கருவாட்டுத் தத்துவம்..!
எமது மாணவர்களின் வரவுகள் குறைந்துள்ளதால், அவர்களது பரீட்சையில் நல்ல
மதிப்பெண்களைப் பெறவும், குறிப்பாக அவர்களைச்
சித்தியடையச்செய்யும் முயற்சியாக கடந்த கால
வினாக்களுக்கு விடைகளைத் தேடி எழுதவும், பின்னர் அவற்றில் இருந்து வாய்மொழி மூலமாக
பரீட்சைகள் நடாத்தப்படவும் கடந்த இரண்டு நாட்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த மாதிரியான
செயற்பாடுகளைச் செய்வது உண்மையில் கடினம் என்றாலும், கஷ்டப்பட்டுப் படிக்கவரும் மாணவர்களுக்கு,
இடையில் ஏற்படும் எதிர்பாராத சூழல்களால் தமது போதிய வரவுகளைப் பெறாமலும், படங்களைக்
கற்காமலும், ஒப்படைகளைச் செய்யாமலும் விடுபடுவதால், அவர்களுக்கு காலத்தை இழக்கவேண்டிய
நிலை ஏற்படுகின்றது..!
அவ்வாறான சூழல்களைக் குறைக்க மேற்கொண்ட முயற்சியை இன்று ஓரளவிற்கு
நிறைவேற்றியது, சிறிய ஒரு திருப்தி மனதிற்குள் ஏற்பட்டது..!
இவ்வாறாக அலுவலகச் சூழல் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு பாடல் நினைவிற்கு
வந்தது. அது “மீன் செத்தால் கருவாடு, நீ செத்தால்
சுடுகாடு கண்ணதாசன் சொன்னதன்று..!”
சரி, தலைப்பிற்கு வருகின்றேன். “மீன் செத்தால் கருவாடு, மனிதன் செத்தால்
சுடுகாடு..!” என்று கண்ணதாசன் சொன்னதாக வைரமுத்துவின்
பாடல் ஒன்று உள்ளது..!
இறைவனின் படைப்பில் எதனையும் அவர் விரயப்படுத்தவில்லை..! மனிதன் செத்தால்,
அதன் பின்னர் அவனது பிணத்தை எரித்தால், யாருக்குப்
பயனுண்டு..! வேண்டும் என்றால் சாம்பலாக நெற்றியில் பூசிக்கொள்ளலாம். பொதுவாகப் பிணத்தை
எரித்த பின்னர் அதிலுள்ள வெள்ளையாகத் தெரியும் எலும்புப்பகுதிகளை அள்ளி ஒரு
மண் பானையில் போட்டு அவற்றை அஸ்தியாகவும்,
ஏனையவை சுடலையிலுள்ள பிரபஞ்ச கூறுகளுடனும் கலக்கின்றன. அதாவது நிலம், காற்று, நீர்,
ஆகாயம், நெருப்பு என்பவற்றுடன் இணைகின்றன..!
ஆனால், எரிக்காமல் அந்த பிணத்தைப் புதைத்தால், எத்தனையோ உயிரினங்கள்
உண்ணும். எத்தனையோ உயிரினங்களுக்கு ஆகாரம் கிடைக்கும். இயற்கையே மகிழும்..! அனைத்தையும்
அடைய ஆசைப்படும் மனிதன், தனது செத்த உடலைக்கூட மற்ற உயிர்களுக்கு அளிக்கத்தயாரில்லாத கொள்கைகளை யார் பரப்பினாலும், அது சைவ சமயத்திற்கும்
இந்து சமயத்திற்கும் இழுக்காகிவிடும்.
மீன் செத்தால் கருவாடாக மனிதனுக்குப் பயன்படுவது மாதிரி மனிதன் செத்தாலும் கருவாடாகப்
போட்டு, தின்னக்கூடிய மற்றைய விலங்குகளுக்கு கொடுக்கலாம். நான் நினைக்கின்றேன் அப்படித்தான் இயற்கை மனிதர்களைப்
படைத்திருக்கும் என்று..! ஆனால் மனிதர்களின் அறிவாலும், ஆசைகளாலும், ஏற்படுத்திய கொள்கைகளாலும்
இயற்கைக்கு முரணாக நடக்க முற்பட்டானோ தெரியவில்லை..!
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தாலே உயிரோடு இருக்கும் போதே நுளம்புகளும்,
பேன்களும், மூட்டைப்பூச்சிகளும், சில விலங்குகளும் மனிதனைக் கடித்து தமது பசியைப் போக்குகின்றன.
அப்படி நிலைமை இருக்கும் போது, அவன் இறந்தால் இன்னும் எத்தனை உயிர்களுக்கு உணவாக மனிதன்
மாறுவான். ஆக, மனிதனையும் ஏனைய உயிர்களுக்குப் பயனுள்ளவாறே இயற்கை படைத்துள்ளது..!
ஆக, மீன் மாத்திரம் பயனுள்ளது என்ற மாதிரியும் மனிதன் பயனில்லாத மாதிரியும்
சொல்வது, எமது அறியாமையால் என்றே எடுத்துக்கொள்ள
வேண்டும்..!
நான் நினைக்கின்றேன், வைரமுத்துவும், கண்ணதாசணும் சொன்னது “மீன்களைப்
பாராட்டவும், மனிதர்களைத் தூற்றவும் அல்ல, மாறாக இறந்தாலும் மனிதனும் பயன்படலாம் என்ற
உண்மையை உணர்த்துவதற்காக..!”
மனித இறைச்சியை மனிதன் உண்ணாவிட்டாலும், அதனை உண்ணக்கூடிய விலங்குகளை இறைவன் படைத்ததன் நோக்கம், நாம் ஏனைய விலங்குகளை உண்ணும்போது, அந்த
விலங்குகள் நம்மை உண்ண உரிமை உண்டு என்பதை
உணர்த்துவதற்காகத் தான் என்று நினைக்கின்றேன்..!
ஆனால் உலகில் மனிதனை மனிதன் உண்ணும் சில பகுதிகளும் உண்டு..! ஆனால்
அவர்கள் என்றும் இயற்கையுடனே இணைந்து வாழ்கின்றார்கள். அவர்கள், தாங்கள் விலங்குகள்
என்பதை என்றும் ஒத்துக்கொள்கின்றார்கள்..! மனிதன் மட்டும் பெற்ற அறிவால் நடிக்கின்றான்.
சில சமயம், அந்த விலங்குகள் எட்டிப்பார்க்கும் போது ஜெயிலுக்குள் கிடக்கின்றான்.
ஆ.கெ.கோகிலன்
10-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக