எனது தீர்க்க தரிசனம்..!

 

 


இந்த உலகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் இப்படித்தான் இருக்கும்..! எல்லா உயிர்களிடையேயும் சண்டை சச்சரவுகள் வரும்..! பின்னர் சமாதானங்களும் வரலாம்.  அழிவுகளும் அதனால் ஆங்காங்கே வரும்.  இதே மாதிரியான சூழல்கள் திரும்பத்திரும்ப வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் வருவது போல் வந்து வந்து போகும்.

ஆக்கங்களும் வரும். அழிவுகளும் வரும். யுத்தங்களும் வரும். பின்னர் சமாதானங்களும் வரும்.   இது தான்,  இரவும் பகலும் போல் வாழ்க்கை முழுவதிலும்  நடக்கப்போகின்றது..!

 



பிரான்ஸ்ஸிலுள்ள செயின்ட் ரெமி  டீ மகாணத்தில் பிறந்த மிகப்பெரிய தீர்க்கதரிசி தான், மைக்கேல் டி நோஸ்ரெடம் (Michel de Nostredame) என்பவர். இவரின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் உலகில் நீண்ட காலமாக நடந்துவருகின்றன என்று சொல்லப்படுகின்றது..!


இவர்   டிசெம்பர்  மாதம் 1503 இல் பிறந்து,  62 வருடங்கள் வாழ்ந்து  யூலை மாதம் 1566 இல் மறைந்துவிட்டார்..!  ஆனால்,  இவர் சொன்ன விடயங்கள் எல்லாம் நடந்துவருவதால் இவரது தீர்க்க தரிசனத்தைப் பைபிளுக்கு அடுத்து, பல ஐரோப்பியர்கள் நம்புகின்றார்கள்..!

                                          


இதேபோல், கடந்த நூற்றாண்டில்,  வட மசடோனியா (North Macedonia) என்ற நாட்டிலுள்ள ஸ்ருமிகா (Strumica) என்ற பகுதியில் பிறந்தவர்  தான், கண் தெரியாத, உலகின்  மிகப்பெரிய இன்னோர் தீர்க்கதரிசி என்று பெயர் எடுத்துள்ள பாபா வங்கா (Baba Vanga)  என்பவராவார். இவர் இயற்பெயர்  வங்கேலிய பண்டேவா குஸ்தெரோவா (Vangeliya Pandeva Gushterova) என்பதாகும். இவர்  3ம் திகதி ஒக்டோபர் மாதம் 1911இல் பிறந்து, 11ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1996 இல் இவரது 82 ஆவது வயதில் மறைந்தார்..!  இவரின்  தீர்க்க தரிசனங்களும் உலகின் கவனத்தை தற்போது பெறுகின்றன..!



அண்மையில், சிரியா நாட்டில் நடக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு படைகளுக்குமான யுத்தத்தில் பெரும் அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன..! இந்நாடு ரஷ்யா, ஈரான் போன்ற வேறு நாடுகளின்  உதவியைக் கோருவரால், அங்கு ஏற்படும் இறுதி யுத்தத்தோடு, மூன்றாம் உலகப்போரே  தோன்றும் எனச் சொல்லியுள்ளார் இந்தத் தீர்க்கதரிசி..!



என்னைப்பொறுத்தவரை  இந்த உலகமே, ஆதிகாலம் தொடக்கம் எப்போதும் இவ்வாறு தான் இருந்துகொண்டே வருகின்றது. மரணம் என்ற ஒன்று இருக்கும் வரை,  அழிவுகளுக்கும் போர்களுக்கும் முடிவே  கிடையாது..!  வேண்டும் என்றால், அவற்றைக் குறைக்கலாம். அதற்கு அனைவரும் அன்பைப் பரப்பவும், சகிப்புத்தன்மையைக் கூட்டவும், ஆசைகளைக் குறைக்கவும் பழகவேண்டும். அத்துடன் எவ்வளவு தூரம் விட்டுக்கொடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விட்டுக்கொடுக்கவும் தயங்கக்கூடாது. அதனால் ஒன்றும் கெட்டுப்போகாது. இவ்வாறு இருந்தால், நிச்சயம் உலகம் கொஞ்ச நாட்களாவது நிம்மதியாக இருக்கும்.  ஆனால், மரணம் மட்டும் எப்படியும் வந்தேயாகும்.

நான் சொன்ன வகையில் இருக்க முடியாது  என்றால், உங்கள் விருப்பம் போல் வாழுங்கள். ஆணவத்தை நன்றாகக் காட்டுங்கள். உங்கள் பலத்தையும், பதவியையும், ஏனைய வளங்களையும் வைத்துக்கொண்டு, எதனையும் பெற்று சந்தோசமாக வாழுங்கள். உங்களால், பலர் அழிவார்கள்..! உங்கள் திருப்தியே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றால், அவ்வாறே செய்யுங்கள். சண்டைகள், அழிவுகள், துயரங்கள் எல்லாம் தொடரும்.  இருந்தாலும், உங்களுக்கும் மரணங்கள் வந்தே தீரும்.

இந்த இரண்டு விதமான வாழ்க்கையில், எது நல்லது என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். உண்மையில் இந்த இரண்டும், உலகில் ஒரு நாளும் முழுமையாக நடக்காது..! அதுவரை இந்த  உலகம் இருந்தேயாகவேண்டும். அது தான் இயற்கை விதி. மரணமும் வரும்..! பிறப்பும் வரும்..! அது தான் இயற்கை..!

தர்க்கத்திற்காக, எனது தீர்க்க தரிசனம் என்னவென்றால் “இந்த உலகம் ஒரு நாளும் அழியாது..! ” என்பது தான்.   “இந்த உலகை யாராலும் அழிக்கவும் முடியாது..!”  எண்ணங்களிலும், கனவுகளிலும், கற்பனைகளிலும், புத்தகங்களிலும், காட்சி மற்றும் ஒலி ஊடகங்களிலும் வேண்டும் என்றால் அழிவதாகக்  கருதலாம்.

 ஆனால் அது உண்மையல்ல..! நிலைகள் மாத்திரமே  இங்கு மாறியிருக்கும். ஆனால் அனைத்தும் இங்கேயே இருக்கும்..! 

இன்னொரு வழியில், நான் அடித்துச்சொல்கின்றேன் “உலகம் அழியாது..!” என்று..!

யாராவது “ உலகம் அழியும்..!” என்று.  அடித்துச் சொல்ல முடியுமா..?    அப்படி உலகம் அழிந்தால், என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கவோ அல்லது கேள்விகள் கேட்கவோ யாராலும் முடியாது..!

ஆனால் “அழியவில்லை” என்றால் என்னைப்போல், பலர் இந்தப்பூமியில் இருப்பார்கள்..!  “நிச்சயம்  அழியும்” என்று சொன்னவரிடம்  அவரது கூற்றின் உண்மைத்தன்மை பற்றி  நிறையக் கேள்விகள் கேட்பார்கள்..! 

அடித்துச்சொல்கின்றேன்  “இந்த உலகம் அழியாது..!”  நிம்மதியாக வாழுங்கள்..! ஆனால் மரணம் மட்டும் அனைவருக்கும் நிச்சயம். அது ஒரு நிலைமாற்றம் மட்டுமே..!

 


ஆ.கெ.கோகிலன்

04-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!