போகுமிடம் வெகுதூரமில்லை..!
எனது தங்கையினது சிபாரிசின் பேரில் இந்தப்படத்தைப் பார்த்தேன்.
மிகவும் வித்தியாசமாக படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது..!
அண்மைக்காலங்களில், விமலின் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும்,
அவரது படங்களின் கதைத்தேர்வுகள் நன்றாக இருக்கின்றன. வழமையான நடிகர்களின் சும்மா மசாலாப்படங்களுக்கு
நடுவே மாட்டி, வெளியில் இவரது படங்கள் தெரியவில்லை..! நல்ல படங்களை எப்படியும் வெளியே
கொண்டுவருவது ஊடகங்களின் கடமை. ஆனால், தற்போது இருக்கும் ஊடகங்களும் நியாயமற்ற, ஒரு
பக்க ஊது குழல் போல் தான் தெரிகின்றன..! நியாயமான படங்களை எப்பவும் முன்னிலைப்படுத்த
வேண்டும். அது தான் எல்லோருக்கும் ஆரோக்கியமானது. அதேவேளை தரக்குறைவான, வியாபார நோக்கங்களுக்காக
அரைத்த மாவை அரைக்கும் படங்களைத் தவிர்க்க வேண்டும். அவற்றிற்கு எந்த விமர்சனமும் எழுதக்கூடாது. எதிர்மறை, விமர்சனங்களும் படத்திற்குப் பலம் சேர்க்கும்
வாய்ப்புக்களும் உண்டு..!
இந்தப்படத்தின் கதை, ஒரு வயோதிபர் இறக்க, அவரது இரண்டு தாரப்பிள்ளைகளிடையே
போட்டி போட்டு கொண்டு, யார் இறுதிக்கிரிகையைச்
செய்வது என்ற நிலையில், ஓரிடத்தில் இருந்து, அவரது உடலை மரணவண்டியில் கொண்டுவரும்போது,
நடந்த சில சம்பவங்கள் பெரும் சிக்கலாக மாறுகின்றன. அதேவேளை, பயணத்திற்காக அந்த மரண
ஊர்தியில் வந்த, ஒருவரின் மரணத்தோடு, அங்கு ஏற்பட்ட எல்லாச் சிக்கல்களும்
மறைகின்றன.
இலகுவாகப் படத்தின் கதையைச் சொன்னாலும், அது காட்சிப்படுத்தியவிதம்
உண்மையில் ரசிக்க வைத்தது..! கருணாஸின் நகைச்சுவையில் தொடங்கி, இறுதியில் அவரே கதையின்
நாயகன் அளவிற்கு கதை, அவரைக்கொண்டு சென்றுவிட்டது..!
இறுதியாகப் பிணத்தை, குறித்த இடத்தில் சேர்க்கும்போது விமலுக்குத்
தேவையான பணம் கிடைத்தாலும், வழியில் கண்டவர் குணம், மனத்தை விட்டு அகலாமல் இறுதியூர்வலத்தில்
அவருக்காக விமல் ஆடியது, கண்களைக் குளமாக்கிவிட்டது..!
இந்தப்படத்தை அனைவரும் பொறுமையாக இருந்து பார்த்தால், வாழ்வின்
பல ஏமாளித்தனமான நடவடிக்கைகள் புரியும்..! எவ்வளவோ நல்ல விடயங்களைவிட்டு, நாறல் விடயங்களில்
காலத்தை ஓட்டுகின்றோம். இறைவன் எங்களைப் பார்த்துச் சிரிப்பார் என நம்புகின்றேன்.
படத்தில் பங்கேற்ற அனைவர் நடிப்பும் நன்றாக இருந்தன. அத்துடன்
தொழில்நுட்பங்களும் சிறப்பாக
அமைந்தன.
இந்த அருமையான படத்தைத் தந்தமைக்காக இயக்குனர் மைக்கேல் கே
ராஜாவிற்கு எனது பாராட்டுக்கள்.
ஆ.கெ.கோகிலன்
15-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக