வீடு திரும்பல்..!



இன்று மொத்தம் நான்கு அமர்வுகள் இருக்கின்றது..! 4ஆவது அமர்வு முடிந்ததும், இரவு உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்குப் போகவேண்டும். இது தான் திட்டம்.

கொழும்பு வரும்போது, ஒவ்வொரு நாளும் எனது அலுவலக வாகனத்தில் வந்து செல்வதாகாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இங்கு சில மாற்றங்கள் செய்யவேண்டி வந்ததால் என்னால் நினைத்த மாதிரிச் செயற்பட முடியவில்லை.

ஏனைய சிங்களப் பணிப்பாளர்களுடன் இணைந்து, அவர்களுடைய வாகனத்தில் கடந்த மூன்று நாட்களும் தெஹிவளைக்கும், BMICH இற்கும் போய்வந்தாலும், இறுதி அமர்வு முடிந்ததும் அவரவர்கள் தமது பாதையில் போகவேண்டிய சூழல் இருந்த நிலையில், என்னுடன் மேலும் இரு பணிப்பாளர்களும் இணைந்து, எமது ஏனைய ஊழியர்கள் செல்லும் சாதாரண பெரிய பஸ்ஸில் தெஹிவளை வந்தோம். அந்நேரம் கடும் மழைபெய்ததால் வேறு ஒழுங்குகள் பற்றிச் சிந்திக்கவில்லை.

சிறிது தாமதம் என்றாலும் இரவு 9.30 இற்குள் தெஹிவளை தொழில்நுட்பவியல் நிறுவன விடுதிக்கு வந்து, குளித்து, BMICHஇல் எடுத்த இரவு உணவை உண்டு, சிறிது நேரம் அங்கு வந்த மற்ற நண்பர்களுடன் உரையாடி, அவர்கள் அனுப்பிய பின்னர் சிறிது நேரம் படுத்தேன். பின்னர், எமது வாகனம் வந்து சேர இரவு 11.00 இற்கும் மேலாகிவிட்டது. அங்கிருந்து நாம் புறப்பட ஏறக்குறைய இரவு 11.30ஐத்தாண்டிவிட்டது.

பயணம் தொடர்ந்தது..! நாளும் மாறியது..! எல்லோரும் தத்தமது பணிகளில் கூடிய கவனம் எடுத்ததால்,  அந்த அந்தப் பணிகளை சிறப்புடன் செய்து முடித்திருந்தார்கள். அதனால் களைப்பு எல்லோரையும் தொற்றிக்கொண்டது. சாரதியைத் தவிர மற்றைய இருவரும் இடையிடையே உறங்கிவிடுவோம். இறுதியில், அவராலும் நித்திரையுடன் வண்டியைச் செலுத்த இயலவில்லை. சிறிது சிறிது நேரம் உறங்கி, உறங்கி வந்தோம்.

வரும்போது, நான் முறிகண்டி பிள்ளையாரை வணங்கி, கடலையும் வாங்கி, உண்டு கொண்டே வந்துசேர்ந்தேன். மற்றைய இருவரும் களைப்புடன் ஒன்றும் உண்ணவில்லை. ஏறக்குறைய அடுத்தநாள் 7.30இற்குப்பின்னரே எனது வீட்டை அடைய முடிந்தது.

என்னை இறக்கிவிட்டு வாகனம் சென்றது..! நான் எனது வழமையான வேலைகள் செய்ய, முதல் உறக்கத்திற்கு செல்ல ஆயத்தங்களைச் செய்தேன்..!  வாகனத்தில் சிறிது சிறிது நித்திரை கொண்டாலும் அது எனது உடல் களைப்புக்குப் போதாது. அத்துடன் காலை நீட்டாமல் மடக்கி வாகனத்தில் வைத்திருந்ததால் பெரும் வலியாக அது இருந்தது.  இந்த வலிகளும் களைப்பும் போக ஒரு சிறு தற்காலிக மரணம் தான் வேண்டும். நீண்ட நித்திரை தான் மரணம்..! தற்காலிக மரணம் தான் ஆழ்ந்த நித்திரை..!  இப்போது எனக்குத் தேவை ஆழ்ந்த நித்திரை..!

 

ஆ.கெ.கோகிலன்

23-10-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!