மகளின் கோரிக்கை..!
இன்று முடிக்கப்பல திட்டங்கள் இருப்பதால் மனத்தில் பதட்டம்
தோற்றிக்கொண்டது. எல்லாவற்றையும் எப்படியாவது முடிக்க வேண்டும்..! எனது இரண்டாவது மகள்,
இன்று மதியம் ரிப்போட் கொடுப்பார்கள். கிளாஸ் ரீச்சர் வரச்சொன்னார் வந்து, ரீச்சருடன்
கதைத்துவிட்டு சைன்பண்ணிவிட்டுப்போகச் சொன்னார்.
முகாமைத்துவ மாணவர்கள், குறூப்
போட்டோ எடுப்பதற்காக, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து, எமக்கு எல்லாம் குளோக்
(Cloak) வாங்கி வந்துள்ளார்கள். அதை அணிந்துதான் இம்முறை படம் எடுக்க, அந்தத் திணைக்களம்
தீர்மானித்துள்ளது. தெஹிவளை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமும் அந்த வழமையைப் பின்பற்றுவதால்
நானும் ஒத்துக்கொண்டேன். நல்ல விடயங்களை, மற்றவர்களுக்கு அதனால் பாதிப்பு இல்லை என்றால்
ஒத்துக்கொள்ளலாம் எனநினைப்பவன் நான்..!
இதனிடையே மட்டக்களப்பு தொழில்நுட்பவியல் பணிப்பாளர், அங்குள்ள
பல நிறுவனத்தலைவர்களுடன் யாழ்ப்பாணம் வந்ததாகவும், எமது நிறுவனத்தைப் பார்க்க விரும்புவதாகவும்
கேட்டார்..!
நானும் பார்க்கலாம் என அனுமதி கொடுத்ததால், இதோ இதோ வாரேன்
என்று என்னைப் பதட்டப்படுத்தினார்.
இதற்கிடையே பல மாணவர்கள் தமது பட்டச்சான்றிதழை எடுப்பதற்கும்,
தமது ஆவணங்களை மீளப்பெறவும் எனது அறையைச் சூழ்ந்து இருந்தார்கள்..!
இவற்றிற்கு இடையே கணக்கியல் துறை மாணவர்கள் கணக்கியல் தினத்தை
கொண்டாட, முதலே அனுமதி கேட்டிருந்தார்கள். நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். அதனடிப்படையில்
விழாவைத் தொடக்க என்னை அழைத்தார்கள்..!
எனது அறையைச் சூழ்ந்து பிள்ளைகள் காத்துக்கொண்டிருந்தாலும்,
அங்கும் கணக்கியல் துறைப்பிள்ளைகளும், கொழும்பு பங்குச் சந்தையில் இருந்து வந்த முக்கிய
வளவாளர்களும் காத்திருந்தார்கள்..!
எனவே அங்கு சென்றேன். அந்த நிகழ்வை மங்கல விளக்கேற்றித் தொடக்கிவிட்டு,
இரண்டு மாணவர்களின் பேச்சைக்கேட்டுவிட்டு, எனது சிறிய உரையையும் ஆற்றிவிட்டு கீழே வந்தேன்.
படம் எடுப்பதற்கு காத்துக்கொண்டிருந்தார்கள்..! அதற்காக என்னைத்தயார்படுத்தி,
அதனை உடனே போய் எடுத்தேன். பின்னர், பட்டச்சான்றிதழைப் பெற இருக்கும் மாணவர்களுக்கான
அனுமதிகளை வழங்கிக்கொண்டிருந்தேன். என்ன என்று தெரியவில்லை..! தொடர்ந்து ஒரே பதட்டமாக இருந்தது..!
மதியம் 12.00 மணிக்கு மகளின் பாடசாலைக்குப் போகவேண்டும்.
இன்னமும் 30 நிமிடங்களுக்கு கிட்டவாகவே நேரம் இருந்தது. மட்டக்களப்பு உத்தியோகஸ்தர்கள்
இன்னும் வந்துசேரவில்லை. எனது பணிப்பாளர் நண்பருக்கு, போன் எடுத்தேன். வந்துகொண்டிருப்பதாகக்
கூறினார்.
அம்மா மற்றும் தம்பி குடும்பத்திற்கு என்று ஒரு தொகைப்பணத்தை
தங்கை அனுப்பியிருந்தார். அதனை எடுத்து அம்மாவிடம் கொடுக்கவேண்டியது எனது வழமையான ஒரு
கடமை.
ஆனால் கடந்த சில
நாட்கள் வேலைப்பளுவால் தள்ளிப்போய் வங்கியில் கேட்கும் போது பணம் வரவில்லை என்றார்கள்..!
பின்னர் தங்கைக்குச் சொல்லிச்சரிபார்க்க குறித்த நேரத்திற்குள் பணம் எடுக்காவிட்டால்,
பின்னர் அந்த இரகசிய எண்ணை மாற்றிவிடுவார்களாம். அதனைத் தெரிவித்ததுடன் புதிய எண்ணை
அனுப்பி, உடனே போய் அதனை எடுத்துக்கொடுக்க வேண்டினார். அதனையும் இன்று செய்யவேண்டிய
சூழல் வந்துவிட்டது..! நாளை சனி, வங்கிக்கு என்னால் போவது கடினம். சில வங்கிகள் திறக்காது..!
இவ்வாறாக எல்லாம் வந்து ஒரு இடத்தில் என்னை இறுக்கியது..!
நல்லவேளை மட்டக்களப்பு ஆட்கள் வந்து, ஏறக்குறைய 20 நிமிடங்களில் சென்றார்கள்..! 5 நிமிடம்
இருந்ததால் ஓடிச்சென்று பாடசாலைக்கும் ஒரு வரவை வைத்து, மகளையும், வகுப்பு ரீச்சரையும்
சமாளித்து, வரும்போது தங்கை சொன்ன வங்கி வேலையையும் முடிக்கக்கூடியதாக இருந்தது.
திரும்ப அலுவலகம் வரும்போது, பட்டச்சான்றிதழ் வாங்க நிறையப்
பிள்ளைகள் இருந்தார்கள். மதியம், வழமையாக நேரத்திற்கு சாப்பிடுவது எனது பழக்கம். இல்லை
என்றால் பல வேலைகள் தாமதமாகிவிடும். நான் கொண்டுவரும் உணவும் பழுதாகிவிடும்..! இன்று
ஒன்றும் செய்யமுடியவில்லை. நின்ற மாணவர் கூட்டத்தைக்குறைக்க விரைவாக எனது வேலைகளைச்
செய்து முடிக்க ஏறக்குறைய மணி இரண்டைத் தாண்டிவிட்டது.
ஒருவாறு எல்லோரது கோரிக்கைகளையும் சமாளித்து முடித்த திருப்தி
இறுதியாக மனதில் இருந்தது.
ஆ.கெ.கோகிலன்
10-11-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக