புயலும் மழையும்..!

 


கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்குப்பகுதிகளிலும், ஏனைய சில பகுதிகளிலும் வடகீழ் பருவபெயர்ச்சி காற்றால் கிடைக்கக்கூடிய மழை தொடருகின்றது. அங்காங்கே வெள்ளப்பெருக்குகளும், உயிர்சேதங்களும், உடமைச்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.  இம்முறை நான் திருகோணமலை வரும்போதே பலர் சொன்னார்கள் லீவை எடுத்துவிட்டு வீட்டில் நிற்கச்சொல்லி...! நான்  இந்த வருட ஆரம்பத்திலே நிறைய லீவுகள் எடுத்ததால் தற்போது அமைய லீவுகள் முடிந்துவிட்டன. மருத்துவ லீவுகள் சில இருக்கின்றன. வருத்தங்கள் வரும்போது எடுப்பதற்கே அவை இருக்கின்றன. லியூ (Lieu) லீவுகள் சில இருக்கின்றன. இந்த வருடம் முடியும் வரை அந்த ஒன்று இரண்டு லீவுகளை வைத்துத் தான் சமாளிக்க வேண்டும்.  அதுமாத்திரமன்றி, நான் பொறுப்பெடுத்த பாடத்திட்டங்களை  முற்றாக முடிக்கும் வரை எனக்கு லீவு எடுக்கப் பிடிக்காது. நானும் இன்னும் சில பகுதிகளை முடிக்க வேண்டும். எனவே தான் இந்த மழைகாலத்திலும் வந்து நிற்கின்றேன். ஆனால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழையாலும், அதனால் வரும் பாதிப்புக்களாலும் பல மாணவர்கள் வருவதில்லை. பல ஊழியர்களே மருத்துவலீவைப் பெற்றுக்கொண்டு நிற்கின்றார்கள். ஆகவே எனது சேவை, இங்கு தற்சமயம் தேவையாக இருக்கின்றது.

 

எமது நிலைகள் எப்படியிருந்தாலும், கால நிலைகள் பற்றிய ஊடகங்களின் அறிக்கைகள் நன்மை அளிப்பதாகவா அல்லது பயமுறுத்துவதாகவா இருக்கின்றது எனப்பார்த்தால், பல இந்திய ஊடகங்கள் கணினி உதவி வானிலைப்படங்களை வைத்துக்கொண்டு பல கணிப்பீடுகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். அவற்றில் உண்மையில்லாமல் இல்லை. இருந்தாலும் இப்படிச்சொல்வதால்,  பலருக்கு அச்சமான சூழலே கண்ணுக்குத் தெரிகின்றது..!

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தான் அதிக மழைவரும். இதற்கு என்ன விஞ்ஞான பூர்வக் காரணங்கள் இருந்தாலும் நான் அறிந்த காலத்தில் இருந்தே இதே சூழல் தான்..! மாரி என்றால் மழை தான்..! அது வேணும் என்றால்  சற்று முன்னப் பின்ன இருக்கலாம். இது தான் எனது அவதானமும், அதற்குப் பின்னாலுள்ள புள்ளிவிபரவியலின் போக்குகளும்..!

எனது மனைவி, பிள்ளைகள், தாய்  ஆகிய அனைவர் வீடுகளிலும் மழை தான்..! எங்கும் வெள்ளம் தான்..!

ஒரு வருடத்திலுள்ள மாதங்களில் இந்த மாதத்தில்  தான் ஓரளவு மழையே வருகின்றது. இந்த மழைதான் அடுத்த வருட மழைகாலம் வரும்வரை ஏதோவோர் வகையில் பங்கிட வேண்டும். இந்த மழையினூடாகப் பல ஆக்கங்களும், அழிவுகளும் ஏற்பட்டுத்தான் ஆகின்றன..! அதன் உண்மை விபரம் இயற்கைக்கு மட்டுமே வெளிச்சம்.

நான் இருக்கும் வீட்டின் அருகில் ஒரு புதுவீடு கட்டி ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகப்போகின்றது. இந்தக்காலங்கில் நான் மட்டுமே அந்த வீட்டில் தங்கினேன்..! பழைய வீட்டை விட்டு வெளியே வர மாமா, மாமிக்கோ, மனைவி, பிள்ளைகளுக்கோ விருப்பம் குறைவு..! நான் தனியாகவே, அந்த இரண்டு வீட்டையும் கூட்டித்துடைச்சு களைச்சுப்போனேன். ஒரு கட்டத்தில் எனக்கு நரம்பு வருத்தம் வர, மூத்தமகளிடம் ஒரு வீட்டைத் தனியாகப் பார்க்கச் சொன்னேன். அவரும் தன்னால் இயன்றதைச் செய்தார்.  தற்போது இடமாற்றம் வந்தது..! உடனே இரண்டாவது மகளிடம், மேல் வீட்டைப் பார்க்கச் சொன்னேன். அவளும் தன்னால் இயன்ற அளவு பார்க்கின்றாள்.  இப்போது மனைவியும், மாமியும் பழைய வீட்டைவிட்டு கொஞ்ச நேரமாவது புதிய வீட்டிற்கு வருகின்றார்கள்.

பழைய வீட்டில்,  200 வருடப்பழைமையான பகுதிகள், 100 வருடப்பழமையாக பகுதிகள், 50 வருடப்பழமையான பகுதிகள் என மூன்று பிரிவுகள் உண்டு. இனி அதற்கு ஏற்ப அவற்றிற்கு ஓய்வு வழங்கவேண்டிய தேவையும் உண்டு.

தற்போது தான் அந்த எண்ணத்திற்கு எனது மொத்தக் குடும்பத்தினரும் வருகின்றார்கள். எது எப்ப நடக்க வேண்டுமோ, அது அப்போது தான் நடக்கும். இது தான் எனது நிலைப்பாடு. தற்போது அதற்கான காலம் கனிந்து வருகின்றது. சிக்கலான  சூழல்கள் மிக எளிமையாக அகல்கின்றன..! என்றும்  நன்றி வழமைபோல் இயற்கைக்கும் இறைவனுக்குமே..!

 

புதிய அரசாங்கம் தேசியத்தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதித்ததும், மாவீரர் நினைவில்லங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.

நல்ல மாற்றங்கள்..! மக்களின் மனங்களை வென்றால் தான், ஒரு நிறைவான நிம்மதியான ஆட்சியை, அரசால் நடாத்த முடியும். சட்டங்களையும், அதிகாரங்களையும், ஆணவத்தையும் வைத்துக்கொண்டு, மக்களை வாங்க முடியாது.  எல்லாமே மக்களுக்காகத் தான்..! அது தான் உண்மையான ஜனநாயகம்.  மக்கள் நலமே..! மகேசன் நலம் மாத்திரமன்றி நாட்டை ஆள்பவனின் நலமும் கூட..!

 

ஆ.கெ.கோகிலன்

27-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!