உண்மை உரைப்பான்..!
பொதுவாக மக்கள் எல்லோரும் ஏதோவோர் விதத்தில் இந்தப்பூமியில்
நிலைத்திருக்கவே விரும்புவர். நீண்ட காலம் பதவியில் இருக்க விரும்புவர். மக்கள் தம்மை
எப்போதும் மதிக்க வேண்டும் என்று விரும்புவர். தன்னை நல்லவாறு காட்டிக்கொள்ள விரும்புவர்.
எப்போதும் நிலைத்த கொள்கையுடன் இருப்பதை விரும்புவர். பிரியாமல் ஒரே குடும்பமாக இருக்க
விரும்புவர். பிறந்த சமூகத்தின் பெருமையைத் தொடர்ந்து பேண விரும்புவர். இவ்வாறாகப்
பல நிலையான விடயங்களைச் செய்ய விரும்புவதால், சில பொய்களை அல்லது மறைப்புக்களை செய்யவேண்டிய
சூழல், பொதுவாக எழும்..! எப்போதும் கெத்தாக இருக்க வேண்டும் என்றால், பலவீனங்களை வெளியே
காட்டக்கூடாது. இந்தப் பூமியில் பலவீனங்கள் இல்லாமல் யாராவது ஒருவர் இருப்பாராயின்,
அவர் தான் நிஜக்கடவுளாக மதிக்கத்தகுந்தவர். ஆனால் அதன் சாத்தியம் மிக மிகக்குறைவு..!
ஒரு நேரத்தை, பார்த்துவிட்டு தொடர்ந்து அந்த நேரத்தைச் சொல்லிக்கொண்டு
இருக்க முடியாது. சொன்ன சில நிமிடங்களில் அந்த
நேரம் மாறிவிடும்..! அதேபோல் சூழல் மாறிவிடும்..! இவ்வாறாக இயற்கையில் பல விடயங்கள்
மாறிவிடும்..! அந்த அந்த மாற்றங்களை உடனுக்குடனே சொல்லும்போது, பலருக்கு வேடிக்கையாகவும்,
கொள்கையற்றவர்களாகவும், கோமாளிகளாகவும், பரிதாபத்திற்கு உரியவர்களாகவும் தோற்றும்..!
இது தான் நிஜம்..! நிஜ முகங்கள் தொடர்ந்து
மாறிக்கொண்டே இருக்கும்..! உண்மைகளும் அப்படித்தான்..! நிலைத்த கொள்கையுடன் இருக்க
வேண்டும் என்றால், அனைத்தின் இயக்கத்தையும் ஒரு புள்ளியில் நிறுத்திவிட்டுத்தான் சொல்ல
வேண்டும். உலகமே சார்பு இயக்கத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது..! பூமி தன்னைத்தானே சுற்றுகின்றது..! அதுமாத்திரமன்றி சூரியனையும் சுற்றுகின்றது..! கோள்களும்
சுற்றுகின்றன..! நட்சத்திரங்களும் சுற்றுகின்றன..! அனைத்தும் நிலைத்து இருக்காமல் மாறிக்கொண்டிருக்கின்றன..!
இதில் நீண்டகாலத்திற்கு ஒரு நிலையான கொள்கையுடன் இருப்பது என்பது முடியாத காரியம். ஆகவே உண்மை பேசுபவனாக இருந்தால், நேரத்திற்கு ஒன்று
சொல்வது போல் இருப்பதைத் தவிர்க்க முடியாது.
5 மணி என்பதை 4 மணி தாண்டியதில் இருந்து 6 மணியைத் தொடும் வரை வேண்டும் என்றால் நீடித்துச் சொல்ல முடியும்..!
ஒரு குறித்த கணத்தில் 5 மணி என்பது மாறிவிடும்..! இந்த வாழ்க்கை அப்படியானது தான்..!
உண்மை பேசுபவர்களின் செயற்பாடுகளில் பல மாற்றங்கள் அடிக்கடி தெரியும்..! அதனை அறிவுக்கண்கொண்டு
பார்த்தால், அதன் உண்மை நிலை புரியும்..! ஆனால் ஒரு உண்மை உரைப்பானை, பின்பற்றுபவர்களுக்கு
அது கடினமாக இருக்கும். அவரின் செயற்பாடுகள் நேரத்தோடு மாறிக்கொண்டிருக்கும்..!
எமது யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக, மக்களால் தெரிவுசெய்து
அனுப்பப்பட்ட அர்சுனாவின் செயற்பாடுகள் பலருக்கு வேடிக்கையாகவும், கேலிக்கு உரியதாகவும்
தோன்றுவதற்கு இந்தச்சூழலே காரணம்..!
பாராளுமன்றத்திலும் அவர் கமெராவுடன் நிற்பது, அவரின் உண்மையைக்காட்டுகின்றது..!
நேரம் மாற மாற முகமூடிகள் கழரும்..! தொடர்ந்து அவதானித்தால் ஒவ்வொருவருடைய உண்மைநிலைகளும்
புரியும்..!
உண்மை உரைப்பான் கோமாளி போல் தெரிந்தாலும், சூழல் மாற்றங்களை
நன்றாக அவதானித்தால், கோமாளிக்குள், ஒரு நாயகன் இருப்பது வெளிப்படும்..!
ஆ.கெ.கோகிலன்
24-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக