குட்டிக்கதையினது புரிதல்..!

 


இன்று செவ்வாய் கிழமை. எமது ஆங்கிலத்துறை மாணவர்களால் “புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்விற்கு“ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழமையாகப் பொருளாதாரக்கஷ்டத்தில், இவ்வாறான நிகழ்வை நிறுவனச்சூழலில் வைப்பதை வலியுறுத்தி வந்த நான், இம்முறை வெளியே செல்ல அனுமதித்தேன்..! அண்மையில், ஒரு துறையில் படித்த பாடமே இந்த முடிவை எடுக்கத்தோன்றியது.

நினைத்ததுபோல் நிகழ்வுக்குச் சென்றேன். வழமைபோல் கௌரவித்தார்கள்.

துறைத்தலைவர் உரையில் ஒட்டகம், அதன் குட்டி தொடர்பான ஒரு குட்டிக்கதை சொன்னார்..! படைக்கப்பட்ட சூழலும், வாழும் சூழலும் மனித முயற்சிகளால் மாறும் போது ஏற்படும் பாதிப்புக்களை அக்கதை எனக்கு உணர்த்தியது..! இலகுவாக வாழவேண்டிய நிலையில், கஷ்டப்பட்டு வாழ வேண்டிய சூழல் உருவாகின்றது.

மாணவர்களின் தரமான ஆடல், பாடல் மற்றும் நாடகத்திற்குப் பிறகு எனது பேச்சு வந்தது. அதில், வழமைபோல் சில கருத்துக்கள் சொல்லி, எமது திறந்த வெளிச்சிறைச்சாலை வாழ்க்கை முறையை பற்றிச்சொன்னேன்..! ஆசைகளாலும், ஆணவத்தாலும் ஏற்பட்ட மாற்றத்தால், வந்த அவதி நிலையே எமது நிலை என்று  அங்கிருந்தவர்களுக்கு உணர்த்த முயன்றேன். ஆனால் அது நடந்ததா..?

அல்லது வேறுமாதிரிப் புரிந்தார்களா..? என்பது தெரியவில்லை.

கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக பல விடயங்கள், வந்தவர்களால் எம்மீது திணிக்கப்பட்டது..! எமது இயல்பு, நாகரீகம் அல்லது அறிவு என்ற பெயரில் மாற்றம் பெற்றது. எமது எண்ணங்களும், சிந்தனைகளும் நாம் கீழைத்தேயர்களாக இருந்தாலும், மேலைத்தேயர்களாக மாறும் முயற்சிக்கு எம்மையறியாமல் தள்ளப்பட்டோம். எமது வாழ்வியல் வேறோர் சூழலுக்கான வாழ்வியலை நோக்கி நகர்த்தப்பட்டு வந்துள்ளதை

இப்போது என்னால் உணர முடிகின்றது..! உங்களால் உணர முடிகின்றதா..?

எந்த நாட்டிலும் வாழக்கூடிய தகுதி எமக்கு வந்துள்ளது..!  அது எம்மை அறியாமலே வாழ்க்கை முறையாலும் கல்வியாலும் புகுத்தப்பட்டுள்ளது..! உண்மையான இயல்பை இழந்து,  இன்னோர் மக்களினது இயல்பை அணிந்துகொண்டுள்ளோம்..!  திறந்தவெளிச் சிறைச்சாலை போல் பல சீர்திருத்தங்கள் எமக்குள் புகுத்தப்பட்டுவிட்டன..!

 

“Hola Motova“  என்ற ஆங்கில சொல்லின் விளக்கத்தை கூகுளில் தேடிச்சொல்லியதுடன்,  கூகுள் போன்ற நவீனங்களின் பயன்பாடுகளைக் குறைக்கவேண்டும் என்றும், தற்காலப்பிள்ளைகள் மிகவும் மென்மையான தன்மை  (Too Sensitive) கொண்டவர்கள் என்பதால், கவனமாகவும், திடமாகவும் இருக்க வேண்டினேன். நிகழ்வுத் தொடக்கத்தில், குரு கடினமாகப் பேசியதால் முகம் வாடிய நபரையும், பிள்ளைகளின் குணத்தால், நிகழ்வையே  புறக்கணித்த குருவையும் அறிந்தேன்.

அன்பும் அக்கறையும் இருந்தால் கோபம்  கூடவரும்..!  கோபம் கூடினால் அழிவும் வந்துவிடும்..!  ஒரு புள்ளியில் அழிவைத் தடுத்து, அன்பைக்காக்க முனைய வேண்டும். இல்லையேல், அனைத்தும் பயனற்றுப்போகும்..!

 


ஆ.கெ.கோகிலன்

19-11-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!