புலமைப்பரிசு..!
நான், பெரியவர்கள் மாதிரி சில வாக்குகள் கொடுத்துவிட்டு, எனது மறதி காரணமாக அவற்றை நிறைவேற்றாமல் விடுவதுண்டு..! பொதுவாக மறதி வராமல் இருக்க, சிறு குறிப்புக்கள் எழுதி வைப்பதுண்டு. சில சமயம் அதையும் சேர்த்து மறந்துவிடுவேன்..!
மறதி பெரும் குறையாக இருந்தாலும், அதனையும் நான் நன்மையாக
எடுத்துக்கொள்கின்றேன்..! என்னைக் காயப்படுத்தும் அளவிற்குத் துரோகங்கள், ஏமாற்றுக்கள்,
களவுகள் போன்றவற்றைச் செய்துவிட்டு என்னுடன் நல்லவர்கள் போல் பழகும் மக்களைப் பற்றித்
தெரிந்தாலும், இந்த எண்ணம் காரணமாக அவர்களை மன்னித்துவிடுவேன். மறதியால் விரோதிகள்
குறைவு..! நல்ல ஞாபகத்துடன் இருந்தால், இருக்குமிடம் எல்லாம் பதட்டத்துடனே இருக்க வேண்டும்.
எனது தற்போதைய நிலைக்கு அவை ஒத்துவராது.
மறதியால் தம்பியின் மகனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நீண்ட காலம் எடுத்துவிட்டேன். அவர் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து, எமக்கும், அவரது கிராமப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததால் ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்க, எனக்கு முந்திப் பலர், பல உதவிகளைச் செய்துவிட்டார்கள்..! சரி இருந்தாலும், யாரும் அவரையும் அவரது அக்காவையும் அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாண நகரிலுள்ள ஒரு பிரபல்யமான பீட்ஷா கடையில் பீட்ஷா வாங்கிக்கொடுக்கவில்லை என்பதை அறிந்தேன். கஷ்டமான சூழலில் இருப்பவர்களுக்கு, ஆடம்பரங்களை காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அது அவர்களின் வாழ்க்கைக்குத் தற்போது தேவையற்றது. இன்னொன்று இப்படியானவற்றைக் காட்டிவிட்டால் பின்னாட்களில், இதே பழக்கங்கள் அவர்களை வேறுவடிவங்களில் மாற்றிவிடும்..! பீட்ஷா வாங்கி உண்பது பெரிய விடயம் கிடையாது. சிலருக்கு அதனை உணவாகவே ஏற்றுக்கொள்ள முடியாது..! அதைவிட ஆட்டு இறைச்சியுடன் சோறு சாப்பிடுவது மேல் என்பார்கள்..! எனவே வாக்கு நினைவிற்கு வந்தும், அதனைப் பல மாதங்களாகத் தவிர்த்து வந்தேன்.
ஆனால் அண்மையில் பெய்த பெருமழையும், வானிலை அறிக்கைகளும்,
சிலரது கருத்துக்கணிப்புக்களும் மக்களை சற்று பீதியடைய வைத்திருந்தது..! “2025ஐ இலங்கையிலுள்ள
மக்கள் காணமுடியுமா..?” ஆனால், நான் நம்புகின்றேன் நிச்சயம் காணமுடியும்.
இருந்தாலும் சின்னப்பிள்ளைகளுக்கு ஆசைகளைத் தூண்டிவிட்டு
இழுத்தடிப்பது, நியாயமாகத் தோன்றவில்லை.
திருவள்ளுவர் கூட இதனைப்பற்றி நன்றி இல் செல்வம் என்ற அதிகாரத்தில்
இவ்வாறு கூறியுள்ளார்.
”ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல்
இயல்புஅலா தான்..”
ஒவ்வொரு நாளும் ஒரு குறளைப் படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.
இன்று இதனைப் படித்ததும், சொன்ன வாக்கைக் காக்க நினைத்தேன். தம்பியின் பிள்ளைகளையும்,
எனது இரண்டாவது மகளையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல உணவுக்கடையில் மதிய
உணவை இத்தாலி நாட்டின் உணவான பீட்ஷாவைக்கொண்டு முடித்தேன். மேலும் அதே உணவுகளைப் பார்சலாக்கிக்கொண்டு
தம்பி குடும்பத்திற்கும், மனைவி குடும்பத்திற்கும் கொடுத்து குறித்த வாக்கை நிறைவு
செய்தேன். வயிறும் சுவையான உணவைக் கண்டது..!
மனதும் வாக்கைப் பேணியதால் நிறைவு கொண்டது.
ஆ.கெ.கோகிலன்
22-12-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக