மருமகனின் திருமணம்..!

 



நித்திரையே கொள்ளமுடியவில்லை. விடிய திருகோணமலை போகவேண்டும்..! அங்கே எனது மச்சாளின் மகனின் திருமணம் நடைபெற இருக்கின்றது.

மணிக்கூட்டைப் பார்க்கின்றேன் மணி நடு இரவு 12.40. சரி இன்னும் இரண்டு மணித்தியாலம் படுத்துவிட்டு எழும்புவோம். அதிகாலை 2.30 மணிக்கு எழும்பினால் அனைத்துக்காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, எனது காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் அச்சுவேலி போய், அங்கு இருக்கின்ற அன்ரிவீட்டில் அதை நிறுத்திவிட்டு, அவர்களுடன் வானில் திருகோணமலை போவதே திட்டம்..!

நித்திரை வர மறுத்தது..! எழுந்து பார்க்கின்றேன்  மணி அதிகாலை 1.40..!

மீண்டும் திரும்பி  திரும்பி படுக்க முயல்கின்றேன். கண் மூடமுடியவில்லை..! பொறுமையிழந்து 1.40இலே எழுந்து,  2.30இற்கு வைத்த அலாமை நிறுத்திவிட்டு, காலைக்கடமைகளை முடித்தேன்.

3.30 இற்கு வெளிக்கிடக்கூடியதாக இருந்தது.

நடு இரவு மோட்டார் சைக்கிளில் போவது சற்று பயமாக இருந்தது. குறிப்பாக நாய்களுக்கும், கள்ளர்களுக்கும் இடையில் மறித்துக் குறுக்கிடலாம்..!

மகளை எழுப்பி கேற்றை திறக்கச் சொல்ல, அவள் குழம்பி ஏதோ செய்ய, அவளைப் பேசிவிட்டு, காரில் வெளிக்கிட்டேன்.

நான் அவர்களுக்குச் சொன்னது போல், ஏறக்குறைய 4.00இற்கு அச்சுவேலியில் நிற்கின்றேன். அங்கு அப்பாவின் தங்கை மாத்திரமே இருக்கின்றார்..! பிள்ளையும், மருமகள், பேரப்பிள்ளைகள் வடமராட்சியில் இருந்து வரவேண்டும். நான் வெளியில் காத்து இருந்தேன்.  அன்ரிக்கு நல்ல வயது இருக்கும்..!  குறிப்பாக 80ஐ தாண்டியிருந்தார்..! ஒருக்கா வெளியே வந்து என்னை உட்காரச்சொல்லிவிட்டு, சேலைகட்டுவது எப்படி என்பதே மறந்துவிட்டேன் என்றார்..! நான் என்ன செய்ய..? மருமகள் வரும் வரை அங்கும் இங்கும் பதட்டத்துடன் அலைந்து திரிந்தார்..! முதுமையின் கோலத்தைப் பார்க்கக் கவலையாக இருந்தது. எவ்வளவு காலம் ஆசிரியராக இருந்தவர்..! எத்தனை பேரோடு பிறந்தவர்..! ஒரு பெரிய வீட்டில் தனியே வசிக்கும் நிலையை எண்ண கவலையாக இருந்தது..! அனைவருடனும் அனுசரித்துப் போகாத வைராக்கியமே இதற்கான காரணம். பிள்ளைகளும் தொலைவுகளில், இருப்பதால் பல பெற்றோருக்கு இந்த நிலை..! எமக்கும் என்னவோ இறைவனுக்குத் தான் தெரியும்..?

இறுதியாக, ஏறக்குறைய காலை 5.00 மணியளவில் அவவை வெளிக்கிடுத்திக் கூட்டிச்செல்லக்கூடியதாக இருந்தது.

காலை 6.30இல் முருகண்டியில் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, மோதகமும் நெட்ஸ்கோப்பியும் அருந்திவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். வவுனியாவில் எனது நண்பர்  முன்பே கேட்ட உதவியையும் செய்துகொண்டு, காலை உணவையும் எளிமையாக எடுத்துக்கொண்டு திருகோணமலை சேர காலை 9.30 மணியாகிவிட்டது.

வழிநெடுக மச்சானுடன் உள்ள ஊர் புதினங்கள் எல்லாம் கதைத்துக்கொண்டு வந்தோம். ட்ரைவரும் நல்ல அனுபவசாலி. சரியான வேகத்தில் வண்டியை ஓட்டினார்.

மணி 10.30இற்குள் தாலி கட்ட வேண்டும். நாங்கள் சரியான நேரத்திற்குப் போய்சேர்ந்து விட்டோம். எனது தம்பியும் முதலில் அவரது அன்பளிப்பை என்னிடமே தந்துவிட்டு கொழும்பு சென்றுவிட்டார்..! பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரும் இரவு பஸ்ஸில் திருகோணமலை வந்து, ஒரு ரூமில் தங்கிவிட்டு,  நான் போன நேரத்திற்குக் கிட்டவாக காளிகோவிலுக்கு வந்திருந்தார். எனது தாயாரும், தங்கையும் அவர்களது அன்பளிப்பை என்னிடமே தந்திருந்தார்கள். மூத்தவர் என்பதால் அனைத்தையும் சமாளிக்கவேண்டிய கடமை எனக்கு தரப்பட்டிருந்தது. முடிந்தவரை செய்தேன்.

11.00 மணிக்குள் தாலிகட்டி முடிந்ததால் பின்னர் மதிய உணவு எடுக்க கொஞ்ச நேரம் இருந்தது..!

யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் முக்கிய வித்தியாசம் மதிய மச்சச்சாப்பாடு தான்..!

தாலிகட்டும்போது குடும்ப உறுப்பினர்களே இருப்பார்கள்..! ஏனையவர்கள் எல்லோரும் மதியம் நடைபெறும் விருந்துபச்சாரத்திலே பங்குகொள்வார்கள்..!

இங்கு மதியத்திற்கு சிறு நேரம் இருந்ததால், கோணேஸ்வரரிடம் சென்றோம். நான் முதலே, கோவிலுக்கு என்று செல்லவில்லை என்பதால் வெளியே நின்றேன். என்னைப்போல் சிலர் நின்றார்கள். பலர் உள்ளே சென்று கும்பிட்டுவிட்டு வந்தார்கள்.  கோவிலுக்குப்போகும் போது அங்கு இருக்கும் பெண் வியாபாரிகள் அல்லது சாத்திரம் சொல்பவர்கள் என்னிடம் மனம் இரங்கும் வகையில் பேசி தமது காரியத்தை சாதித்தார்கள்..! புரிந்துகொண்டு, என்னால் முடிந்ததைச் செய்துகொண்டு ”சுபமங்கலா” என்ற ஹோலுக்கு வந்தோம். பல உறவினர்களையும், நண்பர்களையும், சில மாணவர்களையும் கண்டு, கதைத்து மகிழ்ந்தேன். திருகோணமலை மாவட்டச்செயலாளரும் வந்திருந்தார்.  அவர் எனது நெருங்கிய நண்பர்..! அவரும் நானும் ஒன்றாக வருகைதரு விரிவுரையாளராக திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் கல்லூரியில் கடமையாற்றியுள்ளோம். பல முறை சுற்றுலாச் சென்றுள்ளோம். மிகவும் ஒழுக்கமான, மென்மையான மனிதர் அவர்.

பின்னர்  மதிய மச்ச உணவை நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, படங்கள் எடுத்து எல்லோரையும் வாழ்த்தி, மச்சாள் வீட்டிற்குச் சென்று உடைகளையும் மாற்றிக்கொண்டு, திரும்ப மண்டபம் வரும்போது, மட்டக்களப்பு தள மருத்துவமனை தலைமை மருத்துவராகக் கடமையாற்றும் எனது நெருங்கிய உறவினரையும், அவரது மகனையும் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு, மீண்டும் மண்டபம் வந்து, மேலும் சில உறவுகளை மண்டபத்தில் இறக்கிவிட்டு, இன்னோரு மச்சானின் மாமியை எமது வானில் ஏற்றிக்கொண்டு யாழ் வந்தோம்.

வரும்போது ஒரே மழை பொழிந்துகொண்டிருந்தது..! வழமைபோல் முருகண்டியில் பிள்ளையாருக்கு சலூட் அடித்துவிட்டு, நெட்ஸ் கோப்பியும் அருந்திவிட்டு அச்சுவேலி வர இரவு மணி 8.30ஐ தாண்டியது.

பின்னர் எனது காரில் மச்சானின் மாமியை ஏற்றி, அவரது வீட்டில் இறக்கிவிட்டு வர மணி இரவு 9.30ஐ தாண்டியிருந்தது.

மதியம் 2.00 மணியளவில் கொழும்பு  புறப்பட்ட தம்பி இன்னும் பஸ்ஸிலே சென்றுகொண்டிருந்தார்.

ஆனால் எனது பயணம் முடிவுக்கு வந்து, உணவுடன் நானும் நித்திரைக்கு சென்றேன். நன்றாக நித்திரையும் கொண்டேன்..!

 

ஆ.கெ.கோகிலன்

22-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!