லியோ..!

 


 


அண்மைக்காலமாக வந்த விஜய் படங்களை நான் விரும்பிப் பார்ப்பது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கதையைவிட பொழுதுபோக்கு விடயங்களில் கூடிய கவனத்தை விஜய் எடுப்பதே..! திரைப்படம் என்றாலே பொழுதுபோக்குத் தான்..! சிலர் மாத்திரம் படங்களூடாக வாழ்க்கையையும், புதிய அனுபவங்களையும், உலகத்தையும் அறிகின்றார்கள்.

அப்படிப்பட்ட படங்களைத் தேடிப்பார்ப்பதே என் வழக்கம்.

இந்த லியோ படத்தின் விமர்சனங்களையும், சில ரசிகர்களின் மீம்ஸ்களையும் பார்த்து இதுவும் வழமையான படம் என்று தான் நினைத்தேன். லோகேஸ் கூட சரியாக கதையை எழுதவில்லை என்றே நினைத்தேன்.

25 நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும் திரையரங்கிற்குச் செல்லவில்லை. இன்று எனது ஊழியர் அந்தப்படத்தைப் பென்ரைவ்வில் தந்தார். பார்த்தேன். உண்மையில் நன்றாக இருந்தது. ரசித்தேன்..!  விஜயின் பல பரிமாணங்கள் படத்தில் தெரிந்தன. சண்டைக்காட்சிகள் அதிகம் என்றாலும், ரத்தம் படம் முழுக்கத் தெளித்தாலும் அது சரி என்றே தோன்றியது.  சில காட்சிகள் நம்ப மறுத்தாலும், அதனையும் வித்தியாசமான ஒரு காட்சியாக பார்க்க முடிந்தது. கழுகு, சிறுத்தைப்புலி போன்ற மிருகங்களே நன்றாக நடிக்கும் போது, மனித நடிகர்கள் அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள். திரிஷாவின் நடிப்பும் தரமாக இருந்தது.

படம் முழுக்கப் பல வில்லன்கள் வந்து, அடிவாங்கி செத்து மாண்டார்கள்.

என்னவோ தெரியவில்லை, இன்றைய மனநிலையில் அடிகள் எல்லாம் தேவைபோல் இருந்தது.

இலங்கை ஜனனி, சில காட்சிகளில் வந்தாலும், நன்றாக நடித்திருந்தார். வேறும் பல நாயகிகள் படத்தில் நடித்திருந்தார்கள்.

பாடல்கள், இசை, ஒளிப்பதிவு போன்ற அனைத்து தொழில்நுட்பங்களும் நன்றாகவே இருந்தன.

என்னைப்பொறுத்தவரை, விமர்சனங்களில் படத்தைப்பற்றி நிறையக் குறைகள் கூறினாலும் படம் பார்க்கும் போது ஒரு ஈர்ப்பைக் கொடுத்தன. விஜயின் குடும்பப் பாசம், மனைவியின் சந்தேகம், பெண் குழந்தைமீது இருந்த அதீக அக்கறை எல்லாம் மனதிற்கு இதமாக இருந்தது.

தீபாவளிக்கு முன்னரே வந்து, தீபாவளி கடந்தும் ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் விஜய் மாத்திரம் அல்ல..! படத்தில் எல்லாம் இருக்கின்றது. லோகேஸ் கனகராஜின் LCU உம் அங்கே சில காட்சிகள் மூலம் வெளிப்பட்டன. நெப்போலியன், விக்ரம், டில்லி என்பவர்கள் காட்சியில் வந்தும், சொல்லப்பட்டும் இருந்தார்கள்..!

இந்தப்படம் வெற்றி பெற்றதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. லியோ லோகேஸ் கனகராஜின் இன்னொரு வெற்றிப்படம்..!

 


ஆ.கெ.கோகிலன்

17-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!