திற்குள் நடாத்தி முடிக்க வேண்டும். ஆனால்  அதனைச் சாத்தியப்படுத்துவது என்பது  முடியாத காரியம். இருந்தாலும் அடுத்த வருடத்தில், இரண்டை முடிக்க வேண்டும். இது அனைவருக்குமான கடமை. இதனால் எல்லோருக்கும் வேலைப்பளுக்கள் அதிகமாக, மனத்தில் வெறுப்புக்களும் ஏற்படலாம். நாம், செய்ய வேண்டிய கடமைகளையே செய்கின்றோம். கொரோனா வந்து, நேரச்சமநிலையைக் குழப்பி  எம்மைப் புலம்ப வைத்துள்ளது.

இப்படியான அலுவலகச் சூழலில், சில நாட்களுக்கு முன்னர், கணக்கியல் துறை முழுநேர மாணவர்களின் புதுமுக மாணவர் வரவேற்பு, இன்று நடாத்துவதற்கு அனுமதித்து இருந்தேன். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அந்தத்துறை மாணவர்களும், விரிவுரையாளர்களும், குறிப்பாகத் துறைத்தலைவரும் நிறைவேற்றியிருந்தார்கள்.

இந்நிலையில், தலைமையகத்திலிருந்து,  மாதாந்த  கல்விச் செயற்பாடுகளுக்கான மேல்மட்டக்கூட்டமும் இன்றைய நாளில் ஒழுங்கு செய்துவிட்டார்கள்..!

மாணவர்கள், அழைப்பிதழ் தந்ததன் பின்னரே, இது பற்றிய அறிவுறுத்தல் வந்ததால், நானும் இரண்டையும் ஒருவாறு சமாளித்து முடிக்க நினைத்தேன்.

மாணவர்களுக்கு, பிரதம விருந்துனர் என்ற வகையில் ஒரு உரையாற்ற வேண்டும். பணிப்பாளர் என்ற வகையில் தலைமையகக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதுபோதாது என்று, சகல பொறியியல் துறை தொடர்பான கல்விச்செயற்பாட்டிற்கும் என்னைத் தலைவராக நியமித்த நிலையில், பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, அனுமதி கோருவதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அவற்றை ஏற்கனவே தயாரித்து அனுப்பினாலும், எல்லாம் என் கைவண்ணத்தில் இருப்பது சரியில்லை என்பதால் மற்றவர்களிடம் அனுப்பி, அவற்றை மேலும் தரப்படுத்த நினைத்தாலும் அவை நடைபெறவில்லை. நேற்று இரவு பல இணையவழிக் கூட்டங்களுடன், அவற்றையும் மீளாய்வு செய்யும் போது தவறுகள் தென்பட்டன..! இயன்றவரை அவற்றைத் திருத்தி, இன்று அவற்றைப் பயன்படுத்த நினைத்திருந்தேன்.

வழமையான  காலைக்கடன்களை முடித்து, வெளிக்கிட மழைவரும் போல் இருந்தது. காரில் போகலாமா..? அல்லது வழமைபோல் மோட்டார் சைக்கிளில் செல்லலாமா..? என சிறிது நேரம் வானத்தைப்பார்த்து யோசித்துவிட்டு, நேரமும் மட்டு மட்டாக இருந்ததால், மழைக்கவசத்தை மாட்டிக்கொண்டு மோட்டார்  சைக்கிளில் அலுவலகத்திற்கு, சரியான நேரத்திற்குச் சென்றேன்.

இந்நிலையில், நான் அதிவேகமாகச்  செல்லும் போது, ஒரு சிறிய விபத்திலும் சிக்கப் பார்த்தேன்..! பின்னர் இறைவன் புண்ணியத்தால் தப்பிவிட்டேன். இன்று வீதியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது.  இந்தநிலையில் விரைவாகச் செல்லும்போது தாவடி முடிந்து கொக்குவில் தொடங்க முன்னர், அதிவேகத்துடன் பூனையொன்று குறுக்காக ஓடியது..!

பொதுவாக, எனக்கு இவற்றில் பெரிய நம்பிக்கையில்லை. இருந்தாலும் இன்று நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க முடிகின்றதா என சோதித்துப் பார்ப்போம்..! என்ற எண்ணத்துடன் பறந்தேன்.

 

நான் நேரத்திற்குப் போனாலும், ஏனைய அனைவரும் அவ்வாறு செயற்பட்டாலே திட்டமிடல்களை வெற்றியாக்கலாம். நான்  இதைப்பற்றி, துறைத்தலைவருக்கு முற்கூட்டியே சொல்லியிருந்தும், அவர்களால் கால் மணிநேரம் பிந்தியே நிகழ்வைத் தொடங்க முடிந்தது. நானும் கலந்துகொண்டு, விளக்கேற்றி,  இறைவணக்கத்துடன் விடைபெற்றேன்.

இதற்கிடையே அலுவலகக் கணினியை இணையவழிக் கூட்டத்திற்கு தாயராக இருக்க, முதலே செய்யவேண்டியவற்றைச் செய்திருந்தேன்.  பின்னர் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்குள் வந்து, அதனைத் தொடர முயல இன்னும் தாமதமாகிக்கொண்டே இருந்தது..! இணையவழிக்கூட்டத்தில் இணைய முடியவில்லை. நேரம் காலை 10 மணியில் இருந்து நகர்ந்து 10 ஆகிவிட்டது..! இன்னும் இணைய முடியவில்லை. ஜூம் செயலி சுற்றிக்கொண்டே  இருந்தது..!  சரி இன்னோரு நண்பருக்குப் போன்செய்து வினாவ, கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றது. “கூகுள்மீற்றிங்” லிங்கை அனுப்பியுள்ளார்கள், அதனூடாக இணைய அவர் சொல்ல, அவ்வாறே செய்தேன். கூட்டம் தொடங்கி, நடைபெற்றுக்கொண்டிருந்தது..!

சரி தொடர்ந்து கவனிப்போம் என்றால், அருகேயுள்ள மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளின் சத்தம் காதைச் சரிபார்த்தது..! நானே அனுமதியைக் கொடுத்துவிட்டு, தவிக்கவேண்டிய நிலையை எண்ணிச் சிரித்துக்கொண்டேன். இந்தச்சத்தத்தில்  மைக்கை கிளிக்பண்ணிக் கதைக்க விரும்பவில்லை. இங்கு நடக்கும் விழாச்சத்தம் தலைமையகம் வரை கேட்கும். பொறுமையாக அவர்கள் சொல்வதை மாத்திரம் மிகக்கஷ்டப்பட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.  விழாவிற்கு இடையில் வருவதாகச் சொல்லிவிட்டுவந்த நான், எழும்ப முடியாமல் இருந்தேன்..! எந்த நேரத்தில் கேட்டாலும், அங்கே நான் இருக்கவில்லை என்றால் எனது கடமைக்கு இழுக்காகும் என்று நினைத்துக்கொண்டு விழா நிகழ்வைத் தவிர்த்து, அலுவலகக்கூட்டத்திலே கண்ணாக இருந்தேன்.

இடையில் துறைத்தலைவர் எனக்கு போன் எடுத்து, வருகின்றீர்களா..? எனக்கேட்க, நான் வாழ்த்தியதாகச் சொல்லி முடிக்கச்சொன்னேன்.

சில நிமிடங்களில் அங்கே விழா முடிந்துவிட்டது..! நன்றியுரையும் நிகழ்ந்தது..! பின்னர் மாணவர்களின் நிகழ்வுகள் ஆரம்பமாக, சத்தம் மேலும் அதிகரித்தது..! சரி பிள்ளைகள் தானே கொஞ்ச நேரம் சகித்துக்கொள்வோம் என்று நினைக்க, அது முடியாமல் சத்தத்தைக் குறைக்கச்சொல்லி எனது அலுவலக ஊழியர்களை அனுப்பினேன்.

பின்னர் எனது நேரம் வர பணிப்பாளர் நாயகத்திடம் எனக்கு சில நிமிடங்கள் தரும்படியும், எனது concept papers ஐ Present பண்ண கேட்க, அவர்கள் தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். அரை மணிநேரம் சென்றிருக்கும்..! ஏன் DG இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றார்..? நான் சொல்லப்போவது அவ்வளவு முக்கியத்துவம் அற்றதா..? எனக்குழம்பினேன்.  கணினித்திரையில் மைக்கை கிளிக்செய்து பார்த்தேன். அது மைக் on ஆவதையும், off ஆவதையும் காட்டிக்கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் எடுத்த நபரிடம் நான் கதைப்பது கேட்கின்றதா எனக்கேட்டேன். அவர் கவனிக்கவில்லை என்றும், தற்போது கேட்கவில்லை என்றும் சொன்னார். அந்நேரம் பதட்டம் கூடியது..! வெளியே சத்தமும் கூடியது..!  அந்நேரம் பார்த்து, எனது போன்களும் அலறின..! பொலிஸ், சிஐடி, இன்ரெலியன் என ஆளுக்கு ஆள்  கோல் எடுத்துவினாவினார்கள்..! விரிவுரையாளர்கள் வேலைப்பகிஸ்கரிப்பு செய்கின்றார்களா..? மாணவர்கள் ஏன் வெளியே நிற்கின்றார்கள்..? என்ன நிகழ்வு உள்ளே நடக்கின்றது..? எத்தனை பேர் வேலை செய்கின்றார்கள்..? எத்தனை மாணவர்கள் படிக்கின்றார்கள்..? எத்தனை கற்கை நெறிகள் இருக்கின்றன..? எனக்கேட்டு என்னை வெறுப்பேற்ற, எல்லோரையும் மாலை நேரில் வரச்சொல்லியும், இங்கு ஒரு வரவேற்பு நிகழ்வு, மாத்திரம் நடைபெறுகின்றது என்பதையும் சொல்லி,  இணையத்தில் DG  என்னைக்கேட்க, பல முறை உங்களுடன் கதைக்க முயன்றும், முடியவில்லை என்றும், தொழில்நுட்பக்கோளாறே காரணம் என்றும் போனில் சொல்லி போனிலே present  செய்யக்கேட்க, வேண்டாம் அடுத்தமுறை நேரில் செய்யலாம் என்றார். 

வெறுத்துவிட்டது..! என்ன திட்டமிடல்கள் இருந்தாலும், எம்மையறியாமல் பல நிகழ்வுகள் நடைபெறுவதால் எல்லாம் தோல்வியிலே முடிந்தன..!

மாணவர்களுக்கான பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்த முடியவில்லை..!

5 Concept Papers ஐ சமர்பிக்க முடியவில்லை..!   சத்தங்களைச் சகித்து கடைசியில் கடும் கோபமே வந்துவிட்டது..!  பிள்ளைகளின் வயது அப்படி..? அவங்களிடம் கோபப்பட்டு என்ன செய்ய..?  எல்லாம் நல்லதிற்கே என எடுத்துக்கொள்ள வேண்டியது தான்..!

இருந்தாலும் பூனை குறுக்கால் போனால் நினைத்த காரியம் விளங்காது என்ற  பழமொழி “பலித்ததை“ இந்தச்சோதனையில் கண்டுகொண்டேன்..!

 

ஆ.கெ.கோகிலன்

02-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!