ஏனைய ஊழியர்களின் தொல்லை..!
எனது நிறுவனத்தில் தனியாரின் பங்களிப்பும், கொம்பனிகளின் பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கின்றது. பாதுகாப்பு, சுத்தீகரிப்பு மற்றும் சிற்றூண்டிச்சாலை, புத்தகக்கடை எனப்பல இருக்கின்றன.
எமது நிறுவன ஊழியர்களின் முரண்பாடுகள் தாண்டி இவர்களுக்கு
இடையிலும் ஒரே முரண்பாடுகள் வந்து, இரவு பகலாக எனது நிம்மதியைக் கெடுக்கும். அவர்களைக்
குறை சொல்ல முடியாது..! ஏனென்றால் அவர்களின்
கல்வியறிவு மிகவும் குறைவு. இருந்தாலும் அவர்களிடம்
வரும் பிரச்சனைகள் படுபயங்கரமாக இருக்கும். ஒருவரை ஒருவர் பிடித்துத் தின்பது போல்
செயற்படுவார்கள்..!
ஆனால் நிலமைகளை நன்றாகப் புரியவைத்தால் உணர்ந்து கொள்வார்கள்.
திரும்ப மீண்டும் பழைய நிலைக்கு வருவார்கள். அதே பாணியில்
கூப்பிட்டுக் கதைத்து, மந்திரம் ஓதி மனத்தைச் சாந்திப்படுத்தி அனுப்ப வேண்டிய கடமையை
இறைவன் தந்துள்ளார். இவ்வாறு தொடர, ஒரு கட்டத்தில் கடவுளுக்கு என்னைச் சாந்திப்படுத்த
வேண்டிய தேவை வரலாம்..!
உலகத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் சமநிலைக்குழப்பங்கள் பல வகைகளில் மக்களைப் பாதிக்கின்றன.
நிம்மதியைப் பறிக்கின்றன..!
நிறைவாகப் போன பாதைகளில், குண்டும் குழிகளும் வர, சிரமப்பட்டு போகவேண்டிய நிலைக்கு
பலர் தள்ளப்படுகின்றார்கள்.
எமது நிறுவனச் சிற்றூண்டிச்சாலையில்
வேலைச்சுமை காரணமாக ஒரு பெண் ஊழியரை, சிற்றூண்டிச்சாலை நடத்தும் நபர் சேர்த்ததால்,
பாதுகாப்பு ஊழியர்கள் குழம்பினார்கள். இரவில் பெண் ஊழியர் வேலைசெய்வது நல்லது அல்ல
எனக்கூறி, என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். நானும் அவர்களிடம் புத்திமதி கூறி, பெண் ஊழியர்களை
எவ்வாறு வேலைக்கு வைக்கவேண்டும் என்ற நியதியையும், நேர எல்லையையும் கூறினேன். அதேநேரம்
மறுபக்கம் சிற்றூண்டிச்சாலை நடத்துனர் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளை குறிப்பாக இரவுநேரக்கடமைகளை
ஒழுங்காகச் செய்வதில்லை என்றும், 10 மணிக்குப் பிறகு, நன்றாகப் மின்விசிறிகளைப் போட்டுவிட்டு
உறங்கிவிடுவார்கள் என்றும் கூறினார். இதேபோல் சுத்திகரிப்பு ஊழியர் தன்னை, எனது அலுவலக
ஊழியர் வேலைக்கு வராததற்கு கெட்ட வார்த்தைகளால் கூறினார் என்றும், தான் இனிமேல் வேலைக்கு
வரமாட்டேன் என்றும் கூறினார். அதேவேளை இன்னோர் பாதுகாப்புப் பெண் ஊழியர் எமது அலுவலக
ஊழியர், தன்னைத் தரக்குறைவாகப் பேசுவதாகக் கூறினார். இவ்வாறாக ஆளுக்கு ஆள் மாறி மாறி
குற்றம் சாட்டுவதால் நீதிமன்றம் போன்று ஒவ்வொரு நாளும் நீதி நியாயங்களைக் கூற, எனக்கே
வெறுத்துவிட்டது..!
55 வயதோடு ஓய்வை அரசு அனுமதித்தால்,
மிகவும் நன்றாக இருக்கும். இல்லை, வலிய ஓய்வை எடுத்தாலும் இவருக்கு நடத்தத்தெரியாது
என்றும் அதனால் தான் ஓய்வை எடுத்தார் என்றும்
சொல்ல பலர் சமூகத்தில் இருக்க, ஏன் அவர்களை பேச வைக்கவேண்டும்..? பதிலாக, ஓய்வு வரும்
வரை சகித்துக்கொண்டு வேலையைச்செய்துவிட்டு,
செல்வது சிறந்தது என்ற எண்ணத்தில் இருக்கின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
03-11-2023
கருத்துகள்
கருத்துரையிடுக