உடுவில் மகளிர் கல்லூரி-200
இந்தப் பாடசாலைக்கும் எனக்கும் சிறுவதில் இருந்தே தொடர்பு
உண்டு. எனது தாயாரின் தயார் இந்த உடுவில் மகளிர் கல்லூரியில் படித்தவர். அதனால் அந்தக்காலத்தில்
அதனைப் பெருமையாக பலருக்குச் சொல்வார். எனது அம்மம்மா படிக்கும் காலத்திலேயே ஏறக்குறைய
100 வருடங்களுக்கு மேல் இந்தக் கல்லூரி சேவையாற்றியுள்ளது.
அதன்பிறகு எனது தாயாரிற்கு அந்தக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு,
அவர்களது குடும்பப்பொருளாதாரம் காரணமாக இருக்கவில்லை..! இருந்தாலும், எனது தாயார் தனது
பிள்ளையை எப்படியாவது உடுவில் மகளிர் கல்லூரியில் படிக்க வைக்க முனைந்தார். அவர் நினைத்தது
போல், முன்பள்ளி, பின்பள்ளி என்று தொடங்கி வகுப்பு மூன்று வரை ஏறக்குறைய எனக்கு எட்டு
வயது வரை உடுவில் மகளிர் கல்லூரியில் படித்த பெருமை உண்டு. இந்தப்பாடசாலை எமக்கு கிட்ட
இருக்கின்ற பாடசாலையும் கூட. அத்துடன், எனது
வீட்டில் நான் மூத்த பிள்ளை என்பதால் ஏதோவிதங்களில் கஷ்டப்பட்டு கடன்கள் வாங்கி உடுவிலில்
படிப்பித்தது என்பதில் எனது தாயாரிற்குப் பெரிய பெருமையுண்டு. “தான் போகாவிட்டாலும்,
தன் மகன் போயுள்ளான்” என்பதை நினைத்து..! அதேவேளை,
எனது தங்கை என்னை விட 10 வயது இளையவர், அவர் பிறந்த சமயம் மீண்டும் வீட்டுப்பொருளாதாரம்
அதாலபாதாளத்திற்கு போக அவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை..!
அதேபோல், எனது மனைவியும் உடுவில் மகளிர் பாடசாலையில் தான்
இறுதிவரை படித்தவர்..! ஆனால் எனது இரு பெண்
பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு ஏற்படவில்லை..! வாய்ப்பு இருந்தும், இருவரும் தாமே வேம்படி
வேண்டும் என்று அங்கே சென்றுவிட்டார்கள்..! எனக்குப் பொருளாதாரம் இருந்தாலும் வற்புறுத்தி
பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப விருப்பமில்லை. அவர்கள் விரும்பியவாறு படிக்கட்டும் என்று
விட்டுவிட்டேன்.
அண்மையில் இக்கல்லூரி தனது 200 வருட கல்விச் சேவையை நிறைவு
செய்து, அது தொடர்பான பல நிகழ்வுகளை மேற்கொள்ளும் போது, மிகவும் சந்தோசமாக இருந்தது.
எனது மனைவி கூட, அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழலால் கவலைப்பட்டார். எனக்கும்,
சூழல் அவ்வாறே அமைந்தது.
இருந்தாலும் ஆசியாவில், விடுதியுள்ள முதலாவது பெண்கள் பாடசாலை
என்ற பெருமை இக்கல்லூரிக்கே உண்டு..! அந்த அளவிற்கு இந்தப்பகுதிகளில் பெண்களின் கல்வி
வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது..!
நான் கூட, யாழ்ப்பாணத்தில்
இருக்கும் போது, எமது கல்வி நிறுவனத்தின் சிறிய வளர்ச்சிகளை கொண்டாடியுள்னேன். இந்தக்கல்லூரியின் வளர்ச்சியை இலங்கைத் திருநாடே
கொண்டாட வேண்டும். அதற்கு தான் என்னவோ எமது புதிய பிரதமரும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான
ஹரினி அமரசூரிய இந்தப்பாடசாலைக்கு வந்திருந்தார்..!
இந்தக்கல்லூரி, மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் தனது சேவையை முழு
உலகிற்கும் வழங்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு, கல்லூரிக்காலத்தை நினைக்கின்றேன்.
என்னுடன் படித்த பெண்கள் சில பாட்டிகளாக இருக்கின்றார்கள்..!
ஆண்கள் சில தாத்தாக்களாக இருக்கின்றார்கள்..! அவர்களது பேரப்பிள்ளைகளும் இந்தக்கல்லூரியில்
படிப்பதைப் பார்க்கும் போது பேரானந்தம் ஏற்படுகின்றது..!
மக்கள் வந்து வந்து போவார்கள்..! ஆனால், அந்தக்கல்லூரி என்றும்
நிலைத்திருக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை அனைத்து மக்களும் கொடுக்க வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
23-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக