இதிகாச நாயகர்கள்..!

 



அண்மையில் நடந்த யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்சுனா பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார்..! அவர் ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியதால் தான் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு விஸ்வரூபம் பெற்றுள்ளார்..! இன்னும் கவனத்துடனும், உண்மையுடனும் நின்று, மேலும் நல்ல நாட்டிற்குத் தேவையான விடயங்களை ஆற்ற வேண்டும் என்று கேட்பதுடன், சான்றுகள் போதியளவு கிடைக்காவிட்டால், யாராவது சிலரது கருத்துக்களை வைத்துக்கொண்டு, அது தான் உண்மை என்றும் வரக்கூடாது. இந்தப்பூமியில் வல்லவனுக்கு வல்லவன் எப்போதுமே தோன்றுவார்கள்..! உண்மை பேசுவதிலும் மிக மிக உண்மையானவர்களும் வருவார்கள்..! நல்லவர்களிலும் இன்னும் இன்னும் எல்லா விதங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லவர்களும் வந்துகொண்டே இருப்பார்கள்..! இது தான் உண்மை. சில நூறு ஆண்டுகளில் இங்கு தடம் பதித்தவர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான்..! ராஜ ராஜ சோழனைத் தவிர மற்றைய எல்லா அரசர்களும் மக்கள்  மனங்களில் நீண்ட காலத்திற்கு இடம்பெறவில்லை..! ஆனால் எத்தனையோ நல்ல மனிதர்கள், ஆட்சியாளர்கள், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் இந்தப்பூமியில் இருந்துள்ளார்கள்..!

தகவல் தொழில் நுட்பம் என்பது கடந்த 50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது..! இந்தச் சூழலில் பொய்யர்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது..! எப்படியும் அவர்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துகொண்டே இருக்கும்..! சும்மா வாயை வைத்துக்கொண்டு, அது தெரியும் இது தெரியும் என்று கதைப்பதில் பலனில்லை..!

சரியான சான்றுகளுடன், உண்மையான நியாயமான விடயங்களை சாகாமல் பாதுகாப்பது அனைத்து நல்லவர்களதும் கடமை..!

அரசை ஏமாற்றுவது, மக்களை ஏமாற்றுவது, நட்புக்களை ஏமாற்றுவது, குடும்பத்தை ஏமாற்றவது, உறவுகளை ஏமாற்றுவது என்பது பிழைப்பு வாதம். கொஞ்ச நாட்கள் தான் இவை நீடிக்கும். சாயம்  போக, உண்மை வெளிப்படும்..!

ஒவ்வொரு அரசியல் வாதிக்குப்பின்னால் இருப்பவர்கள் உண்மையில் நல்லவர்களா..? ஏதாவது தமது தேவையை அவர்களூடாக பூர்த்திசெய்ய வந்துள்ளார்களா என்பதைத் தெளிவாக அறிய வேண்டும்..!   

 

யாழ் மக்கள் பிரதிநிதி என்றால் யாழ்ப்பாணத்திலுள்ள மக்களில், பெரும்பாலான மக்களின் வாக்குகளை அள்ள வேண்டும். மனங்களைப் பிடிக்க வேண்டும். அதற்கு காலமும் வேண்டும். அதனை நோக்கி, நல்லதைச் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரவேண்டும்.

அதேவேளை, அரச திணைக்களங்களிலும் நல்லதைச் செய்யும் அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவர்களிடம் குறைகள் இருந்தால், சுட்டிக்காட்டுங்கள் தவறு இல்லை. ஆனால், யாரும் சில மக்களின் கருத்துக்களை வைத்துக்கொண்டு உண்மையான முடிவுக்கு வரமுடியாது. ஆதாரங்கள் என்பது மிக மிக முக்கியம்.

யாழிலும், கிளிநொச்சியிலும் திக்கம் வடிசாலை தொடர்பான பிரச்சனைகள் எழ, அதனை மூடவேண்டாம். மக்களுக்கு அதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அர்சுனா எப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினரானரோ அதே மாதிரி நல்ல மனிதர்கள் பலர் இனிவரும் காலங்களில் வெளிவர முடியும்..!

தற்போது விநாயகமூர்த்தி சகாதேவன் என்பவர் சில முறைப்பாடுகளை ஊடகங்களில் கொடுத்துள்ளார்..! பனை அபிவிருத்தி தொடர்பாகப் பல விடயங்களைப் பேசியுள்ளார்..! அவராலும் தமிழ் மக்களுக்குத் தேவையான நல்ல விடயங்களையும், நாட்டிற்குப் பயனுள்ள விடயங்களையும் கொண்டுவர முடியும். அவர் பக்கத்தில் குற்றம் இருந்தால், அதனை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். சிலரது வார்த்தைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு கதைக்க முடியாது. பல் குரல் திறமையாளர்களால், குறித்த ஒருவர் போல் கதைக்க முடியும்..! பதிவு செய்ய முடியும்..! AI தொழில்நுட்பத்தினூடாகவும் அதனைச் செய்ய முடியும். ஆகவே ஆதாரங்கள் தான் அதிகம் தேவை. குரல்பதிவுகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, எல்லாரையும் தவறாகச் சொல்ல முடியாது. ஏன் என்றால், அந்தக்குரலுக்கு உண்மையான சொந்தக்காரன் யார் என்பதைச் சோதிக்க நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும்..!

ஒத்த முனைவுகள் ஒன்றையொன்று தள்ளும் என்று விஞ்ஞானத்தில் படித்துள்ளோம். இரண்டு உண்மை பேசுபவர்கள் சந்திக்கும் போது, சில வேளைகளில் இவ்வாறான சிக்கல்நிலை தோன்றும்..! ஆனால் நல்லவர்கள், உண்மையானவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், உலகத்தைப்புரிந்தவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒருவர் சரியானதை வெளிக்கொண்டுவரும் போது, அதனைச் செவிசாய்து, அதில் ஏதாவது உண்மையான விடயங்களைத் தவறவிட்டுள்ளாரா என்பதை உண்னிப்பாக அவதானித்து, அவ்வாறு நடந்தால், அந்தவிடயங்களை மற்றவரைக் குழப்பாமல், சபையில் சொல்லலாம். அவை அனைத்தும் உண்மை என்றால், மௌனமாகவே இருக்கலாம். நான் தான் உண்மை கதைக்க வேண்டும். மற்றவர்கள் உண்மை கதைக்கக்கூடாது என்று இந்த உலகில் எங்கும்  சட்டம் கிடையாது..! அடிக்கடி தவறுகள் செய்து, பின்னர் மன்னிப்புக்கேட்பது என்பதும் நல்லவர்களுக்கு அழகல்ல. சரியானதை கதைக்க வேண்டிய இடத்தில் கதைக்க வேண்டும். உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் தான் அதனை வெளிப்படுத்த வேண்டும். உண்மையானவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.  எல்லாவற்றையும் மக்கள் பார்க்கின்றார்கள்..! இயற்கை பார்க்கின்றது..! இறைவன் பார்க்கின்றார்..! பொய்யர்கள்,  நீண்டகாலம் ஏமாற்ற முடியாது..! உண்மை வெளிவந்தேயாகும்..!

வரலாற்றில் அர்சுனனும், சகாதேவனும் சகோதரர்களாகவே பார்த்துள்ளோம்.  இரண்டு பேரும் உண்மையானவர்களே..! தர்மத்தின் பக்கம் நின்றவர்களே..! அர்சுனன் வில்வித்தையில் சிறந்தவனாக இருக்கும்போது, அறிவில் சகாதேவன் சிறந்து இருப்பதாகவே மகாபாரதம் கூறுகின்றது..! இங்கு என்னவென்றால் சகாதேவன் சொல்வதை, அர்சுனனால் ஏற்க முடியவில்லை..! தர்மத்திற்காக இருந்து கொண்டு முரண்படுவதில் அர்த்தம் இல்லை..!    நேர்மையானவர்களுக்கிடையே முரண்பாடுகள் வருகின்றது என்றால் முதலில், இருவரும் அந்த முரண்பாடுகளைத் தீர்த்து, எது சரியோ அதனைப் பொதுவெளியில் விடுங்கள். இல்லை, அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை என்றால், இனியாவது ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..! நாட்டிற்கு நல்லது செய்யும் போது, அதனை யார் செய்தாலும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னார் தான் செய்ய வேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. நேர்மையானவர்கள் ஓரணியாக இருந்து, செயற்பட வேண்டும். இதுவரை காலமும் நடந்த ஊழல்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அரசை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, ஸ்திர நிலையை அடைய வேண்டும். சமத்துவம் மலர வேண்டும். ஆணவப் போக்குகள் அழிய வேண்டும். அன்பு மாத்திரம் எங்கும் பரவவேண்டும். உண்மையான நல்லவர்களின் எண்ணங்கள் இவ்வாறாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

 

ஆ.கெ.கோகிலன்

28-12-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!