சுவாரசியப் பயணம்..?

 

 


நிறையத்திட்டங்களை வைத்திருக்கும் சமயம், தலைமையகத்தில் இருந்து மத்திய குழுக் கூட்டத்திற்கான அழைப்பு வந்திருந்தது..! அவ்வளவு தான், போட்ட திட்டங்கள் எல்லாம் தடுமாறின..! இந்தத் திட்டங்கள் எல்லாம் மாணவர்கள் நன்மைக்காக போடப்பட்டவை. விசேட வகுப்புக்கள் எடுத்து, ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும் என்று எல்லாம் நினைத்தேன். அத்துடன் வரவு போதாமையால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கடந்த கால வினாக்களை எழுதவும் படிக்கவும் சொல்லி, அதில் இருந்து கேள்விகள் கேட்டு, அவர்களின் தகுதி, சிறப்பாக இருந்தால் பரீட்சைக்கு அனுமதிக்கவும், தவறியவர்களுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுத்து, அடுத்த கட்ட  தகுதித்தேர்வை வாய் மூலமான கேள்விகளூடாக நடாத்துவதற்குத் திட்டம் போட்டிருந்தேன். தலைமையகக்  கூட்டத்தால், அனைத்தும் பிற்போட அல்லது கைவிட வேண்டிய நிலைக்குப் போய்விட்டது..!

மார்கழி மாதம் 13ம் திகதி வியாழக்கிழமை, நினைத்த படியே, சில திட்டங்களை மாத்திரம் முடித்தேன்..! அதில் ஒன்று, இந்த மாதத்திற்கான நிறுவனக் கூட்டம். அடுத்து, எமது வெள்ளிவிழா மலருக்கான புகைப்படம் எடுத்தல். அதுமாத்திரமன்றி, அன்று மதியம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளிவிழா நிகழ்வு.

ஒளிவிழா நிகழ்வு முடிய முதலே, எனது பேச்சுடன் நான் வெளிக்கிட்டேன். எனது பேச்சில் மதங்கள் எப்படி இருந்தாலும், அனைவரும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்றும், இந்த நிகழ்விற்குப் பிரதம அதிதியாக வந்தவர் எமது நிறுவனத்தில் படித்தவர் என்றும், தற்போது பிரபல பாடசாலையின் அதிபராக இருக்கின்றார் என்பதுடன், என்னை விட மூத்தவர் என்றாலும், படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை எமது நிறுவனத்திலேயே நிறுவியவர்..! அவரைப் போல் பலர் இங்கே உருவாக வேண்டும் என்பதுடன், நம்பிக்கை வைத்து, எதிர்காலத்தை முகங்கொடுக்க வேண்டும் என்பதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களை கூறி, முற்கூட்டிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடித்துக்கொண்டு, எனது நிறுவன விரிவுரையாளர் ஒருவரது உதவியுடன் திருகோணமலை புகையிரத நிலையத்திற்கு சென்றேன். அரை மணிநேரம் முன்பே வந்ததால், அந்த நிமிடங்களை மகிழ்ச்சியாக மாற்றினேன். மறந்த பல காட்சிகளைப் படங்களாக போனுக்குள் பிடித்துக்கொண்டேன்.

சரியாக, மதியம் 1.30 மணிக்கு வெளிக்கிட்ட கடுகதி புகைவண்டி கொழும்பு செல்ல இரவு 7.50ஐ தாண்டிவிட்டது. ரெயினில் வந்த சாப்பாடுகள் சிலவற்றை வாங்கி உண்டேன். ஒளிவிழாவில் தந்த சிற்றூண்டியும், புகைவண்டியில் உணவாக மாறியது..!

ஏறக்குறைய இரவு 9.00 மணிக்கு கிட்ட தெஹிவளையில் இறங்கி, இடியப்பம், வடை மற்றும்  பால் என்பவற்றை இரவுணவாக எடுக்க, ரூபா.700 பில் வந்தது..! பின்னர் தெஹிவளை கிழக்கு மாகாண தங்குமிட விடுதியில் தங்கினேன். நுளம்புகள் வாட்டி எடுத்ததால், சரியாகத் தூங்க முடியவில்லை. அழகான இளைஞன் ஒருவர் அந்த அறைக்குள் வந்து தங்கினார். நான் இரவு படுக்கும்போதே அவர் வந்தார். சற்று புன்முறுவலுடன் நானும் படுத்துவிட்டேன். விடிய விரைவாக எழும்பி, குளித்துவிட்டு படுக்கப் போராடினேன். அப்போது அந்தப் பையன் வெண்டும் என்றால் லைட்டைப் போட்டுப்படுங்கள் என்றார். பின்னர், அவ்வாறே செய்தேன்.

அந்தப் பையனைப் பற்றி அறியும்போது, அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தில் வேலைசெய்வதாகவும், அவரே இந்த அறையை இவருக்கு ஒதுக்கக் காரணமானார்..! ஆனால், அந்தப் பையன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில், விமானப் பொறியியலாளராகப் பணியாற்றுகின்றார்..! ஜோன் கொத்தலாவ இராணுவப் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 20 இலட்சம் பணம் செலுத்தி, இந்த பொறியியல் பட்டத்தை முடித்துள்ளார்..! 300 பேருக்கு மேல் இந்தக்கற்கை நெறிக்கு விண்ணப்பித்து, 20 பேருக்கு குறைவானவர்களே தெரிவானார்கள்..! ஆனால் அந்தக்கற்கை நெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் வெறும் 7 பேர்கள் தான்..!  இவரும் அதில் ஒருவர் என்பதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை கிடைத்துள்ளது..! தற்போது ஆரம்பநிலை உத்தியோகஸ்தராக இருக்கின்றார். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் சம்பளம் பெறுகின்றார்..! கிழமையில் இரண்டு நாட்கள், வெறும் 24 மணித்தியாலங்கள் தான் வேலைசெய்ய வேண்டும். நல்ல வேலை என்றும், 2 வருடங்கள் அனுபவம் பெற்றால், இங்கேயே மாதம் 25 இலட்சம் சம்பளம் பெறமுடியும் என்றார். எனக்குத் தலை சுற்றியது..! இலங்கையிலே இவ்வளவு சம்பளமா..?

படிப்பைப்பற்றிக்கேட்டேன். “அங்கே எல்லா வழங்களும் இருக்கின்றன. அத்துடன் மாணவர்களுக்கு ஒழுங்கு முறையான சீருடைகள் இருக்கின்றன..! சீருடை இல்லாமல், யாரும் வகுப்பிற்குப் போக முடியாது..!  படிப்பும் தரமாக இருக்கின்றது. வேலை வாய்ப்புக்களும் உலகம் பூராகவும் இருக்கின்றன” என்றார். அவர் க.பொ.த உயர்தரத்தில் கணிதம் பயின்றவர்.  குறித்த கற்கைநெறியை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தவர். அதனால், எயர்னோடிக்கல் எஞ்ஜினியராக வந்துவிட்டார்..! என்னுடன் இவ்வளவு விடயங்களையும் பகிர்ந்ததற்கு, அவருக்கு நன்றி சொன்னேன். அவர் மாவனல்ல என்ற இடத்தை சேர்ந்த சகோதர இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்..!

வடக்கு மாகாணத்தில் இருந்து, இன்னொரு  யாழுக்கான பணிப்பாளரும் வந்திருந்தார்..! சில விடயங்கள் கதைத்தோம். இந்தக்கூட்டம் தேவையற்ற ஒன்று..!  என்ற நிலைப்பாடு, இருவரிடத்திலும் இருந்தது. இருந்தாலும், பணிப்பாளர் நாயகம் தனது தவணை முடிவதாகவும், அதனை முன்னிட்டு, அனைவரையும் சந்திக்கும் ஒரு தருணமாகவும் இதனைக் கருதியதால், ஒன்றும் கதைக்க முடியவில்லை.

அரச நிறுவனங்களும், ஊழியர்களும் அரச விதிமுறைகளைச் சரியாக பின்பற்ற வேண்டும். புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கியுள்ளது..! அது தான் மக்கள் அனைவருக்கும் நல்லது. கிழக்கு மாகாண பங்களாக் கீப்பர்  கிழக்கு மாகாணம் தவிர, வடக்கு மற்றும் வேறு மாகாண மக்களையும் தங்க அனுமதித்தால், கிழக்கு மாகாண மக்களை அனுமதிப்பதில் சிக்கல் எழலாம். இதற்கு சரியான ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும். முன்னுரிமையை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கிய பின்னர் இடமிருந்தால், ஏனைய மகாண அரச உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கலாம். அதன் பிறகே, ஏனைய குடும்ப உறவுகளுக்கு வழங்க வேண்டும். இடமிருந்தால் யாருக்கும் வழங்கலாம். ஆனால் கிழக்குமாகாண ஊழியர்கள், கேட்கும்போது  இவ்வாறு செய்துவிட்டு, இடமில்லை என்றால் பின்னர் கேள்விகள் எழும். தேவையில்லாத சிக்கல்கள் வரும். எனவே அங்கு வேலைசெய்பவர்களும், தங்க விண்ணப்பம் கோருபவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

 

வழமைபோல் அல்லாது, சொன்ன நேரத்தில் கூட்டம் தொடங்கி, மாலை 2.00 மணிக்கு முன்னரே முடிந்துவிட்டது..!

கூட்டம் வேளைக்கு முடிந்ததால், முதலில் யாழ் போக நினைத்தேன். இடையில் மனம்மாறி, தம்பி வீட்டிற்குப் போக நினைத்தேன். அவ்வாறே அவர் வீட்டிற்கு செல்லும்போது, சில பொருட்களையும் வாங்கினேன். ஆனால், தம்பி வீட்டில் ஆட்கள் இல்லை. சரி என்று தம்பிக்கு போன் பண்ண பெரிய மாமா வீட்டிற்குப் போகச் சொன்னார்.  சரி என்றபடி பஸ் ஏறினேன். திரும்பவும் மனம் யாழ் போகத் தூண்டியது..! பெற்றாவிற்கு ரிக்கெட் எடுத்துவிட்டு, பஸ் வெள்ளவத்தை வரும்போது, மனம் திரும்ப மாமாவை பார்க்கத் தூண்டியது..! அதற்குக் காரணம்  அவரது வயதும், இருக்கும் இடமும்..! இனி இலங்கை வருவாரா என்பதே சொல்லமுடியாது..!  அந்த நினைப்புடன் இடையில் இறங்க, மிகுதிப் பணத்தை நடத்துனரும் வெறுத்துக்கொண்டு தந்தார். பின்னர் மாமாவீட்டில் ஏறக்குறைய இரவு 6.30 மணி வரை நன்றாக நேரத்தைச் செலவழித்துவிட்டு, பின்னர் வெள்ளவத்தையிலுள்ள அரைச்சொகுசு வண்டியில், கடைசி இருக்கையில் அமர்ந்தேன். அங்கும் இரண்டு இளைய நண்பர்கள் கிடைத்தார்கள்..! ஒருவர் SLIITஇல் கணினி மென்பொருள் படித்துவிட்டு வேர்த்துசாவில் (Virtusa) இல் AI துறையில் வேலைசெய்கின்றார். அவருக்கு வேலை பிடிக்கவில்லை..! அதனால் ரொபோட்டிக் எஞ்ஜினியரிங் படிக்க பிரித்தானியா செல்லத் திட்டமிட்டுள்ளார். அதற்கு 20 இலட்சத்திற்கு மேல் கற்கைநெறிக்கு செலவழித்துள்ளார்..! இன்னும் 30 இலட்சம் தேவைப்படும் என்பதால், அங்கு சென்று படித்துக்கொண்டு பகுதிநேர வேலைகளைச் செய்து, மிகுதிக் கற்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த நண்பர், பார்க்க இளமையாக இருந்தாலும், 42 வயதை உடையவர்..! அண்மையில் திருமணம் செய்தவர்..! கணக்கியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர்..! ஒரு சர்வதேசப்பாடசாலையின் நிதிப்பிரிவில் கடமையாற்றுகின்றார். ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கு நிகராக சம்பளம் எடுத்தாலும் மிகச் சிக்கனமாக வாழ்வைக்கொண்டு செல்கின்றார்..!  AAT உம் படிக்கின்றார். கடந்த 20 வருடங்களாகக் கொழும்பில் பல வேலைகள் செய்து,  பல அனுபவங்களைப் பெற்றுள்ளார்..! செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து வரும் இவர், இறைபக்தி மிக்கவர். சாவகச்சேரியில் திருமணம் செய்தவர். அவரது மனைவி ஒரு கலைப்பட்டதாரி. கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் வேலைசெய்கின்றார்..! அரச வேலையையும், தனியார் வேலையையும் ஒப்பிட்டு, ஏன்  அரசு வினைத்திறன் இல்லாமல் இருக்கின்றது என்பதற்கான காரணத்தை இயல்பாகச் சொன்னார்..! என்னால் மறுக்க முடியவில்லை. குறிப்பாக இந்த இரு இளைஞர்களும் கல்லியங்காட்டைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் அறியாதவர்கள்..!

நேரம் போனதே தெரியவில்லை. பஸ்ஸில் குளிர்சாதன வசதி இல்லாவிட்டாலும் தொடர்ந்து குளிராகவே இருந்தது..! சில ஜன்னல்கள் மூட முடியவில்லை.  அதனால் நித்திரையே கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய காலை 4.30 இற்கு பஸ் யாழ் வந்து சேர்ந்தது. அங்கிருந்த எனது மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு வர, காலை மணி 5 ஆகிவிட்டது..! பின்னர் குளித்து தேநீர் அருந்திக்காலை உணவை முடித்தக்கொண்டு படுக்க மணி 8ஐத் தாண்டிவிட்டது. விழித்து எழ  மாலை 3.00யாகிவிட்டது. பின்னர் குளித்து, சாப்பிட்டு, கார்த்திகை விளக்கீட்டினை  ஏற்றி அமர மணி இரவு 8.00ஐத் தாண்டிவிட்டது..!  கடந்த மூன்று நாட்களும் இனிதே நகர்ந்தன.

 

ஆ.கெ.கோகிலன்

16-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!