ஆயுதபூஜைப் பேச்சு..!

 



நேற்றே துறைத்தலைவர் ஒரு பேச்சு செய்ய வேண்டிக்கொண்டார். நானும் “ஓம்” என்று சொல்லிவிட்டு, அது  தொடர்பாக எந்தத் தயார்படுத்தலும் இல்லாமல் இருந்துவிட்டேன். பல நாட்கள் பட்டமளிப்பு விழா காரணமாக அலுவலகம் செல்லவில்லை. பல வேலைகள் முடிக்காமல் எனது கையெழுத்திற்காக காத்திருந்தன. இன்று சென்றதும், எல்லாம் ஒரேயடியாக வர ஒன்றொன்றாக முடித்துக்கொண்டு வந்தேன். இடையில் பூஜை  ஆரம்பமாகப்போகின்றது வரச்சொல்லி அழைப்பு வந்தது..!

நானும் வேட்டிகட்டிச் செல்லத்திட்டமிட்டிருந்தேன்.  இடையில் ஒரு ஊழியர் காசோலைகள் அவரசமாகக் கொடுக்கவேண்டும்..! கையெழுத்தைப்போடும்படி கேட்டுக்கொண்டார். சரி வேலை முக்கியம் என்ற வகையில் அதனை முடித்துவிட்டு, வேட்டியை மாற்ற, ஒருவர் விரிவுரையாளர் என்னைக்கூட்டிச்செல்ல வந்துவிட்டார். பின்னர் அவருடன் சென்று, அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டேன்.

பூஜை முடிந்த சிறிது நேரத்தில் என்னையும் பேச அழைத்தார்கள்.

நான் நவராத்திரி பற்றி அறிந்த விடயங்களை இவ்வாறு கூறினேன்.

” ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாக்களில் முதல் மூன்றும் துர்க்கைக்கும், அடுத்த மூன்றும் லக்ஸ்மிக்கும், அடுத்த மூன்றும் சரஸ்வதிக்கும் இறுதியாக நடைபெறும் பூஜை, விஜயதசமி என்று சொல்லப்படுகின்ற இறுதிப்பூஜையை கொண்டாடுவதன் நோக்கம் நீங்கள் அனைவரும் அறிந்ததே..! நான் ஒன்றும் புதிதாகச் சொல்வதற்கு இல்லை. மகிசா சூரனின் கொடுமை தாங்காமல் மக்கள் சக்தியை வேண்ட, அவரும்  அவனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு, பத்தாவது நாளான இன்று அவனை வெல்வதே கதை..!  அதாவது கெட்டவனை அழித்து நல்லவர்களைக் காப்பதே கதை..!”

இந்த விழாவை இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் தமிழர்கள் இருக்கும் நாடுகளில் வெகுவிமர்சையாகக் கொண்டாடுவார்கள்.   இன்றைய நாளில் ஏடுதொடங்குதல் அல்லது வித்யா ஆரம்பம், தொழில் தொடங்கல்  போன்ற பல நல்ல காரியங்களை ஆற்றினால் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை.

அதனை கதைவடிவங்களில் சொல்வதன் நோக்கம், விதிமுறைகளை எமது வாழ்வியலில் திணிப்பதற்கே..!

விதிகளை வகுத்து, அதன் அடிப்படையில் எல்லோரும் நடந்தால் தவறுகள் குறையும் என்பது உண்மை.

இன்றைய எனது செய்தி, மகிசா சூரன் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளான்..! அவனைக் கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். வெளியில் கெட்டவர்களைத் தேடுவதை விட உங்களுக்குள் இருக்கும் கெட்ட இயல்புகளை நீக்க, நல்லவிடயங்கள் வெளிவரும்..!

இறைவன் தெரிவான்..!  இறைவன் எங்கும் உள்ளான். எல்லா இடத்திலும் உள்ளான். எம்மிலும் உள்ளான்..! எல்லோரும் இறைவன்களே..! யார் நல்லவர்..? யார் கெட்டவர்..?

யாரை வெறுப்பது..? யாரைத் தண்டிப்பது..?  ஒவ்வொருவரும் திருந்தினால், எல்லாம் நல்லதாக மாறும்.

இறைவன், எமக்குள் இருப்பது தெரியும் என்று சொல்லி, எமக்கு வரும் கெடுதல்களுக்கு நாமே காரணம் என்று சொல்லி, “தீதும் நன்றும் பிறர் தர வரா..!”

என்று சொல்லி, எமக்குள் இருக்கும் மகிசா சூரனை அழிக்க வேண்டும். நல்லவர்களாக மாறவேண்டும். இந்த உலகம் இவ்வளவு சிக்கல்களுக்குள் மாட்டியதற்கு வியாபார எண்ணமே காரணம்..! எல்லாத்திலும் வியாபாரம்..! மருத்துவம், கல்வி, தண்ணீர், இனி காற்று என எங்கும் வியாபாரமே வரப்போகின்றது. அப்படிவந்தால் அழிவுகள் சாதாரணம்..!

உக்ரேன்-ரஷ்யா, இஸ்ரேல்-பலஸ்தீனம்  எனப்போர்கள் நடப்பதற்கு என்ன காரணம்..?  பிழையான அறிவுகளே..!

 

சேர்ப்பு, பிரிப்பு, சக்திக்காப்பு போன்ற விதிகளுடன் தொடர்புபடுத்தி, எமது உடலின் நிலையைப்பற்றிச் சொன்னேன். இறப்பு, பிறப்பு எல்லாம் ஒவ்வொரு நிலைகளே..! எல்லாம் இங்கேயே உள்ளன..! நிலைகள் மாறியுள்ளதே தவிர, அனைத்தும் இங்கே உள்ளன..!

 

அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழா பற்றியும், அங்கு வழங்கப்பட்ட தங்கவிருதுகள் பற்றியும், எமது நிறுவனத்திற்கு கிடைத்த தங்க விருதுகள் பற்றியும், அடுத்த முறை யாழ்ப்பாணத்திற்கு தகவல் தொழில்நுட்பத்தில் தங்கவிருது யாரேனும் ஒரு மாணவருக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இம்முறை விருதுபெற்ற வடமாகாணத்திலுள்ள மன்னார் நிறுவனத்தைப் பாராட்டியதுடன், எமது நிறுவனமும் பெற  முயற்சி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

எல்லா குடும்பங்களில் பெற்றோர் சொல்வது போல் எனக்குச் சொல்ல விருப்பமில்லை. முயற்சி செய்யவும்..! பலனைப் பிறகு பார்ப்போம்.

என்று சொல்லிவிட்டு, எமது கல்வி அழைச்சர், இராஜாங்க  உயர்கல்வி அமைச்சர்கள் பட்டமளிப்பிற்கு வராததற்கு காரணம், தற்போதைய நாட்டுச்சூழலால் எழுந்த விளைவுகளால், மக்களை சந்திக்க, அவர்கள் விரும்பவில்லை..!

இறுதியாக இந்த நிலைகள் மாற இறைவனை வேண்டி, அங்கு கலந்துகொண்டவர்களையும் வேண்டச்சொல்லி உரையை முடித்தேன்.

பசியால், பேச்சு முடிந்ததையிட்டு, பெருமகிழ்வு கொண்டு கைதட்டினார்கள்..!

 

ஆ.கெ.கோகிலன்

24-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!