குரங்குப் பொம்மை..!

 

மஹாராஜா என்ற ஒரு சிறந்த படத்தைக்கொடுத்த இயக்குனரின் முதல் படம் என்று கண்டறந்து பார்த்த திரைப்படம் தான் குரங்குப்பொம்மை.

 சில நல்ல படங்களை ஏன் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கவலை வருகின்றது.  படம் என்பதைத்தாண்டி ஒரு பாடமாக இந்தப்படத்தைப் பார்க்கத் தோன்றுகின்றது..!

இந்தப்படத்தின் கதை என்று பார்த்தால் ஒரு அப்பாவியான நேர்மையான நல்ல மனிதன், கடத்தல்கள் செய்யும் கொலைகார முதலாளியிடம் வேலைசெய்கின்றார். சிறுவயதில் இருந்தே இருவரும் நண்பர்கள் என்பதால், அந்த முதலாளிக்கு தனது நண்பர் மேல் அதீத நம்பிக்கையுண்டு.

அதேவேளை, அந்த நல்ல நண்பருக்கு மனைவியும் ஒரு பெரிய மகனும், ஒரு சிறுமியும் இருக்கின்றார்கள். மகனுக்குப் பொண்ணுப்பார்க்கும் படலம்  தொடங்கிய நிலையில், மகனும் பார்த்த ஒரு பெண்ணை நிச்சயப்படுத்திக்கொள்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில், குரங்குப்படம் போட்ட பையை, ஒரு வயதானவரிடம் இருந்து  ஒரு திருடன் பறித்துச் செல்ல, அதை, அந்த நேர்மையான பெரியவரின்  மகன், மீட்டெடுத்து உரியவரிடம் கொடுக்க முனைய, அந்தப்பையில் அவனது தந்தையில் துண்டாக்கப்பட்ட உடல்கள்  இருப்பதை அறிந்த தனயன், பணத்திற்காக தனது தந்தையை, கொலை செய்த மனிதனைத் தேடிக்கண்டறிந்து, அவனைக் கொலைசெய்யாமல் அவனது கை மற்றும் கால்களை வெட்டி கூவத்திற்குள் எறிகின்றான்..!

பணத்திற்காகக் கொலைசெய்தவன், தற்போது பணம் கிடைத்தும், தனது குடும்பமே தன்னை மதிப்பதில்லை என்பதுடன், அவனது மனைவி, வேறு ஒருவருடன் தொடர்பை வைத்துக்கொண்டு, அவனது குடும்ப கௌரவத்தையே காலியாக்குகின்றாள்..!

பிள்ளைகளும் அவனை மதிப்பதில்லை..!  கை, கால்கள் இல்லாமல் மரணம் வரை தனக்குத் தண்டனை கிடைத்ததை நினைத்து அழுதுகொண்டே இருக்கின்றான்.

இடையில் கொலைகார முதலாளியும், அவனது கூட்டாளிகளும், முதலாளியின் நண்பன் மாண்ட இடத்திலே மாண்டார்கள்..!

இந்தப்படத்தின் கதை என்னவென்றால், உழைத்து, அதற்கேற்ப நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழச்சொல்கின்றது. சும்மா பணத்திற்கு ஆசைப்பட்டு, கடைசியில் கைகால்கள் இன்றி நடுரோட்டில் விட்டால் எப்படியிருக்கும் என்று யோசியுங்கள்..?

சந்தர்ப்பங்களைச் சாதகமாக்கி, சாதனை செய்யலாம் என்று நினைப்பது, சாணக்கியத்தனம் என்றாலும், கடைசியில் சாகத்தான் வேண்டும்.

நடிகர்களின் நடிப்பும், தொழில்நுட்பங்களும், புதிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனின் இயக்கமும் சிறப்பு. அனைவரும் பார்த்து, பாடம் படிக்க வேண்டிய படம்.

 


ஆ.கெ.கோகிலன்

16-11-2024.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!