கொள்கைப்பிடிப்பு..!

 



கொழும்புப் பிரயாணம் என்றால் முன்பு ஒரு காலத்தில் மிகுந்த சந்தோசத்தைத் தரக்கூடிய நிகழ்வாக இருக்கும். மாமாக்கள் அங்கே இருப்பதால் கூட ஒரு தெம்பும் வரும். போதாததற்கு நிறைய பெரும்பாண்மை இன சுற்றத்துடன் நல்ல நட்புறவுடன்  இருந்ததால், ஆமிப்பிரச்சனை என்றால் என்ன..? வேறு ஏதாவது பிரச்சனை என்றால் என்ன..? அவர்களின் உதவியால் சமாளித்து, வரக்கூடியதாக இருந்தது..!

பின்னர் விரிவுரையாளராக வந்த பின்னர், ஒவ்வொருவருடமும் இரண்டு தவணைகள் கொழும்பில் வேலைசெய்யவேண்டிய சூழல் வரும். அதனை நன்றாக அனுபவித்து, செய்து வந்தேன். குறைந்தது ஒருவருடத்தில் ஒரு மாதமாவது  நிற்கக்கூடிய சூழல் இருந்தது. அந்தக்காலத்தில் உறவுகள் இருந்தாலும், தெஹிவளை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன   விடுதியும், அங்குள்ள ஊழியர்களும், தலைமையக ஊழியர்களும் நட்பாகவும் மிகுந்த உதவியாகவும் இருந்துள்ளார்கள்..! அப்போது, நாடு போர் பதட்டத்தில் இருந்தாலும், எத்தனை செக்பொயின்டுகள் இருந்தாலும் சுலபமாக சென்றுவரக்கூடிய மனநிலை இருந்தது.

திருகோணமலையில் இருந்த காலத்தில், பஸ்களில் நின்றே கொழும்பு சென்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அந்நேரம் பஸ்களில் இருந்து செல்வதைவிட நின்று செல்வது சுலபமாக இருக்கும்.  பத்திற்கு மேற்பட்ட இடங்களில் இறங்கி, ஏறவேண்டிய சூழல் இருந்தாலும் அதை ஏற்று, அனுபவித்து வாழும் தைரியம் இருந்தது.

யுத்தம் முடிந்தது. செக்பொயின்டுகள் குறைந்தன..! வயதும் சிறிது சிறிதாகக் கூடி வர பயணங்களும் அலுக்கத்தொடங்கின. யாழ்ப்பாணம் வந்து, பல  பயணங்களை ஆரம்பத்தில் மேற்கொண்டாலும், பணிப்பாளராக வந்த பின்னர் பயணங்கள் தவிர்க்க முடியாத தேவையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் ஒருவாறு சமாளித்து போய்வந்தாலும், கொரோனா வந்த காலத்தில், எனக்கு வந்த நரம்புப் பிரச்சனை சில மாதங்கள் துண்டாகப் பயணங்கள் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தின..!  அத்துடன் உலக வாழ்க்கை முறையில் பல மாற்றங்களும் வந்தன. வீட்டில் இருந்தே வேலைசெய்யும் சூழலும், இணைய உதவி நேரடி ஜூம் கூட்டங்களும் வந்ததால் என்னால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீள முடிந்தது.

பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் தற்போது சூழல்   பழைய நிலைக்கு வருவதால், என்னாலும் அதற்கேற்ப செயற்பட முடிகின்றது.

பயணத்தையும் ரசிக்க முடிகின்றது.  வயது, சில இடையூறுகளைக் கொடுத்தாலும், முன்னாயத்தங்களுடன் சென்றால், ஒரளவிற்கு சமாளிக்கலாம்.

இந்த நிலையில், நேற்று மாலை ஏறக்குறைய இரவு 7.00 மணிக்கு ஏறிய  குளிர்சாதன வசதிகொண்ட பெரிய பஸ்ஸில், நிம்மதியான ஒரு பயணத்தை அதிகாலை 3.30 மணியளவில் நிறைவு செய்தேன். வழமையாக இரவு உணவை உண்டுவிட்டே பயணிப்பது வழக்கம். தற்போது, உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால், சாப்பிடாமல் பயணித்தேன். பசித்தால் எங்காவது பஸ் நிற்கும் போது சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். அவ்வாறே இடையில் பசித்தது. பஸ்ஸூம் நின்றது. முட்டை கொண்ட கறிபணிஸ், சினிச்சம்பல் பணிஸ், ஒரு சூடான கோப்பி என எடுத்துக்கொண்டேன். நல்ல புத்துணர்ச்சியுடன் பயணத்தை முடிக்க உதவியது.

அதன் பிறகு, தம்பி வீட்டுக்குச் சென்று, குட்டித்தூக்கமும், குளியலும் போட்டு, காலைச்சாப்பாட்டை இலகுவாக எடுத்துக்கொண்டு, பயிற்சி வழங்கும் நிலையத்திற்குச் செல்ல ஏறக்குறைய 9.00மணியிருக்கும். அங்கும் இன்னொரு சிறு காலைச்சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, தந்ரோபாய திட்டமிடல் பயிற்சியில் இணைந்தேன். எமது நிறுவன பெண் ஊழியர்கள்  இருவர் வந்திருந்தனர். கடந்த கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவிற்கான பயணத்தில், தங்கிய அறையில் தொலைத்த பெலிட் திரும்ப எனது கைக்கு வந்தது..!  தொலையாமல் கிடைத்தது என்பதில் இருந்தே இயற்கை என்னை அவதானிக்கின்றது என்பது புரிந்தது..!

ஒரு ரூபாய் தொலைத்தால் கூட கவலை வரும்..! அந்தப் பணத்திற்காக அல்ல..! தொலைக்கக்கூடிய கவலையீன குணத்தை வைத்திருப்பதால்..!

தெஹிவளைப் பணிப்பாளர் முதல் அதனை கொண்டுவந்து தந்த எமது நிறுவன பெண் விரிவுரையாளர்கள் வரை நன்றி சொல்லி, எனது பயணப்பையை எனக்குத் தரப்பட்ட ஒரு அறையிலும் வைத்தேன்.

பயிற்சியின் மதிய இடைவெளியில், தந்த மச்சச்சாப்பாட்டை ரசித்து உண்டுவிட்டு, அறைக்குச்சென்று சில அத்தியாவசியக்கடமைகளை செய்ய வெளிக்கிட, பேர்ஸ் தொலைந்தது புரிந்தது..! எங்கே தவறவிட்டேன் என்பது புரியவில்லை. இன்று  70 இற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ளனர். யாரை சந்தேகிப்பது..? புரியவில்லை..? யாராவது கள்ளன் வந்து திருடக்கூடிய சூழல்  இருக்கின்றதா என்பதும் தெரியவில்லை..!  எல்லாம் அந்தப் பேர்ஸூக்குள் தான் இருந்தது..!

சரி பார்ப்போம் என நினைத்து,  அந்த அத்தியாவசியக் கடமைகளை முடித்துக்கொண்டு பயிற்சி அறைக்கு வருகின்றேன். பலர் வந்திருந்தார்கள். எனது நிறுவன ஊழியர்கள் இருவரும் இருந்தார்கள். அவர்களோடு, என்னுடைய பேர்ஸூம் தனியாக யாரினது கண்ணுக்கும் படாமல், எனது கண்ணுக்கு மட்டும் படக்கூடியதாக இருந்தது. “நன்றி” என்று இயற்கையை நினைத்துவிட்டு, அந்த பெண் ஊழியர்களைப் பார்க்கின்றேன். அவர்களும் தங்கள் கண்ணுக்குப்படவில்லை என்றார்கள்.

மீண்டும் ஒரு விடயம் நினைவிற்கு வந்தது. கிடைக்க வேண்டியது  கிடைத்தே யாகும். நாம் சரியாக இருந்தால், அந்தப்பிரபஞ்சமே எமக்கு உறுதுணையாக இருக்கும். மீண்டும் எனது வாழ்வியல் கோட்பாடுகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றிசொல்லி அன்றைய நாளினை நிறைவாகக் கழித்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

26-10-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!