சிற்றூண்டிச்சாலை நடத்துனரின் முடிவு..!
எனக்குத் தெரிய எமது நிறுவனத்தில் சிற்றூண்டிச்சாலையை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. நான் அறிந்த வகையில், பல சிற்றூண்டிச்சாலை நடத்துனர்கள் இங்கு அதனை நடத்தியிருந்தாலும், ஒரு சிலரே ஓரளவிற்கு தமக்கு நட்டம் வராத வகையில் நடாத்தியுள்ளார்கள்.
அப்படியிருந்தாலும், எப்போது சிற்றூண்டிச்சாலையால் தமக்கு இலாபம் கிடைக்கவில்லை
என்பதையும், தனது கையால் இவ்வளவு பணம் மேலதீகமாகச் செலவழித்துவிட்டதாகவும் சொல்வார்கள்..!
நான் கூட இவர்களுடன் பலமுறை கதைத்துள்ளேன். நட்டம், நட்டம் என்று பலமுறை
சொல்லும்போது, சரி நட்டம் என்றால் விட்டுவிட்டு போகட்டும் எனச்சொல்லிவிட்டேன். இதனை நடத்துவதால் ஒரு இலாபமும் இல்லை என்றால் நான்
வேறு என்ன செய்ய முடியும்.
இவ்வாறாக ஒருவர், வெறுத்துச்சொல்லும் போது, என்னுடன் உடற்பயிற்சியில்
ஈடுபட்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர், தனது மச்சான்
சிறப்பாகச் சிற்றூண்டிச்சாலையை நடாத்துவார்
என்று சொல்லி, அவரையும் கண்டியில் இருந்து வரவளைத்து சில நாட்கள் சிறப்பாக நடாத்தினார்கள்.
எவ்வளவு தான் சிறப்பாக நடாத்தினாலும், சில வாரங்களில் மக்களின் சுவைகள்
மாறத்தொடங்கிவிடும். இங்கும் அது நடந்தது..!
சில மாணவர்கள் சிற்றூண்டிச்சாலையை விடுத்து அயலில் உள்ள கடைகளுக்குச்
செல்லத் தொடங்கினார்கள். தற்போதுள்ள பாதுகாப்பு ஊழியர்களும் அதனைக்கட்டுப்படுத்த முடியாமல்,
சுவையாகவும் நியாயமாகவும் உணவை வழங்கினால் மாணவர்கள் நிச்சயம் வெளியே போகமாட்டார்கள்
என கருத்துத்தெரிவித்தார்கள்.
எனவே நானும் இந்தவிடயம் தொடர்பாக மாணவர்களுக்கும், குறிப்பாக துறைத்தலைவர்களுக்கும்,
இவற்றுடன் தொடர்புள்ள ஏனையவர்களுக்கும் அலுவலகக்
கூட்டத்தில் இந்த விடயத்தைக்கவனத்தில் கொண்டுவந்தேன். அதில், கன்ரீனை நடாத்துவது தனக்குச் சிரமமாக உள்ளதாகவும்,
இதனால் நன்மை ஒன்றும் இல்லை என்றும், தற்போது தன்னுடன் உதவி செய்த உறவினரும் வெளிநாடு
சென்றுவிட்டதாகவும், தான் சிற்றூண்டிச்சாலையை
விடப்போவதாகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இவ்விடயத்தைக் கூட்டத்தில் எடுத்துக்கூற, அவர்கள் சிற்றூண்டிச்சாலையை மூடவேண்டாம் என்றும்,
அவரது பொருட்களை வாங்குவோம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உறுதி படக்கூறினார்கள்.
எமது அலுவலக உத்தியோகஸ்தர்களும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டினர்.
ஒருவாறு கூட்டம் முடிந்தது..!
எனது வயிற்றுப்பிரச்சனை காரணமாக, சிற்றூண்டிச்சாலையைப் பற்றி நான்
நினைத்துப்பார்க்க முடியவில்லை. வரும் நாட்களில் பதிவாளருடன் இணைந்து, தெளிவாகக் கதைப்போம்
என இருந்துவிட்டேன்.
இன்றும் இவ்விடயம் தொடர்பாகச் சிற்றூண்டிச்சாலை நடத்துனருடன் கதைக்கும்போது அதே
சிக்கல் நீடித்தது..! அவர் இதனை நடத்துவதால் தனக்கு இலாபம் இல்லை என்பதோடு, தனது மனைவியிடம்
இருந்து, மேலதீகமாகப் பணம் வேண்டுவதாகவும் கூறினார்..!
தற்போது, அவர் கூட இருந்த உறவினரும் வெளிநாடு போனதால், அவருக்குத்
தனியாகச் சிற்றூண்டிச்சாலையை நடாத்துவதும் கடினமாக இருக்கின்றது.
எனக்கும் அவரது நிலை புரிந்தது..! சரி இந்த செமஸ்டர் வரை பொறுத்திருக்கும்படி
கோரியுள்ளேன். காலம், நேரங்கள் மாற, சில சமயம் பிரச்சனைகள் மிக இலகுவாகத் தீர்ந்துவிடும்.
அனைவரது சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிடும். நம்பிக்கை தான் வாழ்க்கை..!
நாளை இருப்போம் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவு முயற்சிகளையும் போடுகின்றோம்.
இல்லையென்றால் நொடிகளிலே விலங்குபோல் மாறிவிடுவோம்..!
ஆ.கெ.கோகிலன்
07-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக